நட்சத்திரங்களை மோகிப்பவன்சித்தாந்தன்

நட்சத்திரங்களை மோகிக்கத் தொடங்கிய பிறகு அவனால் எந்த இரவையும் இயல்பாகத் தாண்ட முடியவில்லை. கனவுகளாகக் குலையத் தொடங்கிய இரவுகளை அவன் வர்ணங்களாக அடுக்கத் தொடங்கிய ஒரு நாள், பேரொளி மிக்கதான நட்சத்திரம் ஒன்று முதன் முறையாக அவனது கண்களுக்குத் தட்டுப்பட்டது. பிறகெல்லாம் தன் பிளந்த நாவினால் அதனை பற்றிய புகழ் மொழிகளை எழுதத் தொடங்கினான். சுற்றிலும் நரம்புகளால் பின்னப்பட்ட அவனது வார்த்தைகளில் சில சமயங்களில் விஷஜந்துகளும் சில சமயங்களில் பாம்புகளும் அலைந்தபடியிருந்தன.

வானவில்லைப் போன்ற திமிர்த்தனம் மிக்க அந்த நட்சத்திரத்தின் பு+ர்வீகம் பு+மியின் சராசரியான வயதை ஒத்திருந்தாக அவன் நம்புவதற்கான ஏதுக்களை அவனது நிமித்திகன் ஒருதடவை உதிர்த்துச் சென்றான். இது அவனை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இந்தப் பு+மியின் முதிர்ந்த தேவனாக தன்னைப்பிரகடனப்படுத்தத் தொடங்கிய நாட்களில் பேரொளி மிக்க அந்த நட்சத்திரம் வானில் எங்கோ தொலைவிலிருந்து மின்னிக்கொண்டுதானிருந்திருக்கிறது. தன் அறிவு வளையத்திலிருந்து அது விலகியிருந்து இப்போது தன் தொன்மையை இலகுவாக பதிவு செய்திருப்பதை நினைக்கும் போது ஒருவிதமான எரிச்சல் அவனைப் பற்றிக் கொண்டது. நட்சத்திரம் மீதான தன் தீராத் தாகத்திற்கான வாயில்களில் ஒன்று இலகுவாக அடைபட்டுப்போனதை அவன் உணர்ந்துகொண்டான்.

அதன் தொன்மையைப் பொய்ப்பிப்பது தொடர்பான ஏதாவது வரலாற்றுப் புனைவுகளை எழுதினால் என்ன என எண்ணிய போது அந்த பேரோளி நட்சத்திரம். ஒரு சூரியனாக பிரமிப்பதை அந்த இரவில்  கண்டு கொண்டான். விழிகளை திறக்க முடியாத அளவுக்கு வானம் ஒளிப்பிரளயாமாகக் காட்சி கொடுத்ததது. மேகத்தின் வாசலில் திரண்டிருந்த நட்சத்திரங்கள் எல்லாம் அந்த ஒளி வௌ்ளத்தில் அள்ளுண்டு போய்க் கொண்டிருந்தன. அவனால் கண்களைத் திறக்க முடியவில்லை. சாபத்தின் பிரமாண்டமான வார்த்தையாக நட்சத்திரம் உருப்பெருத்தபடியே இருந்தது.
அவன் தன்னிடம் இருந்த வார்தைகள் ஒவ்வொன்றையும் திரட்டித் திரட்டி ஒளிவௌ்ளத்தில் எறியத் தொடங்கினான். எல்லாமே அணைந்து பஸ்மமாகின. அவனால் மேற்கொண்டு எதுவுமே செய்ய முடியவில்லை. புலன்கள் கலங்கி கண்களை உறக்கத்தின் இடுக்குகளுக்குள் சொருகத் தொடங்கினான். பொழுது புலரத் தொடங்கியிருந்தது. இரவின் பேரொளி வற்றிப் போயிருந்தது. அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை.

காலை எழுந்ததுமே சூடனான தேநீரை பருகினான். அவனது மூளைக்குள் இரவு, நட்சத்திரங்கள், பேரோளி என மாறிமாறி நிலைமாறிக் கொண்டேயிருந்தன.
00
வண்ணத்துப்பு+ச்சி பற்றிய கவிதை ஒன்றினை அதற்கு முந்தைய இரவொன்றில் எழுதியிருந்தான். அந்தக் கவிதை வட்டங்களாலும் சதுரங்களாலும் மற்றும் முக்கோணங்களாலும் எழுதப்பட்டது. அதை அவன் ஒரு பரிசோதனை முயற்சி என்ற கோதாவிற்றான் எழுதியிருந்தான். வார்தைகளைப் புறமொதுக்கிவிட்டு தன்னால் ஆக்க முடிந்த புதியவகையான கவிதை அது என அவன் நம்பிக் கொண்டிருந்தபோதுதான். கடந்த இரவு, தான் கண்ட அந்தப் பேரோளி மிக்கதான நட்சத்திரம் தன் புதிய கவிதையிலும் ஆழமான கருத்தைக் கொண்டிருந்ததாக அவனுக்குத் தோன்றியது. ஒருவித பித்து நிலையின் உச்சத்தில் பிதற்றலாக அவனிடம் புறப்பட்டுக் கொண்டிருந்த கவிதைகள்பின்னெல்லாம் அவனிடமிருந்தே உதிர்நட்சத்திரங்களாவதைக் கண்டு கொண்டான்உண்மையில் கவிதைகளை விடவும் நட்சத்திரங்கள் அழகானவைதான் ஆனால் நட்சத்திரங்களை விட கவிதைகளை அழகாக்கும் நுட்பத்தை கண்டடைந்து அதையே புதிய கவிதையின் செல்வழியாக பிரகடனப்படுத்திவிட வேண்டும் என்ற அவசரம் அவனிடம் துருத்திக் கொண்டிருந்தது.

இப்போதோல்லாம் கவிதைளை எழுதுபவர்களுக்கு கவிதைகள் பற்றியதான எந்தப் புரிதல்களும் இல்லை என்பதுதான் அவனது அண்மைய கண்டடைவுகளில் முக்கியமானது. அவனைப் பொறுத்தவரையில் கவிதைகளை எழுதுபவர்கள் என்ற சொற் பிரயோகம் வழக்கொழிந்துபோய் கனகாலமாயிற்று. கவிதைகளை வரையும் கலைதான் இனிவருங்காலங்களில் பிரசித்தமானதாக இருக்கும் என ஆழமாக நம்பினான்.

இது பற்றி விமர்சகர் அந்துவனுக்கும் அவனுக்கும் நிகழ்ந்த உரையாடல் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியிருந்தது. அந்துவன் கவிதைகளின் நிலை மாறுகாலம் குறித்த தனது கருத்துக்களை ஆழமாக எழுதியிருந்த கட்டுரை ஒன்றுக்கான மறுப்புரையாகத்தான் அவன் அந்த விவாதத்தில் பங்கெடுக்க வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் கண்ணியமும் கருத்தாளமும் மிக்கதான வார்தைகளால் தொடங்கிய அவனது மறுப்புரைகள் பின்னெல்லாம் முட்களைச் சூடிக்கொண்டன. ஆந்துவனிடம் காணப்பட்ட மரபிலக்கியப் புலமையும் நவீன இயலக்கியத் தேடலும் அதற்குப் பின்னரான  இலக்கிய வகைமைகள், செல்நெறிகள் தொடர்பான அறிவுக்கும் முன்னால் அவனால் ஓரிரு கருத்துக்களுக்கு அப்பால் கடந்து செல்ல முடியவில்லை. வசைகளை வார்த்தைகளாக்கும் வித்தையால் அந்த விவாதத்தை திசை மாற்ற அல்லது மாற்றியமைக்க அவன் முயன்றுகொண்டிருந்தான். ஆனால் அந்துவனின் தீர்க்கமான உரையாடல் அவனை சமூக வெளியில் கவிதை பற்றிய மொண்ணைத்தனமான கருத்துக்களைக் கொண்டிருப்பவன் என்ற அடையாளத்தையே ஏற்படுத்தியது. அவனால் இதனை செரித்துக்கொள்ள முடியவில்லை.

அந்த உரையாடலுக்குப் பின்னதான காலத்தில் அவன் தன்னை தேற்றிக் கொள்வதற்காக வலிந்து உருவாக்கிக் கொண்ட பழக்கந்தான் நட்சத்திரங்களை மோகிப்பது. பாழாகக் கரையும் பொழுதுகளுக்கு ஒரு அர்த்தத்தை வழங்கும் முயற்சிதான் நட்சத்திரங்கள் மீதான தன் மோகத்திற்கான அடிப்படைக் காரணம் என ஒரு பதிவை முகப்புத்தகத்தில் இட்டிருந்தான். இதை வாசித்த பலரும் அதன் கீழே எண்ணற்ற விருப்பக்குறிகளை இட்டிருந்தனர். சிலர் அவனது அந்த கருத்து மிகவும் வசீகரம் மிக்கதாக இருப்பதால் தாமும் அதைத் தொடர விரும்புவதாக அறிவித்திருந்தனர். அது அவனுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்திருந்தது.

அந்த உந்துதலின் விளைவாக அவனது தலைமையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டதேநட்சத்திரங்களை மோகிப்போர் சங்கம்”. அதனது அங்குரார்ப்பண நிகழ்வின் போது அவன் அந்துவனுக்கும் அழைப்புவிட்டிருந்தான். அந்துவனோ அந்த அழைப்பை இரண்டு துருவங்களின் இணைப்புக்கான வழியாக இருக்கக்கூடும் என்ற வகையில் ஏற்றுக் கொண்டிருந்தான். ஆனால் நிலமை தலைகீழாக மாறிக்கிடந்தது. மோகிப்போர் சங்கத்தின் கைவிரல்களளவான அங்கத்தினர்கள் எல்லோரும் அந்துவனின் வருகைக்காகவே காத்திருந்தனர;. தம் தலைவனின் மீதான வசைச் சொற்களை அந்துவன் திருப்பிப் பெறவேண்டும் என்றும் அல்லாத பட்சத்தில் தாம் தலைவனுக்காகத் தீக்குளிக்கவும் தயாராக இருப்பதாக பதாதைகளைக் காட்சிப்படுத்தியபடியிருந்தனர். ஆனால் அந்துவனோ எதையும் சாட்டை செய்யாதவனாக தலைவரிடம் சென்று கைகளைக் குலுக்கிக் கொண்டான். தலைவருக்கு அந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட சங்கடத்தை தொண்டரகளால் புரிந்துகொள்ள முடியவில்லைஅவர்கள் பதாதைகளை தங்கள் பின்புறங்களில் மறைத்துக்கொண்டு அந்துவனை நோக்கிப் புன்னகை செய்தனர்.

அவன் தான் வரைந்த புதிய கவிதையை  காட்சிப்படுத்தினான். அதனை வாசித்து அதன் பொருளை அந்துவன் விரித்துரைக்கவேண்டும் என கனிவான மொழியில் வேண்டிக் கொண்டான். அந்துவனோ அதற்கு முதலில் கவிதையைத் தாருங்கள் எனக் கேட்டான். அவனுக்கு என்ன செய்வது என்று புரியாமற் போனது, தொண்டர்களின் முன் தன் முகத்தை தொங்கப்போட விரும்பாதவனாக சுதாகரித்துக் கொண்டு தன் கவிதையின் காட்சிப்பலகையையினைச் சுட்டிக் காட்டினான், அந்துவனுக்குதான் இந்; நிகழ்வுக்கு வராமல் இருந்திருக்கலாம் என்று பட்டதுஅவனின் அழைப்பின் உள்நோக்கத்தினைப் புரிந்தவனாக, உங்கள் கவிதை அழகாக வரையப்பட்டிருக்கிறது என்றான். ஆனால் நீங்கள் கறுப்பு வண்ணத்தைப் பயன்படுத்தியதிலும் பார்க்க இன்னும் வெவ்வேறான வர்ணங்களைப் பயன்படுத்தியிருப்பின் இன்னும் அழகாக இருக்கும் என்றான்.

தலைவன் கணத்துள் கடுபப்பேற்றிக் கொண்டான், “இதுதான் உங்களின் விமர்சனமா?” நீங்கள் எப்போதும் இப்படித்தான் விமர்சிக்கின்றீர்கள் பிரதியின் புறத் தோற்றம்பற்றியதே உங்கள் கருத்துக்கள். இது எனக்குத் தேவையில்லை. நான் எதிர்பார்ப்பது பிரதியின் அகநிலை கருத்துநிலைமையேஎன்றான். அந்துவன் நிலமையின் கோரத்தருணத்தைப் புரிந்துகொண்டவனாகநீங்கள் அவரசரப்படுகிறீர்கள். என் விமர்சனம் இன்னும் முடியவில்லைஎன்றான். தலைவனுக்கு மூக்கிலடிபட்டது போலிருந்தது. அந்துவனின் முகத்தை எதிர்பார்ப்புடன் பார்த்தான். அவனது கண்கள் மேலும் சிறுத்திருந்தன. உதடுகளினை நாக்கினால் வருடி ஈரப்படுத்தியவாறு தன் கருத்தினைச் சொன்னான்.

தலைவரே. நீங்கள் வரைந்திருக்கின்ற கவிதையை நான் இப்படித்தான் வாசிக்கின்றேன்.
இரண்டு சிறிய வட்டம் = ஒரு பெரியவட்டம்
இரண்டு சிறிய சதுரம் = ஒரு வெவ்வகம்
பெரிய வட்டம் = செவ்வகம்
செவ்வகம் = கவிதை

கூடியிருந்த தொண்டர்கள் எல்லோரும் கைகளைத் தட்டி ஆரவரித்தனர். ஆனால் தலைவனின் முகத்தில் கருமை அடர்த்தியுடன் படியித் தொடங்கியிருந்தது. அந்துவனின் கைகளை குலுக்குவது போல பாவனை செய்து காதுகளுக்குள் மெதுவாகச் சொன்னான்நான் பழிக்குப் பழி வாங்கியே தீருவேன்அந்துவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டுநல்லது நண்பர். உங்கள் பணி தழைத்தோங்கட்டும்என்றவாறு தனது மோட்டார் சைக்கிளை நோக்கி நடந்தான். தொண்டர்கள் சிநேக பாவத்துடன் புன்னகைத்தனர். அந்துவன் அவர்களை கருணையுடன் பார்த்தான். அந்தப் பார்வை அவனது ஆகச் சிறந்த விமர்சனங்களில் ஒன்றுபோல இருந்தது.
00
அன்றைய இரவு, அவன் மீண்டும் பேரொளி நட்சத்தித்திரத்தனைக் கண்டான். அது வழமைக்கு மாறாக மேற்குவானில் சுடரிட்டுக் கொண்டிருந்தது. அதனை கைகளை நீட்டி இரந்து அழைத்துக் கொண்டிருந்தான். அவனது இதயத்தில் படர்ந்திருந்த தனிமையை அது போக்கிவிடக்கூடும் என்ற நினைப்பு அவனை ஆக்கிரமித்துக் கிடந்தது. காற்று தவளையைப் போல மரங்களில் மோதி இரைந்துகொண்டிருந்தது. கணத்தில் அவனது நினைவு தலைகீழானது தானே பேரொளி நட்சத்திரமாக உருமாறிவிட்டதாக உணர்ந்து கொண்டான். எப்போதும் தன் தலையின் பின்னால் சுழல்வதாக தான் நம்பிக் கொண்டிருக்கும் ஒளிவட்டத்தை தன் உடல் முழுமையும் பெற்றுக் கொண்டுவிட்டதாக நினைத்தான். தன்னைச் சூழவும் சுடர்ந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் தன் நண்பர்களின் முகங்களைக் கண்டான். தான் உத்தமமான கவிஞன், அதனால்த்தான் இத்தனை கல்லெறிக் காயங்களுக்கு ஆழாக நேரிடுகிறது. என்ற ஒரு மந்தமான புரிதல் அவனுக்கிருக்கும் சுய சிந்தனையையும் மீறி வெளிப்பட்டுக் கொண்டது.

பேரொளி நட்சத்திரம் அந்த இரவைக் கடந்து கொண்டிருந்தது. இருட்கடலில் மிதந்து செல்லும் ஒளித் தோணியாக அதனது அசைவு இருந்தது. அதன் கிளரும் ஒளி எண்ணற்ற ஒளிப்பறவைகளை வானம் முழுவது பறக்கவிட்டுக்கொண்டிருந்தது. வானம் ஒரு கணம் இருளாயும் மறுகணம் ஒளியாயும் நிறந்திரியும் ஒரு அதிசயத்தை அது நிகழ்த்திக்காட்டிக்கொண்டிருந்தது.

அவன் தன் கனவுநிலையில் இருந்து அறுந்து விழுந்தான். வானத்தில் நட்சத்திரங்கள் காய்ந்துபோயிருந்தன. அவன் நட்சத்திரங்கள் இருந்த புள்ளிகளை இணைத்து கோடுகள் பலவற்றை மனத்தால் வரைந்து பார;த்தான் வானம் முழுதும் எண்ணற்ற கோடுகளைக் கண்டான். யாவுமே நேர;கோடுகள். கோடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தங்களைச் சிருஸ்டித்துப் பார்த்தான். கோடுகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கினான் புதியதான ஒரு கவிதை வரைதல் முறையை முடிவில் சிருஸ்டித்திருந்தான்.

அவசர அவசரமாக அதனை ஒரு தாளில் வரைந்து, தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டான். கணத்துள் எண்ணற்ற விருப்பக் குறிகள் பெருகின. அவனது கால்கள் நிலைகொள்ளாமல் கூத்தாடின. தொண்டர்களின் வாழ்த்துரைகளினால் அவனது உள்பெட்டி நிறைந்து கொண்டிருந்தது. அவன் அவர;களுடன் தன் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டிருந்தான். எல்லா தொண்டர்களுக்கும் கோடுகளை மொழியாக்கி உடனுக்குடன் உட்பெட்டிக்கு அனுப்பிக் கொண்டிருந்தான். அவர்களும் பதிலுக்கு தாமும் சில கோடுகளை வரைந்து அவனது உள்பெட்டிக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அவன் தன்னை பேரொளி நட்சத்திரமே வழிகாட்டுவதாக நம்பத் தொடங்கினான். அவனது மனதில் விசித்திரமான எண்ணங்கள் உதிக்கத் தொடங்கின. பகலிலும் ஏன் அந்த நட்சத்திரம் தோன்றக்கூடாது? அது சூரியனையே தின்று ஏப்பவிடும் நட்சத்திரமல்லவா? ஏன் தோன்றக்கூடாது? அவனைச் சூழ்ந்து கொண்டு ரீங்காரம் செய்யும் கேள்விகளுக்குள் நெக்குருகிக் கிடந்தவனை, தான் வரைந்த கவிதைக்கு கீழே எழுதப்பட்டிருந்த பதிவு குலைத்துப்போட்டது. “ நேர்த்தியான கோடுகள தோழர் பணி தொடர வாழ்த்துக்கள்அது அந்துவனுடையது.

அவனது நாடிநரம்பெல்லாம் இறுகிப்புடைத்தன. அந்துவன் என்ற கத்தியவாறு பற்களை நெருமிக்கொண்டான். அந்த வெறிக் கூச்சல் தொண்டர;களுக்கும் கேட்டிருக்கவேண்டும் போல் அவர்கள் அவசர அவசரமாக கோடுகளை வரைந்து ஆறுதலுக்காக அனுப்பிக் கொண்டிருந்தனர். அவனது உள்பெட்டி கோணல் மாணலான கோடுகளால் நிறைந்துகொண்டிருந்தது.
00
அந்துவன் மீதான பெருங்கோபம் அவனை அலைக்கழித்தபடியே இருந்தது. அந்துவனுடனான நேரடி விவாதங்களில் எல்லாம் தன்னால் வெற்றி கொள்ள முடியாதிருக்கின்றமைக்கான காரணங்களை அவன் சிந்திக்கத் தொடங்கினான். அவனைப் பொறுத்தவரையில் அந்துவன் ஒரு தகவல் பெட்டகம் என்றுதான் நினைத்திருந்தான். ஆனால் அவனுடனான விவாதங்களின் போதெல்லாம் அந்துவன் தகவல்களை மட்டும் பட்டியற்படுத்தாது தொடர்ச்சியாக உரையாடிக் கொண்டும் தர;க்கித்துக் கொண்டும் இருப்பது அந்துவன் பற்றியதான அவனது எண்ணத்தை முற்றுமுழுதாக மாற்றியிருந்தது. அந்துவனால் எப்படி இத்தனை புத்தகங்களை வாசிக்க முடிகின்றது. எண்ணூறு பக்க நாவல்களைக் கூட அந்துவனால் ஒரு இரவில் படித்துமுடித்துவிட்டு அது பற்றி முகப்புத்தகத்தில் உடனடியாகவே பதிவுகளை இடமுடியுமாக இருப்பது ஒரு வகையில் ஆச்சரியமாகவும் மறுவகையில் அந்துவன் மீதான காழ்ப்புணர்வாகவும் அவனிடம் இருந்துவந்தது.

அந்துவனின் எழுத்துக்கள் பற்றி நண்பர்கள் விதந்து சொல்லும் போதெல்லாம். “அந்துவன் என்னத்தை எழுதிக் கிழிச்சுப்போட்டான். அவன்ர கட்டுரைகளில் எல்லாம் தகவல்களும் பட்டியற்படுத்தல்களுமே நிறையக் கிடக்கு. நானெல்லாம் அதுகளைப் படிக்கிறேலைஎன்று மட்டந்தட்டுவதையே வழக்கமாக வைத்திருந்தான். ஒருநாள் அந்துவனின் நண்பர்களில் ஒருவனான கிருத்திகன்அதுகளை வாசிக்காமல் எப்படி தகவல்களும் பட்டியல் படுத்தல்களுமே இருக்கறது என்று சொல்லுறீர்எனக் கேட்டபோது, அவனுடைய முகத்தில் எரிந்துகொண்டிருந்த நட்சத்திரங்கள் அணைந்துவிழுந்தன. “அது முந்திப் படிச்சனான். இப்ப படிக்கிறேலைஎன்று சமாளித்துக்கொண்டு வெளியேறியிருந்தான்.

அவனை அறியாமலேயே அந்துவன் மீதான வெறுப்பு வளர்ந்தபடியிருந்தது. சில நேரங்களில் அந்துவன் தன்னை நிழல்போலத் தொடர;ந்து உளவு பார்ப்பதான பிரமை அவனுக்கு எற்பட்டுவிடுவதும் உண்டு. அந்த நேரங்களில் அவனால் இயல்பாக இருக்க முடிவதில்லை. அடிக்கடி தன் பின்னால் திரும்பிப் பார;த்தபடியே நடப்பான். தெருக்களில் ஓங்கிவளர்ந்திருக்கும் மரங்கள் எல்லாம் ஆயிரத்தெட்டு அந்துவன்களாகி தன்னைப் பார்த்துக் கூச்சல் இடுவது போலவும் உரத்துச் சிரி்ப்பது போலவும் அவன் உணர்ந்திருக்கின்றான். அவனது பிரக்ஞை அவனிலிருந்து விலகி தொலைவில் அலைவதான பிரமை அவனைத் தொடர;ந்துகொண்டேயிருந்தது.

சில நாட்களுக்கு முன்னர; இரண்டு கவிதைத் தொகுதிகள் பற்றி அறிமுக நிகழ்வொன்றிற்கு அவன் சென்றிருந்தான். அந்த நிகழ்வில் தொடக்கவுரையை அந்துவன்தான் நிகழ்தினான். அன்றைய அந்துவனின் உரை தன்னை குறிவைத்தே நிகழ்ததப்பட்டதாக அவனுக்குத் தோன்றியது. “அண்மைக் காலத்தில் சிலர் கவிதையைத் தொழில்முறையான நுட்பங்களைக் கொண்டதாக எழுதிவருகின்றனர்என்ற போது அது தனக்கானஅடிஎன்றே அவனுக்குத் தோன்றியது. அந்த நேரத்தில் பலருடைய பார்வைகளும் அவனை மொய்த்து மீண்டதனையும் அவன் கவனித்துக் கொண்டான். கூட்டத்திலிருந்து எழுந்து வெளியேறினால் என்ன என்ற எண்ணம் கூட அவனுக்குத் தோன்றியது. ஆனாலும் அது தன்னைத்தானே தரம் இறக்குவதற்குச் சமமாக அமைந்துவிடும் என நினைத்துக் கொண்டு அமர;ந்திருந்தான்.

தொடர்ந்து உரை நிகழ்த்திய அந்துவன். அண்மையக் காலமாக சிலர் நவீனத்துவத்துக்குப் பிந்தியது என அடையாளப்படுத்தலுடன் எழுதும் கவிதைகளில் இரண்டுவகையான போக்குகளை தன்னால் அடையாளங்காண முடிகின்றது.

1. உறை நிலையிலிருந்து காட்சிகளை அசைநிலைப்படுத்தல்
2. அசை நிலையிலிருந்து காட்சிகளை உறைநிலைப்படுத்தல்.
ஏன இரண்டு போக்குகளைக் குறிப்பிட்டதுடன். இந்தப் போக்குகள் இரண்டும், கவிதை தரும் அனுபவம் என்பதற்கு அப்பால். தம் அனுபவத்தை கவிதையில் ஏற்றிவாசிப்பதற்கான சாத்தியத்தையே கொண்டிருக்கின்றன. இந்த போக்குகளை வெளிப்படுத்தும் கவிதைகள் தம்மை அறியாமலேயே கவிதைக்கு ஒரு கருத்துநிலை வடிவத்தைக் கட்டமைக்கின்றன. இத்தகைய கவிதைகளை வாசிக்கும் போது இக்கவிதைகளை எழுதும் கவிஞர்கள் தம்மை அறியாமலேயே ஒரு வடிவத்தை கட்டமைத்திருப்பதை புரிந்துகொள்ள முடியும்என தொடர்ந்து பேசினான்.

இந்தக் கருத்து உண்மையோ பொய்யோ என்பதெல்லாம் அவனது மனம் ஆராயத் தலைப்படவில்லை. ஆனால் இந்தக் கருத்தைக் கூறியது அந்துவன் என்பதால் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் இதை மறுத்துரைக்க வேண்டும் என்ற உந்துதல் அவனுக்கு ஏற்பட்ட போதும். அந்துவன் தன்னை மறுதலித்து பதிலுரைப்பான் என்தாலும். அது மீண்டும் மீண்டும் அவமானத்தை ஏற்படுத்தும் என்பதாலும் உறைநிலைக் காட்சியாக அமர்ந்திருந்தான்.

கூட்டம் நிறைவுக்கு வந்து அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தனர;. அப்போது அவன் பேரொளி நட்சத்திரத்தைக் கண்டான். அதனது ஒளி அவிந்தடங்கிய நெருப்பின் சாம்பலினிடையே மின்னிக்கொண்டிருக்கும் தணலாகிக் கருகிக் கொண்டிருப்பதைக் கண்டான். ஒரு கணம் தன்னிலை குலைந்தவனாக மனம் பதற்றமடைந்தான். தன்னை நம்பிக்கையு+ட்டி அழைத்துச் செல்லும் நட்சத்திரம் ஒளி சுருங்கிக் கொண்டதை அவனால் தாங்க முடியவில்லை. துக்கம் இதயத்தை துவாரங்களில் நொதிக்கத் தொடங்கியது. நிலக் காட்சிகள் யாவும் உறை நிலைக் காட்சித்திரைகளாகத் தொங்கிக் கொண்டிருப்பததாகத் தோன்றியது. தன்னை மூடியதாக கறுத்த மவுனம் படர;வதாக உணர்ந்து கொண்டான். கைகளை வரித்து பரிதாபத்தின் குரலால் நட்சத்திரத்தை அழைத்தான். அது சாகசத்தின் கடைசி இறகுகளினால் இரவின் அந்திமத்தை நினைவு+ட்டியபடியாக கடந்துகொண்டிருந்தது. அவனால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சுற்றிலும் இரவு திரையாக விழத்தொடங்கியிருந்தது. அவன் தன் தனிமையை உணர;ந்தான். கடந்துவிட்டிருந்தது அவனது காலம்.

துக்கிக்கவும் சந்தோசிக்கவும் முடியாத உலத்தில் அவனிருந்தான். அந்துவனின் விசூபரூபம் அவனது கவிதைகளில் வீசிக்கொண்டிருந்த நறுமணத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தது. தன் கவிதைகளை புதியதான திசைவழிகளில் எழுதும் பயிற்சிகளில் ஈடுபடத் தொடங்கினான். தன் முகப்புத்தகத்தில் கவிதை பற்றியதான பயிற்சி வகுப்புக்களை நடத்தத் தொடங்கியிருந்தான். கவிதை என்பதுவாழ்விலிருந்து அப்பாற்பட்டதான ஒரு வஸ்துஎன்ற வகையாக அவனது ஆரம்ப பயிற்சி வகுப்புக்களிருந்தன. அது பற்றிய சொற்சித்திரங்களை வலிந்து வலிந்து உருவாக்கிக் கொண்டிருந்தான். ‘கவிதை குறித்த மேல்நிலை வாசிப்புஎன்ற தலைப்பில் அவன் ஒரு கட்டுரையை எழுதியிருந்தான். அக்கட்டுரையில் நவீன கவிதையின் காலாவதியை அப்பட்டமாக அறிவித்திருந்தான். மொழி என்பது எப்படி குறிகளாலானதோ. அவ்வாறே கவிதைகளும் குறிகளாலானதே. கவிதையை வாசித்தல் என்பது குறிகளை வாசித்தலாகவே அமையும் என அக்கட்டுரை விரித்து எழுதப்பட்டிருந்தது. அக்கட்டுரையை படித்தவரில் ஒருவர் அவனிடம்தாங்கள் இங்கு குறி எனக் குறிப்பிட்டிருப்பது ஆண்குறியையா? பெண்குறியையா?” என் கேள்வியை கேட்டிருந்தார். அவன் அந்த நபரை கவிதை குறித்த அடிப்படை புரிதலற்ற ஜந்து என்றவாறாக கடும் வசைச் சொற்களால் திட்டி எழுதினான். கவிதை பற்றித் தொடங்கிய அந்த விவாதம் பிறகு அவனது வசைச் சொற்கள் பற்றியதாக திசை மாறிவிட்டிருந்தது. அதனை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தனக்குள் பொருமிப் பெருத்துக்கொண்டிருந்தான்.

00

ஒருநாள் மதியம் தெருவில் அலைந்து கொண்டிருந்த போது, அந்துவனைக் காண நேரிட்டது. அந்துவன் மீது அவன் கொண்டிருந்த காழ்ப்பு கனலாகக் கொதிக்கத் தொடங்கியது. முன்னே சென்றுகொண்டிருந்த அந்துவனை விரைந்து நடந்து முன்னே சென்று அந்துவனை நோக்கித் திரும்பிகவிதை என்றால் என்ன?” என்று சட்டெனக் கேட்டான்
திடீரென முன் தோன்றி அவனின் பிரசன்னம் அந்துவனுக்கு சிறு நிலைகுலைவை ஏற்படுத்தியிருந்தாலும் சுதாகரித்துக் கொண்டு
கவிதை எண்டால் என்னெண்டு தெரியாமலா இவ்வளவு நாளும் நீர் கவிதை எழுதிறீர்

எனக்கு அதெல்லாம் தெரியும் உமக்குத் தெரியுமோ எண்டுதான் நான் கேக்கிறன்”.

முதல்ல கவிதை எண்டால் என்ணெண்டு நீர் சொல்லும். நீர்தானே பெரீய கவிஞர்”.

கவிதை எண்டால் அனுபவம்வாழ்வு…..கவிதை எண்டால்..” என அவன் சொற்களை அடுக்கிக் கொண்டே போனான்.

 “கவிதையெண்டால் வாழ்விலிருந்து அப்பாற்பட்டதான ஒரு வஸ்து என்றெல்லாம் முகப்புத்தகத்தில எழுதியிருந்தீர். இப்ப அனுபவம் வாழ்க்கை எண்டுறீர். முதலில கவிதை எண்டால் என்ன எண்ட முடிவுக்கு நீர் வாரும் அதுக்குப் புறகு ரண்டுபேரும் உரையாடுவம்

அவனுக்கு என்ன செய்வதென்றே புரியாமலிருந்தது. முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு அருகிலிருந்த கடையின் படிக்கட்டில் அமர்ந்துகொண்டான். அப்போது சூரியன் நடுவானத்திலிருந்து கொதிப்பை அள்ளி இறைத்துக்கொண்டிருந்தது. அவனால் அந்தக் கொதிப்பை உணர்ந்து கொள் முடியாத அளவுக்கு அகத்தினுள் எல்லாம் எரிந்து நைந்த மணம் வெளிப்படுவதுபோல இருந்தது. தெருவை பார்த்தான் சனங்கள், வாகனங்கள் , மரங்கள் எல்லாம் காட்சியாய் உறைந்துபோய்விட்டதாகத் தெரிந்தது. துாரத்தில் அந்துவன் மட்டும் நடந்துகொண்டிருந்தான்.

00
துயரத்தின் தெருவில் அன்று முழுவதும் அவன் நடந்துகொண்டிருந்தான். எதிரே யாவும் உருவற்ற வெட்ட வெளியென ஆகிவிட்டதாக அவனுக்குத் தோன்றியது. சில தடவைகள் வானத்தை அண்ணாந்து பார்த்தான். பேரோளி நட்சத்திரம் தோன்றி, தனக்கு யாதெனும் ஆறுதல் உரைக்கக்கூடும் என்ற நப்பாசை அவனது கண்களை அண்ணாந்து பார்க்கத் தூண்டியது. மறுகணம் அதனது இல்லாமை அதன் மீதான வெறுப்புணர்வையும் வரவழைத்தது. அதீத சோம்பலுற்றவனாக அண்றைய மாலைப் பொழுதை எதிர்கொண்டான். வானத்தில் செந்நிறம் கனத்துக் கிடந்தது. கரிய நிறத்திலான பறவைகள் இரவை முன்னுணர;திப் பறப்பன போலிருந்தன. வானத்தின் செந்நிறம், வண்ணப் பறவைகளையும் கறுப்பாக்கிவிடும் அதிசயத்தை உணர்ந்தவனாக, அந்துவனும் தன்னைக் எப்போதும் கறுப்பாக்கிக் கொண்டே இருப்பதாக நினைத்தான். ஆனால் நட்சத்திரங்கள் மட்டும் கறுத்த இரவில் சுடர்விட்டுப்பிரகாசிப்பதைப் போல தன்னால் பிரகாசிக்க முடியுமாக இருந்தால். இந்த அந்துவனால் என்ன எந்த அந்துவனாலும் தன்னிருப்பை அசைத்துக்கூடவிட முடியாது என அவன் சிந்தை உரைத்தது. அப்போது வானத்தின் தென்திசையில் நட்சத்திரம் ஒன்று ஒளி உமிழத் தொடங்கியிருந்தது.

அதுவே தான் காணும் பேரொளி நட்சத்திரமாகிவிடக்கூடாதா? ஏன எண்ணினான். அதனுடைய மங்கிய ஒளி விரிந்தது விரிந்து பெருகிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவனுடைய மனம் பரவசநிலையை எய்தியது.  “நட்சத்திரமே! பேரெழிலே! ………” அவனுடைய உதடுகள் சொற்களைக் கோர்க்கத் தொடங்கின. கணத்தில் அவனுக்குள் உறுத்தல் எழத் தொடங்கியது. நான் வார்த்தைகளால் கவிதை எழுதுபவனா? என்ன மடமை என்றவாறு தன்தலையில் மூன்று முறை குட்டிக் கொண்டான். பிறகு தன் தோளில் மாட்டியிருந்த பையினுள் கிடந்த வௌ்ளைத்தாளை எடுத்து சில கோடுகளை வரைந்தான். ஆனால் அவை தான் முதலில் வரைந்த கவிதைகளை அவனுக்கு நினைவு+ட்டவே அதை அவசரமாக கசக்கி வீசிவிட்டு, புதிய தாளை எடுத்து அவற்றில் சில வளைவான கோடுகளை வரைந்தான். குறுக்கும் நெடுக்குமாக பின்னர; எண்ணற்ற கோடுகளை வரைந்தான். சுற்றுக்கெல்லாம் அவனது கை வலித்துச் சோர;வு கண்டது. தொடர்ந்து அவனால் வரைய முடியவில்லை. அசதி அவனைத் தொற்றிக் கொண்டது. மூச்சு முட்டிக் கொண்டுவந்தது. அவசரமாக சிறுநீர் கழித்தால் இந்த அசதி ஓரளவுக்கு தீரக்கூடும் என உள்ளுணர்வு அவனை உந்தியது. தெருவில் நின்ற ஒரு மரத்தோடு ஒதுங்கினான். ஆசுவாசமாக சிறுநீர் கழித்தான். தாகம் எடுத்தது, அருகில் நீரருந்த வழியற்றிருந்தது. வறண்டுபோன நாவை முயன்று முயன்று எச்சிலால் ஈரமாக்கினான். கண்களை மூடி நிஸ்டையில் அமருபவனைப் போல அமர்ந்தான். சற்றைக்கெல்லாம் அந்த மரத்தோடு தூங்கிவிட்டான். அவன் வரைந்த கவிதையின் மீதியை காற்று எழுதிக் கொண்டிருந்தது.

தூக்கம் கலைந்து விழித்த போது, தெருவிளக்குகள் பிரகாசத்துடன் ஒளி உழிந்துகொண்டிருந்தன. கண்களை விரித்து வானத்தைப் பார்த்தான். வானம் வெறும் கறுப்புத் திரையாகக் காட்சியளித்தது. வானத்தில் எந்த நட்சத்திரங்களும் இருக்கவில்லை. தெருவிளக்குகளின் ஒளி நட்சத்திரங்களின் ஒளியை தின்றுவிட்டிருந்தது. முதலில் இந்தத் தெருவைக் கடந்து செல்ல வேண்டும் என எண்ணியவனாக சிறிது தூரம் நடந்து குச்சொழுங்கை ஒன்றினுள் இறங்கனான். ஒழுங்கை இருளில் உறைந்துகிடந்தது. அவனது கால்கள் சாவகாசமாக நடந்தன. இருளில் நடந்து பழக்கப்பட்டவை அவை. வெளிச்சம் தரக்கூடிய இடையு+றிலிருந்து விலகி வந்திருப்பதே அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

திடீரென வானத்தின் கருமை மேலும் அடர்வதாக இருந்தது. வானில் மிதந்து கொண்டிருந்த நட்சத்திரங்கள் எல்லாவற்றையும் ஒன்று திரட்டியது போல வானத்தில் சடுதியாக பேரொளி திரண்டது. அவனது கண்கள் கூசிச் சிறுத்தன. வானத்திலிருந்து கோடிக் கணக்கான ஒளி இறகுகளோடு பேரொளி நட்சத்திரம் அவனை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது. இருளை ஒளியாக்கும் வித்தை அவன் கண்முன்னால் மந்திரத் தருணமாக நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒளித் தேவதையாக பேரொளி நட்சத்திரம் அவன் முன்னால் குவிந்துகிடந்தது. அவன் அதனை தீண்டத் தன் கைகளை நீட்டினான். அது ஒளி நதியாகப் பெருக்கெடுத்து குச்சொழுங்கையின் வளைவுகளுக்குள் ஓடியபடியிருந்தது. அவனின் கால்களும் பேராறாகப் பெருகி ஒளிநதியைத் துரத்தின. முடிவற்ற துரத்தல்.

00

மறுநாட் காலை தனது முகப்புத்தகத்தில்நட்சத்திரங்களை மோகிப்போர் சங்கத்தைதான் கலைத்துவிட்டதாக ஒரு தகவலை பகிர்ந்தான்.
முதல் விருப்புக்குறியை அந்துவன் இட்டிருந்தான்.
தொடர்ந்து எண்ணற்ற விருப்புக் குறிகள் பெருகியபடியிருந்தன.
ஒரு ஆசூவாசமான மனநிலையுடன் அன்றைய காலைத் தேநீரைப் பருகினான். இதமாக இருந்தது.
00

நன்றி - புதியசொல்
Related

சிறுகதைகள் 8122903105132497404

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item