ஓவியர் பயஸ்- நினைவு வெளியில் கரைந்த வண்ணம்


- கருணாகரன்

இரண்டு நாட்களுக்கு முன்பு, Priyamatha Pious வின் முகப்புத்தகத்தில் ஒரு குறிப்பைப் படித்தேன். கீழே அவரும் அவருடைய துணைவரும் இணைந்திருக்கும் படத்தை இணைத்து ஒரு குறிப்பை எழுதியிருந்தார்.
அந்தக்குறிப்பில் சில வரிகள் இப்படி இருந்தன.
''நாள் கடையில் நாமிருவரும்
சேர்ந்து வாங்கிய குங்குமம்
இன்றும் முடியவில்லை
என் பெட்டிக்குள் இருக்கிறது ..
முகச்சவரம் செய்வதற்கு முதல்முதலில்
நீங்கள் வாங்கிய
சவர்க்காரப்பசை இப்போதும் இருக்கிறது
இரண்டும் முடியவில்லை.''

இதைப் படிக்கும்போது உண்டான துக்கத்தைத் தாங்கக் முடியாமலிருந்தது. பயஸை Priyamatha Pious மணம் முடித்து அதிக காலம் இணைந்து வாழவில்லை. அவரே குறிப்பிடுவதைப்போல, வாங்கிய குங்குமம் முடியமுன்பே பயஸ் மரணமடைந்து விட்டார். அதற்குப் பிறகு அந்தக்குங்குமத்தைப் பயன்படுத்த முடியவில்லை என்று Priyamatha Pious குறிப்பிடுகிறார்.

எதிர்பார்த்திருக்காத மரணம் பயஸினுடையது. மரணப்பொறிகள் பலவற்றைக் கடந்து வந்து, அநியாயமாகச் சந்தித்த மரணம் அது.
யுத்தகாலத்தில் வன்னியில் மிகச் சிரமமான, கடினமான நிலைகளையெல்லாம் பயசுடைய குடும்பமும் சந்தித்திருந்தது. வள்ளிபுனத்திலிருந்தவர்கள் இடம்பெயர்ந்து வலைஞர் மடத்திற்கு வந்திருந்தனர். நாங்களும் இடம்பெயர்ந்து வலைஞர்மடம் கடற்கரைக்கே போயிருந்தோம். சனங்களாலும் பிணங்களாலும் நிறைந்திருந்த கடற்கரை ஓரத்தில் ஒரு நாள் மதியம் பயஸைக் கண்டேன். வாடிப்போயிருந்தார். ஆனாலும் சோகம் கலந்திருக்கும் பயஸின்புன்னகை மாறவில்லை. அப்படியே அவருடைய பகிடிக்குணமும் மாறாதிருந்தது. மென்மையான குரலில் நைஸாக அந்தச் சூழலைப்பற்றிப் பகிடிகள் சொன்னார். அந்தச் சூழலும் அந்த வாழ்க்கையும் சிரித்துக் கலகலக்கும் நிலையில் இருந்ததில்லை. ஆனாலும் அதை அப்படியே துக்கத்தில் உறைந்து போகாமல் நெகிழ்வாக வைத்திருப்பதற்கு பயஸ் போன்றவர்களின் பகிடிகள் உயிர். பயஸின் பொருளாதார நிலையைப்பற்றி அறிவேன். எங்களுடைய நிலையும் ஏறக்குறைய அப்படித்தான். இருந்தாலும் ஆளுக்கு ஆள் உதவிக்கொள்ளலாம் என்று ”ஏதாவது உதவிகள் தேவையா, பயஸ்? தயக்கமில்லாமல் சொல்லுங்கோ” என்று கேட்டேன்.

“இந்தச் சாவை நிற்பாட்டுறதுக்குத்தானண்ணை உதவிகள் வேணும்“ என்றார் சிரித்துக்கொண்டே. அதை அவர் பகிடியாகத்தான் சொன்னார். ஆனாலும் அதற்கப்பால் அதிலே உண்மையின் கனதி உயிர்ச்சூட்டுடன் இருந்தது. உயிரை உருக்கும் ஒரு கோரிக்கை அதிலிருந்தது. சாவை நிறுத்த வேணும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், அதை நிறுத்துவதற்கு யாரால்தான் முடியும். என்னால் மட்டுமல்ல அந்தச் சூழலில் யாராலும் அதை நிறுத்த முடியாதென்று பயசுக்குத் தெரியும். ஆனாலும் அவர் அதைக் கேட்டார். 

“அந்த உதவியைத்தான் நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறன். அது நமக்கு எட்டாக்கனி பயஸ். அதிருக்கட்டும், வேறு உதவிகள், சமையலுக்குரிய பொருட்கள் இருக்கா?“ என்று கேட்டேன்.

அப்போது சாப்பாட்டுப்பொருட்களைப் பெறுவதுதான் எல்லாவற்றையும் விடக் கடினமானது. ஒரு சுண்டு அரிசியைப்பெறுவதோ 100 கிராம் சீனியைக் காண்பதோ முடியாது என்றிருந்த காலமல்லவா. “இப்ப சமாளிக்கக்கூடியதாக இருக்கு. நாளைக்கு என்ன செய்கிறது எண்டதை நாளைக்குப் பாக்கலாம். நாளைக்கு வரையும் உயிரோட இருக்கவேணுமே..?!” என்று சிரித்தார். இதுதான் பயஸ். இப்படித்தான் உண்மைகளை, அவற்றின் வலிகளை உணராதவாறு பகிடியாக்கிக் கதைப்பார். ஒரு கணம் சற்று ஆழமாகச் சிந்தித்தால் மிகக் சூடாக அவர் சொல்ல முனைந்த உண்மைகள் உள்ளிருந்து சுடும். 

வலைஞர்மடத்திலிருந்த நாட்களிலும் நாங்கள் பல சிரமங்களை எதிர்கொண்டோம். மரணப்பொறிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது. பிள்ளைகளைப் காப்பாற்றி வைத்திருப்பது, சாப்பாட்டுப்பொருட்களைப் பெறுவது, மலசலகூடப் பிரச்சினைகள், குளிக்கவும் குடிக்கவுமான தண்ணீரை எடுப்பதில் உள்ள நெருக்கடி என ஏராளம் தலைப் பிரச்சினைகள். பயஸின் குடும்பம் இருந்த கூடாரமும் நாங்களிருந்த கூடாரமும் 100 மீற்றர் இடைவெளிக்குள்தான் இருந்தது. ஒரு கட்டத்தில் தன்னுடைய கூடாரத்திலேயே எங்கள் பிள்ளைகளை வைத்துக் கொள்ளலாம் என்றுசொன்னார் பயஸ். அது ஒரு நெருக்கடியான நிலையே. அந்த நெருக்கடியான நிலையில் ஒருவருக்குத் துணையிருக்க முன்வந்தமை என்றும் மறக்கக்கூடியதல்ல. ஆனால், நாங்கள் அந்த நெருக்கடியைப் பயசுக்குக் கொடுக்கவில்லை. இருந்தாலும் அவர் இப்படி எல்லா நிலைமைகளின் போதும் தன்னுடைய சக்திக்கு மீறிய மனப்பாங்குடன் உதவுவதற்கு முன்வருகின்றவர்.

பயஸ், சிறிய வயதிலேயே இடம்பெயர்ந்து தீவிப்பகுதியிருந்து முல்லைத்தீவு - புதுக்குடியிருப்புப் பகுதிக்கு வந்திருந்தார். பயஸை எனக்கு அறிமுகப்படுத்தியது வளநாடன். அது 1997, 98 ஆம் ஆண்டுகள். (வளநாடன் முள்ளிவாய்க்காலில் இறந்து விட்டார்). பயஸின் ஓவியங்கள் சிலவற்றை எடுத்து வந்து பயஸைப்பற்றிச் சொன்னார் வளநாடன். அவற்றில் சில அதிக ஈர்ப்பைத்தந்தன. அதிலும் கறுப்பு வெள்ளையில் வரையப்பட்ட ஓவியங்கள் இன்னும் கவனிப்புக்குரியனவாக இருந்தன. பெரும்பாலானவை அருப உருக்கள். அ. மாற்குவின் சாயலைக் கொண்டனவாகவும் அவரிலிருந்து விலகியவையாகவும் இருந்தன. 

பயஸைப் பார்க்கவேணும் என்று வளநாடனிடம் சொன்னேன். ஒருநாள்  பயஸை அழைத்து வந்தார்வளநாடன். மெலிந்து, உயர்ந்த தோற்றத்தில் இருபதுகளில் இருந்தார் பயஸ். இதழ்கள் திறக்காத புன்னகையோடும் மிரட்சியடையும் கண்களோடும் கைகளைக் குலுக்கிக் கொண்டு, தன்னுடைய பெயரைச்சொன்னார், “பயஸ்ராஜா“.

ஓவியங்களைப் பற்றிப்பேசினோம். அவருடைய ஈடுபாடுகளையும் ஆர்வத்தையும் சொன்னார். குடும்பத்தைப் பற்றி விசாரித்தேன். வீட்டுக்கு அழைத்தார். தொடர்ந்து ஓவியங்களை வரையுங்கள். “வெளிச்சம்“ இதழ்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றேன். அப்படியே வரையத்தொடங்கினார். அவருடைய ஓவியங்கள் பல வெளிச்சத்தில் வெளியாகின. அதோடு அப்போது வன்னியில் வெளியாகிய ஏனைய வெளியீடுகளிலும் பயஸின் ஓவியங்கள் வெளியாகத் தொடங்கின. ராதேயன், இணுவையுர் சிதம்பர திருச்செந்திநாதன், பு. சத்தியமூர்த்தி ஆகியோரும் பயஸை ஊக்கப்படுத்தினார்கள். இன்னொருவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை. அவருக்குத் தொடக்கத்தில் பயஸின் ஓவியங்களில் அதிக ஈர்ப்பிருக்கவில்லை. ஆனால், பின்னாளில் பயஸை அவர் புரிந்து கொள்ளத்தொடங்கினார்.

ஒருநாள் வள்ளிபுனத்திலிருந்த பயஸினுடைய வீட்டுக்கு நானும் வளநாடனும் போயிருந்தோம். அப்போது அவருக்குத்திருமணமாகவில்லை. அம்மா, அம்மம்மா, மாமா ஆகியோருடன் ஒரு சிறிய வீட்டில் இருந்தனர். இடம்பெயர்ந்த வாழ்க்கையில் பல சிரமங்களையும் எதிநோக்கியிருந்த காலம் அது. ஆனாலும் பயஸின் மீது அளவற்ற அன்போடு, அவருடைய ஓவிய முயற்சிகளுக்கும் ஈடுபாட்டுக்கும் ஊக்கமளித்துக் கொண்டிருந்தார் பயஸின் அம்மா. மாமாதான் பலதுக்கும் ஆதாரமும் வழிகாட்டியும். பயஸின் கனவுகளைப் பற்றிச் சொன்னார்கள். பொருளாதாரத்தை மையப்படுத்திச் சிந்திக்காமல், பிள்ளையின் ஈடுபாட்டை மையப்படுத்திச் சிந்தித்தது குடும்பம். ஆனால், பயஸின் குடும்பத்தைப் பொறுத்தவரையில் பொருளாதாரமே மிகமிகத் தேவையாக - அவசியமாக இருந்தது. அதைத்தவிர மற்ற எதைப்பற்றியும் சிந்திக்க முடியாது என்ற நிலையில் இருந்த சூழல் அது. இருந்தும் மறுதலையாக துறைசார்ந்த ஈடுபாட்டுக்கு அவர்கள் ஊக்கமளித்ததையிட்டு அவர்களின் மீது மரியாதை உண்டானது. முடிந்தவரையில் பயசுக்கு ஊக்கமளிக்கலாம் என்று யோசித்தோம்.

ஒரு கட்டத்தில் பயஸ் ஏராளமாக வரைந்தார். அவருடைய ஓவியங்களைக் காட்சிப்படுத்தலாம் என்று சொன்னேன். வளநாடன் அதற்காக கடுமையாக முயற்சித்தார். ஓரு ஓவியக்காட்சியை நோக்கிய சேகரிப்புகளைச் செய்தோம். அதில் தேர்வுகள் வரை செய்து முடிக்கப்பட்டது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்தக் காட்சியை நடத்த முடியாமல் போய்விட்டது. இதனால் பயசுக்கும் வளநாடனுக்கும் எனக்கும் வருத்தமே. அடிக்கடி இதைப்பற்றிச் சொல்லி வருத்தமடைவதாகவே முடிந்தது.

பயஸினுடைய ஒன்றிரண்டு ஓவியங்களை என்னுடைய இரண்டாவது கவிதை நூலில் சேர்த்திருந்தேன்.

இடைப்பட்ட காலத்தில் பயஸ் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்திலும் வேலை செய்தார். எங்கே பயஸ் நின்றாலும் அங்கெல்லாம் கலகலப்பாகவே இருப்பார். துயரத்தைத் தன்னுடன் நெருங்க விடுவதில்லை அவர். இவ்வளவுக்கும் வாழ்க்கையில் ஏராளம் நெருக்கடிகள் அவரைச் சூழ்ந்திருந்தன. இருந்தாலும் எதையும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார். சிரிப்பினால் அவற்றைக் கடந்து விட அல்லது மறைத்து விட அல்லது மறந்து விட முயன்று கொண்டிருந்தார். அவரை நெருங்கிப் பழகியவர்களுக்கும் புரிந்து கொண்டவர்களுக்குமே பயஸினுள்ளே ஒரு எரிமலை கொதித்துக் கொண்டிருப்பதையும் ஒரு துயரூற்றுச் சீறிக் கொண்டிருப்பதையும் உணர்ந்து கொள்ள முடியும். 

யுத்த முடிவுக்குப் பிறகு, முகாம் வாழ்க்கை முடிந்து பயஸ் மீண்டும் தங்களுடைய சொந்த ஊருக்குப் போயிருந்தார். ஊர்காவற்றுறையே பயஸின் ஊர். அப்போது  அவருக்கு ஒரு மகனும் பிறந்திருந்தார். ஆனால் என்னால் அவரைச் சந்திக்க முடியவில்லை. தொலைபேசியில் பேசினார். “புதிய முயற்சிகளில் இறங்கும் எண்ணம் இருக்கு. புதிய முறையில் ஓவியங்களை வரையவுள்ளேன்“ என்றெல்லாம் பேசினார். சந்தோசமாகவும் நம்பிக்கையாகவும் இருந்தது.

ஊரிலிருந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கிய நாட்களில் எதிர்பாராத விதமாக அவர் மின்சாரம் தாக்கி, பயஸ் இறந்து விட்டார் என்று சேதி வந்தது. அதே மின்சாரம் எனக்கும் தாக்கியதைப்போல உணர்ந்தேன். ஏராளமான எண்ண அலைகள் நினைவில் எழுந்தன. கறுப்பு வெள்ளைக் கோடுகளாக, வண்ணங்களாக, உருவங்களாக, அருபங்களாக, நிலக்காட்சியாக, மனிதர்களாக என தன்னுடைய வெளியைத் தன்னுடைய தூரிகையினால் புதிதாகப் படைத்தளிக்க முயன்று கொண்டிருந்த இளைய ஓவியனை இழந்தேன். இந்த இழப்பு எனக்கு மட்டுமானதல்ல. என்னுடையது மட்டுமல்ல. இந்தப் பிரபஞ்சத்தினுடையது.

பயஸின் ஓவியங்களைத் தேடிச் சேகரித்து, அவற்றைப்பற்றி அந்தத் துறைசார்ந்தவர்களும் விமர்சகர்களும் எழுத வேணும். முடிந்தால் ஒரு ஆவணமாக்கலையும் காட்சிப்படுத்தலையும் செய்யலாம். காலவெளி காத்திருக்கிறது.

(ஓவியர் பயஸின் எட்டாவது ஆண்டு நிறைவாக (05.11.2016 இல் எழுதப்பட்ட பதிவு இது)

Related

நினைவுக்குறிப்புகள் 3438025738519386468

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item