கதை சொல்லியின் மனமும் காலத்தின் பதிவும்.

சண்முகம் சிவலிங்கத்தின் ‘காண்டாவனம்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து.


தி.செல்வமனோகரன்.

தனது கவிதையாலும் விமர்சனத்தாலும்  தமிழ் இலக்கிய உலகில் அடித்தடம் பதித்த ஆளுமை சண்முகம் சிவலிங்கம் ஆவார். அவருடைய இன்னொரு அடையாளமான புனைகதைகள் வாசகர்க்குப் பெரிதும் கிடைத்தில. தற்போது ‘காண்டாவனம்’ எனும் தலைப்பில் பதினாறு கதைகளை உள்ளடக்கிய ஒரு சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது. சண்முகம் சிவலிங்கம் சைவராக இருந்து பத்துவயதில் கிறிஸ்தவரானார்; கேரளாவில் கல்வி கற்கச் சென்றார் ; B.SC பட்டத்தோடு மார்க்ஸிட்டாகத் திரும்பி வந்தார்;; மார்க்ஸியத்தை வெறும் சொல்லாக, எழுத்தாக மட்டும் வரித்துக் கொள்ளாமல் வாழ்ந்து காட்டினார். இது மிகவும் முக்கிய குறிப்பாகும். ஏனெனில் ஈழத்தில் பல மார்க்ஸியவாதிகள் தமது கொள்கையைப் பேச்சாகவும் எழுத்தாகவும் மட்டுமே கொண்டிருந்தனர்.

இவருடைய கவிதைகள் இவரை அகவுலக சஞ்சாரியாகவே எமக்குக் காட்டியது. மொழிப்பற்றையும் இனப்பற்றையும் உடையவை அவருடைய எழுத்துக்கள்;. தன்னைத்தானே சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தும் படைப்பாளி. தான் எழுதிய முன்னுரைகளும் பின்னுரைகளும் அரங்க உரைகளும் விமர்சனமாகுமா எனத் தன்னைத் தானே கேள்வி கேட்கும் சிந்தனாவாதி.  தனது கொள்கைக்காகத் தன்னை அர்ப்பணித்த “இன்னமும் இங்கே தான் குந்தியிருக்கின்ற” ஒரு அதிமானுடனாக சசியை இனங்காண முடிகிறது. இனிச் சிறுகதைக்குள் நுழைவோம். 

இச்சிறுகதைகள், இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வருகை தந்திருந்த காலத்தை மையமாகக் கொண்ட அதற்கு முன்பின்னான காலத்திற்கு உரியது. தேசிய ஒற்றுமையை பேசிய மார்க்ஸிஸ்டுக்களும் தனித் தேசியம் பேசிய தமிழ் அரசியல்வாதிகளும் மலிந்திருந்த காலம். இவற்றைத் தாண்டித் தனித்தமிழ்த் தேசியம் பற்றி இளைஞர்கள் சிந்திக்கச் செயற்பட முற்பட்டகாலம். இராணுவ – சிங்களப் பேரினவாத - இந்திய அமைதிப் படை என்பவற்றின் அடக்கு முறைகளுக்கும் சுரண்டல்களுக்கும் இன அழிப்புக்கும் உட்பட்டுத் தமிழர்கள் தங்கள் அடையாளங்களைத் தேடுவதற்கு உட்படுத்தப்பட்ட காலம் அன்றைய சூழலின் யதார்த்தத்தை, 
“அநீதி, துயரம், அறிவும் நியாயமும் கூடச் சுமந்து கொள்ள முடியாத அளவுக்குப் படுகொலைகள், தங்களுடைய சொந்த மண்ணிலிருந்து வேர்கள் பிடுங்கி எறியப்பட்டு அகதிகளாய் வெளியேறுகின்ற மக்கள், எல்லைப்புறங்களில் எரிந்து கொண்டிருக்கும் எமது வீடுகள் வயல்களிலிருந்து இன்னும் அடங்காத புகை இன்னும் அடங்காத நெருப்பு”
எனச் சேரன் சித்திரித்திருப்பது (மரணத்துள் வாழ்வோம் - முன்னுரை) இதனைத் தெளிவுபடுத்துகிறது.

தேசிய விடுதலைப் போராட்டம் வலுப்பெற்ற நிலையில் தமிழ் இயக்கங்களுக்கிடையிலான முரண்கள், அமைதிப்படையின் வருகை, சிங்கள இராணுவத்தின் அட்டூழியங்கள், இராணுவக் கெடுபிடிகள், தப்பியோடுதல், இடப்பெயர்ப்புக்கள், மனித மனங்கள், சமூக உறவுகள் என அக்காலச் சூழலின் சின்னச் சின்ன விடயங்களைக் கூட அநாயாசமாகத் தன் கதைக்குள் கொண்டு வந்துள்ளார். அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் மக்களின் வாழ்வியலை ஒரு போராளியின் குடும்பம் பெறும் அவலங்களை, மரணங்கள் தரும் வலிகளை இக்கதைகள் முன்வைக்கின்றன. இக்கதைகளின்; மையம் இராணுவ அடக்குமுறை – தமிழர்களின் அவலம் - அவற்றையும் தாண்டிய அவர்களின் விடுதலை அவா என்பதே. ஆக, இது அவலங்களினதும் அதன்னின்றும் விடுதலை பெறத் துடிக்கும் மனிதர்களினதும் கதைதான்.

மார்க்ஸியவாதியாகவே வாழ்ந்து கழித்த சசி அவர்கள் வறட்டுவாத மார்க்ஸியர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்ற அவரின் கருத்தியற்றெளிவு முக்கியமானது. தமிழ்த் தேசியத்தின் அவசியத்தை உணர்ந்திருந்த அவரது சிந்தனைப்  புலம் அதனைக் குறுந்தேசியம் என நிராகரித்தவர்களை நிராகரித்தது. நிதர்சனத்தின் பாற்பட்ட கருத்தோட்டம் அவரது கதைகளில் தெற்றெனப் புலப்படுகிறது.

அவரே கூறுவது போல இக்கதைகள் நிகழ் சம்பவத்தில் அல்லது சம்பவங்களில் உள்ள கதையைப் புரிந்து எழுதப்பட்டுள்ளது. அதேவேளை அது தனக்கே உரிய புனைவுத்தருக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும். அதுவே படைப்பாளியினுடைய படைப்பாளுமையின் வெளிப்பாடாக அமையும்.

இத்தொகுப்பில் உள்ள கதைகள் யாவும், அது உருவான சூழல், குழப்பம், அதன் விளைவுகள், பிரச்சினைகள் என்பவற்றை முன்வைக்கின்றன. தமிழ் இடதுசாரிகளால் ஓதப்பட்டு வந்த “பிரித்”இ ஐக்கிய இலங்கை – ஒன்றுபட்ட தேசியம் என்பதாகும். திராவிடக் கட்சிகளின் வழி தமிழுணர்ச்சி மிகு படைப்புக்கள் என அமைந்த இவையிரண்டும் எழுபதுகளின் நடுப்பகுதியில் கேள்விக்குள்ளாகின்றன. தமிழுணர்ச்சி – தமிழுணர்வாகிறது. ஒன்றுபட்ட தேசியத்திலிருந்து தமிழ்த்தேசியம் என்ற சிந்தனை வீறார்ந்த நிலையில் உருக்கொள்கிறது. இதற்கு இனவாத அரசும், அதன் ஒத்தோடிகளும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். எங்களது இடதுசாரிகளுந்தான். ஆனால் இடதுசாரியான சசி அவர்கள், இதற்கு மாறாய்த் தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கின்றார். அதன் நியாப்பாடுகளை கோசங்களோ பிரசார நெடியோ இல்லாமல் முன்வைக்கின்றார்; அதுவே அவரின் ஆளுமைத்திறன் ஆகும். 
1975 - 1999க்கும் இடைப்பட்ட பதினாறு கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ‘உட்புறம’; தவிர்ந்த ஏனைய கதைகள் தமிழ்த் தேசியப் போராட்டம் சார்ந்தவை. லூலூ, உட்புறம் தவிர்ந்த ஏனைய கதைகள் இந்திய அமைதிப்படைக் காலத்தை, அக்காலத்தில் அமைந்த தமிழர் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

திசைமாற்றம் எனும் சிறுகதை 1975களில் ஏற்பட்ட கருத்தியல் மாற்றத்தைத் தெளிவுபடவுரைக்கின்றது. மார்க்ஸியவாதிகள்  ஒன்றுபட்ட தேசியம் பற்றியுரையாட, சசி மட்டும் அதற்கு மாற்றாகத் தேசியத்தை முன்வைக்கின்றார். அது பற்றிய உரையாடலில் கதையின் இறுதியில் 
“நீங்கள்தான், நீங்கள் ஒவ்வொருவருந்தான் அந்தக் கவிதையை எழுதும் படி என்னைத் தூண்டினீர்கள். வடக்குக் கிழக்கில் உள்ளவர்கள் தங்கள் ஜனநாயக உரிமையைக் கேட்டால் அது வகுப்புவாதம். தெற்கில் உள்ள இனத் துவேசத்துக்குப் பெயர் தேசியம். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இந்தத் தீக்கோழித்தனந்தான் - இந்த ஒற்றைக் கண் நெல்சனின் பார்வைதான் என்னை அந்தக் கவிதை எழுதத்தூண்டியது.”
என அப்பாத்திரம் கூறுவதாக எழுதியுள்ளமை கவனிக்கத்தக்கது. இதுவே அன்றைய இளைஞர்களின் குரலாகவும் அமைந்தது. நேர்த்தியான புனைவுக்குரிய தர்க்கத்திற்கேற்ப கட்டமைக்கப்பட்ட இச்சிறுகதை முக்கியமான கதையுமாகிறது. 

   மனிதநேயமும் மண்ணாங்கட்டியும் எனும் கதை அன்றைய இலங்கையின் சமூக அசைவியக்கத்தைப் படம் பிடிக்கிறது. அநுராதபுரத்தில் சிங்களக் காடயர்களால் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களையும் அதற்கு மாற்றாக சிறுதமிழ் கிராமத்தில் நிறைந்திருந்த சிங்களவர்கள் தாமாக வெளியேறுகின்றமையையும் எடுத்துரைக்கின்றது. தன் சகஜீவியை மனித நேயத்தோடு பார்க்கின்ற, “சிங்களவர்களை போகாதீர்கள் உங்களுக்கு ஒன்றுமாகாது” எனச் சொல்ல நினைக்கின்ற, பார்த்துச் சிரித்தால் ஏளனம் பண்ணுவதாக நினைத்து விடுவார்களோ என எண்ணுகின்ற பாத்திரத்தைக் காட்டுகிறார். தன் உறவுகள் சிங்களக் காடயர்களால் தாக்கப்படினும் தன்னோடு இருக்கும் சிங்கள மக்களை மனித நேயத்தோடு நோக்குகின்ற மனிதம் இங்கு காட்டப்படுகிறது. இவ்வாறான நிதர்சனங்கள் இலக்கியத்தில் புலப்படுத்தியோர் மிகக்குறைவு. இக்கதையில் வரும், 

“அநுராதபுரத்தில் நடந்த கொடூரத்தை அறிந்த பின்னரும் அவன் ஒரு மணி நேரம் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தான் என்ன மனுஷன் இவன்”
“இத்தனை சிங்கள மக்களும் உத்தியோகத்துக்காகவும் வியாபாரத்துக்காகவும் சிறுதொழில்களுக்காகவும் இந்தச் சிறிய கிராமத்தில் இருந்திருக்கிறார்களா?”

இவ்விருவரிகளும் மனதில் பல வினாக்களை எமக்குள் எழுப்பி நிற்கின்றன.
காண்டாவனம் எனும் சொல்லின் பொருள் இந்திரவனம் என்கிறது அகராதி.  ஈழத்தமிழர்களின் வழக்கில் காண்டாவனம்; என்பது அக்னி நாட்கள் அல்லது அக்னி நட்சத்திரங்கள் எனும் பொருளில்  வழங்கப்படுகின்றது. ஒன்றுக்குள் ஒன்றாய் இருக்க வேண்டியவர்கள் - நம்பிக்கையீனங்களால் ஒருவரை ஒருவர் சுடுதல் - கொல்லுதல் தொடர்பான இயக்க முரண்பாடுகளை  இக்கதை எடுத்துரைக்கின்றது.

காட்டுத்தோடை எனும் கதை வித்தியாசமாக அமைந்துள்ளது. மரணத்தறுவாயில் யாரிற்கும் வீரம், அலட்சியம் ஏற்படும். கைது செய்யப்பட்ட அப்பாத்திரத்தின் உரையாடல் யாவர்க்கும் ஏன் அப்பாத்திரத்திற்குமே சந்தேகம் - தனக்கு சித்த சுயாதீனமோ என்று; அந்நிலையில் காட்டுத்தோடையின் மணம் வீசும் என்று சொன்ன கூற்றை இறுதிப்பகுதியில் மெய்ப்பிப்பதும் மரணத்தறுவாயில் இருந்து மீள்வதும் தோடையின் மணத்தை நுகர்வதும் அவரின் சுதந்திர உணர்வை புலப்படுத்துகிறது. 

உட்குழிகள், பிரகஷ்த்தம் எனும் இரு கதைகளும் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுதலைப் புலப்படுத்தி நிற்கின்றன. தவறு செய்யாத ஒருவனைத் தவறு செய்ததாகக் கூறி, அதிகார துஷ்பிரயோகத்தோடு தண்டனை (சுடுதல்) வழங்குதலும் அச்செயல் செய்தவன் பின்பு தண்டிக்கப்படுதலுமே உட்குழிகள் எனும் கதை. ஓரே இயக்கத்தில் இருந்து கொண்டு அதிகாரத்திற்காகத் “குழி” பறித்தலை – பறிப்பவர்களைக் இக்கதை பதிவு செய்கின்றது. பிரகஷ்த்தம், போராளி ஒருவன் காட்டிக்கொடுப்பினால் இந்திய அமைதிப்படையால் கொல்லப்படுவதையும் அதையறிந்து அப்போராளியின் தந்தை காட்டிக் கொடுத்தவனை தேடியலைந்து கொலை செய்வதையும் மகன், “இனித்தான் எனக்கு விடுதலை” என உரைப்பதை முடிவாகக் கொண்டும் அமைகின்றது. இது தமிழரின் ஒற்றுமையின்மை, துரோகத்தனம், தந்தையின் பாசம் - நம்பிக்கை – விடுதலை பற்றிய எண்ணம் என்பவற்றை உளவியற்றளத்தில் வெளிப்படுத்துகிறது. பல்தரப்பட்ட வாசிப்புக்குரிய அர்த்தப்பாடுகளை இக்கதையின் முடிவுப்பகுதி தந்து நிற்கின்றது.

“போருக்குப் போனவர்கள் தோற்பதுமில்லை, அவர்கள் வீடு திரும்புவதுமில்லை”, எனும் கூற்றை மையப்புள்ளியாகக் கொண்டு போராடப்போன மகனும் அவனைத் தேடும் இந்திய இராணுவத்தையும் காட்டி இரண்டுக்குமிடையே அவலப்படும் தந்தையை ஆசிரியர் அழகாகச் சித்திரிக்கிறார். மகனுக்காக மேஜர் தாஸ{டன் நட்புக் கொள்வதும் அதனால் சில பிரச்சினைகள் ஏற்படுவதும் மேஜர் தாஸ் மகனை மீட்டெடுத்து வெளிநாட்டுக்கு அனுப்புமாறு அறிவுரை கூறுவதும் தந்தை அதனை நடைமுறைப்படுத்த முயல்வதுமாகக் கதை கட்டமைக்கப்படுகிறது. “வெளிநாடு போதல்” ஈழத்தில் அதிகம் நடந்தாகாலாம் இந்திய அமைதிப்படைக்காலமே. இக்காலத்தில் பல்வேறு சீரழிவுகளைச் சந்தித்த தமிழ்ச் சமூகம் தமது இளம்பிள்ளைகளை இவர்களிடமும் தமிழ்த்தேசிய இராணுவத்திடமும் தமிழ் ஒட்டுக் குழுக்களிடமும் இருந்து தப்புவிக்க பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பியமை நாம் யாவரும் அறிந்ததே. இள்கதையில் வருகின்ற போராளியான மகன் தந்தைக்குச் கடிதம் ஒன்று அனுப்புகின்றான். அதன் சாரம் இதுதான் ‘என்னை வெளிநாட்டிற்கு அனுப்புவதை விட்டு நீங்கள் எல்லோரும் வேறுமாவட்டத்திற்குச் செல்லுங்கள் ஏனெனில் எனது ஊருக்கு நானே ஏரியாப் பொறுப்பாளனாக வரவுள்ளேன்.’ என்பதாகும். இதனால் அக்குடும்பத்திற்கு ஏற்படக்கூடிய இடர் புலப்படுத்தப்படுகின்றது. தந்தையின் கையறுநிலையும் சிறப்பாகப் பதிவு செய்யப்படுகின்றது.

சசி அவர்கள் சொல்வதைப்போல, வாலி வதையும் வாரனசேனையும், காலடி எனும் சிறுகதைகள் குறுநாவலின் குறுக்கங்களாக அமைந்துள்ளன. சிறுகதையின் பண்பைத் தாண்டி நாவலின் பண்பை அவாவி நிற்கின்றன. வாலிவதையும் வாரணசேனையும் எனும் கதை குறியீடாகப் பலன விடயங்களைச் சொல்லி நிற்கின்றன. தமிழரசுக் கட்சி விமர்சிக்கப்படுகின்றது. யாழ்ப்பாண முஸ்லிம் வெளியேற்றம் தொடர்பாக பிரபாகரன் தொட்டு சாதாரண தமிழ்குடிமகன் வரை மன்னி;ப்புக் கேட்டாயிற்று. அதே வேளை கிழக்கில் சிங்களப் படைகளோடு இணைந்து முஸ்லிம்கள் (முழுச்சமூகமுமல்ல) தழிழ்க்கிராமங்களை அழித்தமை. படுகொலைகள் செய்தமையை ஏன் பதிவு செய்யவில்லை? யாழ்ப்பாண முஸ்லிம் வெளியேற்றம் தொடர்பாகக் கொதித்தெழுந்து (குறிப்பாக 2009ற்குப் பின்) எழுதிய ‘பெரும்’ எழுத்தாளர்கள் கிழக்கில் நடந்தேறிய இவ்வெறியாட்டத்தை ஏன் பதிவு செய்யவில்லை? சண்முகம் சிவலிங்கம் இதனை இக்கதையில் பதிவு செய்துள்ளமை அவரது ஆளுமைத் திறத்தை, நெஞ்சுரத்தை வெளிப்படுத்துகிறது. 

மரணப்பூட்டு, வெறியேற்றம், பிரமாண்டம் நோக்கி, படைகள் நகர்ந்த போது எனும் கதைகள் இடப்பெயர்வு, சுற்றிவளைப்பு, பாதுகாப்புவேண்டியலைதல், அவலம் என்பவற்றை வெளிப்படுத்துகின்றன. இதில் மரணப்பூட்டு இந்தியமைதிப்படை கால ஈழத்தமிழர்களின் அவலவாழ்க்கை செவ்வனே படம்பிடித்துக்காட்டுகின்றது. ஒரு புறம் இந்திய அமைதிப்படை மறுபுறம் அதிரடிப்படை இன்னொரு புறம்  தமிழ்த்தேசிய இராணுவம்; மக்களின் சின்னாபின்னமான வாழ்வு, மீசைமுளைக்காத பையன்களை – சிறுவர்களை தெருவில் வளவில் பாடசாலை முகப்பில் கூட பிடித்துக் கொண்டுபோய் மொட்டையடித்து கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு அரங்கேறியது. அப்போது இணைந்த வடக்குக்கிழக்கின் மாகாணசபை அதிகாரமும் தமிழர்களிடம் இருந்தது. தமிழர்களை அழிக்கவே இத்தமிழ்த்தேசிய இராணுவம் பயன்படுத்தப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே.  இன்றைக்கு 2006 - 2009க்கும் இடைப்பட்டகாலத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு நிகழ்ந்ததாகக் கொதித்தெழுகின்ற - உணர்ச்சி பொங்க எழுதுகின்ற ‘பெரும்’ எழுத்தாளர்கள் அன்றும் இருந்தார்கள் மௌனிகளாக் அம்மௌனம் இன்னமும் கலையவில்லை. ஆனால் இறுதி யுத்த ஆட்சேர்ப்புப் பற்றி உக்கிரதாண்டவம் ஆடுவது ஏன்? பிழைப்புக்கா? எழுத்து வியாபாரத்துக்கா? தம் இருப்புக்காகவா? “கேட்க ஆளில்லையெண்டா தம்பி சண்டப்பிரசண்டன்” என்ற பழமொழியே ஞாபகம் வருகிறது. கட்டாய ஆட்சேர்ப்பில் இருந்து தன் பிள்ளைகளைக் காக்கத்துடிக்கும் தந்தையின் மனத்தை அழகான படிமத்தால் சசி எடுத்துரைக்கிறார். பருந்திடம் இருந்து குஞ்சைக் காக்கத் தவிக்கும் கோழியைக் கூறி அதைத்தானே இரசித்துவிட்டு, ஆனால் பருந்துகள் துப்பாக்கியுடன் வராதே எனக் கூறுவதனூடாக அக்கால அவலவாழ்வு பதிவு செய்யப்படுகிறது.  கொழும்பில்,  பல இடங்களில், ஊரில் பல இடங்களில், அயலூர்களில் என அலைந்து அலைந்து இறுதியில் எதுவந்தாலும் பார்ப்போம் எனத் தம் வீட்டிலேயே தங்குகின்ற பிள்ளைகளின் முடிவு தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் யதார்த்தமாகவே அமைகிறது.
சுற்றிவளைப்பில் தமிழர்களையே பிடிக்கும் இந்திய அமைதிப்படையிடம் இருந்து தப்ப முஸ்லீம் கிராமத்திற்குச் செல்லும் கதைசொல்லியும் பிள்ளைகளும் அங்கிருக்கும் சிலரால் இரட்சிக்கப்படுவதும் சிலரால் நிந்திக்கப்படுவதும் நண்பர்களின் நழுவலும், சுயநலமும் என இவ்வவல வாழ்வை அழகாகப் படம்பிடித்துக்காட்டுவதோடு இறுதியில் பிள்ளைகள் எடுக்கும் முடிவினால் சுற்றிவளைப்பில் தப்புதலோடு நிறைவுறுகின்றது.  இதே போல பிரமாண்டம் நோக்கி…. எனும் கதை பிறர் உயிர் காக்க வேண்டிய பொலிஸார் உயிரைக்காக்க தப்பியோடுவதையும் தான்தான் தன் பிள்ளைகளைக் காக்க வேண்டும் என எண்ணிய தந்தையின் உயிரைப் பிள்ளைகளே காப்பாற்றுவதுமாகப் பின்னப்பட்டுள்ளது. இவ்வாறு இளைய தலைமுறை எடுக்கும் முடிவுகள் சரியாக உள்ளதாக இத்தொகுப்பின் பல கதைகளில் ஆசிரியர் கூறாமற் கூறிச் சென்றது, இளைய தலை முறையின் கைகளிலேயே ஈழத்தமிழரின் எதிர்காலம் இருக்கின்றது என்பதை முன்மொழிவதாகவே கொள்ள வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தின் எழில் கொஞ்சும் அழகையும் உயிர்காக்க அலையும் மனிதர்களின் வலிகளையும் படைகள் நகர்ந்த போது எனும் சிறுகதை சிறப்பாகப் பதிவு செய்கிறது. நாட்குறிப்புமுறையில் வடிவமைக்கப்பட்ட “ தொலைந்து போன கிராமவாசி” எனும் கதை, எவ்வித தவறும் செய்யாத அப்பாவிப் பாடசாலை மாணவனை இராணுவத்திடம் மாட்டிவிடுவதுமான துரோகத்தனங்கள் - சுயநலங்கள் ,இன்று வருவான், நாளைவருவான் எனக் காத்திருக்கும் பெற்றோரின் அவல மனநிலைகளும் காட்டிக் கொடுத்தவன் மரணித்த போதும் மரணிக்காத அவ்வவல எண்ணங்களும் சிறப்புறப் புனையப்பட்டுள்ளது.
சசியின் மொழி – அது கவித்துவ மொழி, துக்கத்தைக் கூட எச்சிலூறத் தக்கவகையில் எடுத்துரைக்கும் மொழி; ‘குமர்இருட்டின் அலம்பல், சைக்கிள்க்கழுதைகள், கொடிகளை நூர்த்த இருள’; என புதிய உருவாக்கமான சொற்றொடர்களையும் இன்னும் பல விவரணங்களையும் எடுத்துரைத்துக் கொண்டே போகலாம்.

இச்சிறுகதைகள் அக்கால சமூகவாழ்வின் உண்மை வாக்கு மூலங்கள்; எம்முன் விரிந்திருந்த வாழ்வின் அனுபவங்கள்; தேவையான வர்ணனைகள்; சிறந்த கட்டமைப்பையும் புனைவுத்தருக்கத்தையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கதைகள் முடிவுகளை அவாவி நிற்கவில்லை. வாசகனிடம் அனுபவத்தைப் பகிர்கின்றன. குறியீடும் படிமமும் நிறைந்த இக்கதைகள் வாசகனின் அனுபவத்திற்கேற்பத் தம்மை விரித்தும் சுருக்கியும் கொள்கின்றன. இத்தொகுப்பு ஒர் இலக்கிய பல்பரிமாண ரீதியில் கதைக்களத்தையும் காலத்தையும் பதிவு செய்கிறது. யுத்தம் மனிதனை மண்புழு வாக்கியதன் சாட்சியமாக இந்நூலைச் சொல்லலாம், ஒட்டு மொத்தத்தில் இத்தொகுப்பு ஒரு தந்தையின் மனம்; தமிழ்த்தேசியத்தின் ‘குறித்த’ காலப்பதிவு இந்திய அமைதிப்படைக்காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் அவலவாழ்வு – போராட்டம் - அத்தனைக்கு மத்தியிலும் விடுதலையை அவாவி நிற்கும் குறித்த தலைமுறையின் துணிவின் வெளிப்பாடு எனலாம்.

நான் மறைந்து விடுவேன்
நான் இருந்தேன் என்பதற்கு
எந்தத்தடயமும் இருக்காது
ஆனால் எனது இருப்பு
காற்றுக்குள் ஊதியிருக்கும் 
அதை நீங்கள் காண மாட்டீர்கள் 
எனது இருப்பின் வன்மம் 
அவலங்களின் சின்னமாய் இருக்கும்
அதை நீங்கள் அறியமாட்டீர்கள் 
தொலைக்காட்சியில் அல்லது வானொலியில்
புகைப்படத்தில் 
ஒரு பாராட்டுக்கூட்டத்தில் 
என்னை மலினப்படுத்த முடியாது 
ஒன்றும் இல்லாமைக்குள் 
எனது ஒருகண்
என்றும் சிவப்பாய் இருக்கும். 

எனும் சசியின் கவிதை -  வாக்குமூலம் இங்கு நினைவு கூரத்தக்கது. இருப்பின் வன்மமே இத்தொகுப்பு. தமிழின் அசைக்கமுடியாத ஆளுமை சண்முகம் சிவலிங்கம் (சசி) என்பதற்கு இத் தொகுப்பும் ஒர் எடுத்துக்காட்டு.
00
   


Related

விமர்சனங்கள் 167831028059317806

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item