அஞ்சலி-கவிஞர் செழியன்‘இல்லாமல் போன என் தோழனுக்கு’ என்னும் தொகுப்பு ஏலவே வெளிவந்த நிலையில் 1985களில் வெளிவந்த மரணம் தொகுப்பினூடாகவே செழியன் எனக்கு அறிமுகமானார். போராளிகளைத் தாயக மீட்பு போராளிகள் மாற்றுக்கருத்துப் போராளிகள் என உருச்சிதைப்பு செய்யப்படாத காலத்தில் வெளிவந்த இத்தொகுப்பு முக்கியமானது. 1985.05.14இல் அனுராதபுரத்தில் அப்பாவிச் சிங்களப் பொதுமக்கள் கொல்லப்பட்டதைப் புலிப்பேராளிகள் நியாயப்படுத்திய சூழலில் அக்கொலையைக் கண்டித்து குரல் கொடுத்த கவிஞர்களில் ந.சபேசனும் செழியனும் முதன்மையானவர்கள். இது தொடர்பாக உ.சேரனுக்கும் கேணல் திலீபனுக்கும் இடையில் நிகழ்ந்த விவாதங்கள் பிறிதொருவகையில் நோக்கத்தக்கது. இக்கொலைகளைக் கண்டித்து மனிதநேயமிக்க ஆத்மார்த்த கவிஞனாக ‘ஒரு சிங்கள நண்பிக்கு’ எனத் தொடங்கும் கவிதையில் தன் உள்ளார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தினான்.. 
சூரியனும் கொடுமையாய்
சுட்டெரித்தான்
எங்கள் மண்ணும்
அனலாய் தகித்தது
இனம் பிரியாத சோகம்
நெஞ்சில் பரவியது எனத் தெடங்கும் அக்கவிதை தமிழ் சிங்கள உறவுகளின் மகோன்னத நட்பை வெளிப்படுத்துமகிறது. இக்கவிதையானது
மனிதநேயங்களை
மரணித்த மனித உருவங்களை
மனிதத்துவம்
ஓர்நாள் தோற்கடிக்கும் 
என முடியும். தமிழர்கள் செய்த இந்த அநாகரிக செயலை எடுத்துரைக்கும் இக்கவிதை தமிழ் சிங்கள உறவுகளுக்கு பாலமாகவும் அமைகிறது.
இதன்பின் செழியனின் கவிதைகளைத் தேடி வாசிக்கும் ஒருவனானேன். ஒரு நாள் மாலைநேரம் பேராசிரியர் செ.யோகராஜா அவர்களுடன் அவர் வீட்டில் செழியன் பற்றி உரையாடிக்கொண்டிருக்கும் போது நான் கேட்காமலே ‘அதிகாலையைத்தேடி மற்றும் சுகனின் நுகத்தடி நாட்கள்’ தொகுப்புகளின் போட்டோ பிரதிகளைத் தந்துதவினார். அது இன்றும் என்னிடம் பத்திரமாக உள்ளது. 
பௌசர் தனது கடையை கொம்பனியவீதி, கொழும்பு அலரி மாளிகைக்கு பின்னால் என மாற்றி ஈற்றில் கொள்ளுப்பிட்டிக்கு மாத்திய போது அங்கிருந்த றஸ்மியின் துணையோடு ‘ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு ஈரமற்ற மழை’ தொகுப்பு எனக்கு கிடைத்தது.41பக்கங்களில் மூன்றாவது மனிதன் வெளியீடாக அத்தொகுப்பு வெளிவந்தது. ஆனால். செழியனின் கடலை விட்டுப் போன மீன் குஞ்சுகள் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய மு.பொ. ‘ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு’ ஒரு நூலாகவும் ;ஈரமற்ற மழை’ பிறிதொரு தொகுப்பாகவும் எழுதியது செழியனின் தொகுப்புக்கள் குறித்த அறிவின்மையின் வெளிப்பாடு.. இந்நூல் செல்வம் அவர்களின் காலம் வெளியீடாக வெளிவந்தது. காலம் சஞ்சிகையை கொண்டு வருவதில் செழியனுக்கும் பெரும் பங்கு இருந்தது என்பதுவும் இங்கு நினைவு கூரத்தக்கது. கனதியும் துயரமும் நிறைந்த இக்கவிதைகளைக் கடந்து போவது யாருக்கும் எளிதன்று. சத்தியத்தின் சாட்சிகளாகவும் நிதர்சனத்தின் பதிவுகளாகவும் உள்ள இக்கவிதைகளில் கவிஞனின் அப்பளுக்கில்லாத உள்ளத்தை தரிசிக்கலாம். “குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள்’ தொகுப்பு ஒன்றே என்னிடம் கைவசம் இல்லாதது.. அக்குறையை அவருடைய சகல கவிதைகளும் ஒருங்கிணைந்து வந்த கடலை விட்டுப் போன மீன் குஞ்சுகள் தொகுப்பு ஓரளவுக்கு நிறைவு செய்தது எனலாம். 
ஈழத்தின் முன்னணிக் கவிஞராக அறியப்படும் செழியன் யாழ்ப்பாணத்தில் தாயக விடுதலைப் போராளியாக இருந்து பணியாற்றிய காலங்கள் மறக்கமுடியாதவை. அக்காலங்களில் அர்பணிப்பும் துடிப்புமிக்க அரசியல் போராளியாகவும் அவர் விளங்கினார். பாசறைகளில் அவர் எடுக்கும் வகுப்புக்கள் அலாதியானவை என நண்பபர்கள; கூறக் கேட்டிருக்கிறேன். அ.ரவியின் வீடு நெடுந் தூரம் தொகுப்பு இதனை உறுதி செய்கிறது.
கவிஞரும், நாவலாசியரும் எழுத்தாளரும், நாடக்கலைஞருமான செழியன் மனிதநேயமிக்கவராகவும் விளங்கினார். நட்பாலும் அன்பாலும் வாழ்க்கையையும் கவியாக்கி வருபவர் என்னும் செல்வத்தின் கூற்று இதனை மெய்ப்பித்து நிற்கிறது. செழியனின் 'ஒரு மனிதனின் நாட் குறிப்பு' என்ற நாவலைப் படிப்பதற்கு நண்பர் துவாரகன் தந்துதவினார். தனைப் படிப்பதற்கு முன் அந்நாவல் பற்றிய கேள்விச் செவியனாகவே நீண்ட காலம் இருந்தேன். பேராசிரியர் செ.யோ., நண்பர் குணேஸ்வரன் முதலானோர் இந்நாவல் குறித்துப் பேசும் போது எனக்கு மலைப்பாக இருக்கும். அந்த நாவலைப் படித்தப்பின்னர் அது பொய்யில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். 
ஈழ விடுதலை இயக்கங்களுக்கிடையலான உள்முரண்பாடுகளால் போராளிகள் வகை தொகையின்றி வேட்டையாடப்பட்ட சூழலில் இறந்து விடுவேன் என்று நிச்சயமாய்த் தெரிந்திருந்தும் வாழவேண்டும் என்ற அவாவோடு உயிரைக் கையில் பிடித்தபடி ஒரு போராளி தப்பிப் பிழைத்து நாட்டை விட்டு புலம் பெயர்ந்து போவதை உணர்வும் உயிர்ப்புமாக இந்நாவலில் பதிவு செய்தார் செழியன். இந்நாவலையே விரித்து “வானத்தைப் பிளந்த கதை” என்ற பெயரில் பின்னர் எழுதியிருந்தமையையும் இங்கு நினைவு கூரத்தக்கது. பா.துவாரகனுடன் இது குறித்த விவாதங்கள் இன்றும் மனதில் பசுமையாக இருக்கின்றது.
1998 ஆம் ஆண்டு கனேடியன் நியூ புக் பப்பிளிக்கேசன்ஸ் வெளியீடாக கனடாவில் இருந்து வெளிவந்த இந்நாவல் இயக்கங்களுக்கிடையிலான முரண்பாடுகளின் தோற்றத்தையும் இயக்கப் பிளவுகளுக்குப்பின் விடுதலைப் போராளிகள் எதிர் கொண்ட நெருக்கடிகளையும் எடுத்துவிளக்குகிறது. “போராடக் கற்று தந்த போரட மட்டுமின்றி மனிதனாகவும் வாழவும் கற்று தந்த தந்தைக்கு இந்நூலை செழியன் சமர்பணம் செய்துள்ளார். இந்நாவல் ஆரம்பத்தில் தாயகம் இதழிலேயே உண்மைத் தொடராக வெளிவந்தது. 13.12.1986 இல் தொடங்கும் குறிப்பு 23.01.1987 உடன் நிறைவு பெறுகிறது. கொலை அச்சறுத்தலுக்குள்ளாகி 42நாள் தலைமறைந்து வாழும் மாற்றியக்கப் போராளிகளின் அனுபவப்பகிர்வாக இந்நாவல் வெளிவந்திருந்தது. இற்றை வரையும் 174 பக்க நாவலில் இருந்து என்னால் வெளியால் வரமுடியவில்லை. அந்தளவுக்கு என்னைப் பாதித்த நாவல்.
நண்பா “கறை படிந்த பாடங்களின் முடிவில் மக்கள் எப்போதும் புதிய வரலாற்றைப் படைப்பார்கள்” என “பெர்லினுக்கு ஒரு கடிதம்” கவிதையில் நீ அறை கூவியிருந்தாய். ஆனால் எம்மக்கள் என்றும் மாறாத மனங்களுடனும் ஆறாத காயங்களுடனுமே இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்பது துயரம். உன் இழப்பு என்றுமே ஈடு செய்ய முடியாது. நீ என்றாவது ஒரு நாள் தாயகம் திரும்புவாய் என்று காத்திருந்தோம். ஆனால் நீவாராமலேயே நெடுந் தூரம் சென்றுவிட்டாய்.

Related

அஞ்சலி 8855862480519564643

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item