X,Y மற்றும் கறுப்பு வெள்ளைப் பிரதி

சித்தாந்தன்

ரமேஷின் பிரதி ஒரு நூதனசாலையைப் பற்றியது. அது புராணங்களின் நூதனசாலை நெக்கி உதிரக் காத்திருக்கும் பாத்திரங்கள் அதில் உலாவித் திரிந்ததாய்ச் சொன்னான். காலம் எப்படியெல்லாம் மாறுகிறது. காற்று நுழையவும் இடைவெளியில்லாத ஒரு மனிதனின் உள்மனதிலிருந்து ஒரு பிரதியை எவ்வாறு பிறரால் கவர்ந்து கொள்ள முடிந்திருக்கும்.”

சரி ரமேஸ் பிறகென்ன நடந்தது. உங்கள் பிரதியை நீங்கள் தேடவில்லையா? யாராயினும் அதைக் களவாடியிருக்கச் சந்தர்ப்பம் இருக்கிறதா? யாரிலாவது சந்தேகம் கொள்கிறீர்களா?

ரமேஷ் அதை நீங்கள் எப்போது தொலைத்தீர்கள் என்றாவது ஞாபகமிருக்கிறதா? உங்கள் பாடசாலைப் பயணத்தின் போது நீங்கள் தொலைத்திருக்கச் சாத்தியங்கள் இருப்பதாக நான் கருதுகின்றேன். உங்களுடன் அருகிருப்பவர் யார்? சலிக்காமல் உரையாடுபவர் யார்? பஸ் நடத்துநர் மற்றும் அடிக்கடி பயணத்தில் சந்திப்பவர்கள் யார்?

இதையெல்லாம் நான் ஏன் கேட்கின்றேன் என்றால் ரமேஸ், நீங்கள் சுற்றியிருப்பவர்கள் மீது எப்போதும் அவதானமாக இருப்பது நல்லதல்லவா?
ம், என்ன மௌனமாக இருக்கிறீர்கள், ஏதாவது பேசுங்கள், என்னை ஒரு சந்தேகப்பிராணியாகக் கருதி உள்ளுர வெறுப்பது புரிகிறது.

ரமேஷ் பொழுதின் முதற் பெரும் பாகம் பகல், இரண்டாவது பாகம் அருள். மனமும் இவ்வாறானது தான் என்று நினைக்கின்றேன். எப்போதும் நீங்கள் வெளிப்படையாகவே இருக்கின்றீர்கள். யாதார்த்தத்தில் மனிதர்கள் யாவரும் இப்படியிருப்பார்கள் என நினைப்பது தவறு.

நான் ஒரு கதை சொல்லவா ரமேஷ், காட்டு மிருகங்களின் கதை உங்களுக்கு பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம். ரமேஷ் நாங்கள் காட்டு மிருகங்களின் கதை என்றால் ஏதோ சிறுவருக்கு உரிய கதை என எண்ணுகின்றோம் அது தவறு. உண்மையில் அது வளர்ந்தவர்களுக்கும் உரியவைதான். ஆனால் குழந்தைகளுக்கு கதைகளைக் கூறி படிப்பினை புகட்டும் நாம், படிப்பினைகள் வளர்ந்தவர்களுக்குமுரியன என்பதை ஏற்றுக்கொள்வதில்லை.

கேளுங்கள், இரண்டு பெரும் விலங்குகள் அவைகளை நீங்கள் x,y என்றோ A,B என்றோ எப்படியும் பெயரிடலாம். இதில் ஒன்றும் பூடகமில்லை.

இது புராணங்களில் நீங்கள் நடமாடிய காலத்தில் நடந்த கதையாக இருக்கலாம். x மற்றும் y இரண்டும் நேசம் மிக்கவை. இரண்டுமே தோழமைப்பிரதிகள். ஆனால் இரண்டுக்குமிடையிர் ஏராளம் மிருகங்கள் ஓடித்திரிந்தன. x பற்றி y யிடம் நேரானதும் மறையானதுமான ஏராளம் பிரதிகளும் x இடமும் y பற்றி நேரானதும் மறையானதுமான ஏராளம் பிரதிகளும் இருந்தன. ஆனால் இரண்டினதும் பிரதிகளும் அவற்றால் விமர்சனத்துக்குள் உட்படாத போதும் பொதுத் தளத்தில் நன்றாக விமர்சிக்கப்பட்டன.

x தன்னைப் புனித பிரதியாக பிரகடனப்படுத்துவதும் தன் மனதிலிருந்த மிருகத்தனம் வடிந்து தேவ புருஷச்சாயல் தன்னில் படர்ந்து வருவதாய் எதிர்ப்படும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தது. தான் கருதும் மகிழ்மைக்குணத்தால் லு உட்பட அநேகர் மீது குற்றச் சாட்டுக்களைக் குவித்துக் கொண்டிருந்தது.

ரமேஷ் இதில் நான் பயன்படுத்தும் பிரதி என்ற சொல் xக்கு உவப்பானதாக இருப்பதில்லை. அது எதற்குமே ஒற்றைத்தனமான அர்த்தத்தையே விரும்புகிறது. இந்த ஒற்றைத்தனம் லுயிடம் ஒரு நேயமான பிரதி இருப்பதை முறையான பிரதியை முன்நிறுத்தி மறுதலிக்கின்றது. கதைக்கு வருகிறேன். ரமேஷ்.

x யோ y யோ பிரதிபலிக்கும் புனைவு என்பது யதார்த்தமானவையாகவே அவை கருதின. இரண்;டும் பல இடங்களில் மோதிக்கொள்ள அவற்றின் பிரதிகளின் மாறான அர்த்தங்கள் தான் காரணம். ஒரு கட்டத்தில் y சொன்னது x ஐக் காணும் போதெல்லாம் தன் உணர்ச்சிகள் கொலை வெறியின் எல்லைக்கே சென்று விடுவதாக.
பிறகெல்லாம் அவற்றிடையே குரோதங்கள் பீறிட்டன. இரண்டின் பிரதிக்குமான மையங்கள் தகர்ந்து போயின. இதை y ஆரோக்கியமாகக் கருதியது. x சோ இதை பெரும் விலங்குத் துயராகக் கருதியது.
ரமேஷ் இந்தப் பிரதியில் நடந்தது என்னவென நீங்கள் உணருகிறீர்கள்?
சொல்லுங்கோ ரமேஷ், நீங்கள் ஏதாவது ஆதாரங்களை வலுப்படுத்தும் பிரதிகளை வைத்திருக்கக் கூடும். உங்கள் புத்தகப்பையைத் திறவுங்கள்.”

என்னிடம் வலுப்படுத்தும் பிரதிகள் எதுவுமில்லை. ஆனால் நான் பேச விரும்புகிறேன்.”

நல்லது ரமேஷ் உங்கள் மௌனம் கலைந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.”
நண்பர் நீங்கள் x,y என்ற இரண்டைப் பற்றிப் பேசினீர்கள். ஏன் அவற்றின் பெயர்களைக் கூறவில்லை? அவற்றை உணர்ந்து கொள்ளக் கூடிய சில அடையாளக் குறிப்புக்களையாவது முன் வைத்திருக்கலாமே. மற்றது நேர், மறைப்பிரதிகள் என்ற சொல்லாடல்கள் இந்தக் கதையில் தாக்கம் மிக்கவையாக இருக்குமென நான் நம்புகின்றேன். ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை. எனது வரைபடம் தொலைந்து போனதிற்கும் இந்தக்கதைக்கும் என்ன சம்பந்தம்?”

புரிகிறது உங்கள் குழப்பம் நீங்கள் எனதுபசியோடிருப்பவினின் அழைப்புகவிதையைப் படித்தீர்களல்லவா? அந்தக் கவிதை நன்றாக வந்திருப்பதான என்னோடு சிலாகித்திருத்தீர்கள். அந்தக் கவிதையின் முடிவுப்பகுதியை நான் உங்களுக்கு மீண்டும் ஒரு தடவை ஞாபக மூட்டுகின்றேன்.

மலைகள் தீர்ந்து போகும்
நாள் வருமெனில்
மலைகளைத் தின்று மலைகளாகிய நாம்
நம்மைத்தின்று
பசியாறலாம் என்றாய்

உண்மையில் x,y என்ற இரண்டுமே குற்றமான ஒரு மனநிலையிலிருந்து கட்டமைக்கப்பட்ட பிரதிகள் தான். இரண்டின் மனநீட்சியும் மாறுபட்ட போதும் மனநிலையின் மையம் உடைபடாப் பாறை போன்று இறுகியுள்ளன. எனவே இரண்டும் ஒன்றொடொன்று மோதி ஒரு கட்டத்தில் சிதறும் போது அல்லது எதிரெதிர்த் திசையில் விசையால் எறியப்படும் போது, அவை புசிப்பதற்கு ஒன்றுமில்லாததை உணரும் போது தம் மீது தாமே வசை கூறத்தொடங்கிவிடும் அபாயமே மேலோங்கும்
இங்கு பாருங்கள் ரமேஷ் இரண்டு பிரதிகளுமே தம்மீது தாமே விமர்சிக்கத் தொடங்கி விடக்கூடும்.”

சொல்லுங்கோ நண்பர் எனது பிரதி தொலைந்ததிற்கும் இந்தக் கதைக்கும் பிரதிக்கும் என்ன தொடர்பு. நீர் என்ன உம்மையே ஒரு புதுப்புனைவாகப் புனைகிறீரா?”

கோபப்படாதீங்கோ ரமேஷ், நீங்கள் இந்தத் தொடர்பைப் புரிந்து கொள்ள இன்னொரு பிரதி பற்றிச் சொல்ல வேண்டும்

கதையா?”

அது உங்கள் புரிதலைப் பொறுத்தது

சொல்லுங்கோ

இதற்கு கறுப்பு வெள்ளைப் பிரதி என்று நான் தலைப்பு வைக்க விரும்புகின்றேன்

தலைப்பை பிறகு வைக்கலாம் பிரதியை முன்வையுங்கள் ரமேஷ்

ம்

நிறங்கள் பற்றிய முழுமையான சித்திரம் எங்கிருந்து தொடங்குகிறது தெரியுமா?”

தெரியாது

நிறங்கலிருந்து தான் தொடங்குகிறது. என்ன நான் புதிர் போடுவதாக நினைக்கிறீரா?

கறுப்பு வெள்ளை என்பது வெறும் நிறங்கள் மட்டுமா? அவற்றிற்கு அர்த்தங்களும் பரிமாணங்களும் நிறையவுள்ளன. இந்தப்பிரதி கறுப்பு வெள்ளை சமூக நோக்கிலானது.

முதலில் கறுப்பு பிறகு வெள்ளை கறுப்பும் வெள்ளையுமான வர்ணச் சேர்க்கையில் கறுப்பு வெள்ளை இரண்டிலும் விகிதாசார அடிப்படையில் வேறுபாடான அளவில் கலவைகள் சேரலாம். ஆனால் இரண்டு பிரதிகளுமே ஒரு பொதுமைப்பாடுக்குள் வருகின்றன.”
சொல்லுங்கோ நண்பர் அது என்ன பொதுமைப்பாடு. வர்ணங்களைப் பிரதிகளாக்கும் உந்தப் பொதுமைப்பாடு சாத்தியமற்றது. பொதுமைப்பாட்டில் அவை ஒன்றுபட்டாலும் அநேகமும் கறுப்பின் அடர்த்தி வெள்ளையை மூழ்கடித்து விடும்

புரிகிறது ரமேஷ், கறுப்பு அடர்த்தியானதுதான் அதே நேரம் வெள்ளையும் அதனளவில் அடர்த்தியானது. எல்லாவற்றிற்கும் அவற்றின் அளவில் உச்சமான எல்லையுண்டு நான் விகிதாசாரம் எனக்குறிப்பிட்டது அடர்த்தியை அல்ல அளவை

சரி புரிகிறது சொல்லுங்க
கறுப்புப் பிரதி + வெள்ளைப்பிரதி= கறுப்பு வெள்ளைப்பிரதி. இந்தப்புணர்ச்சி சரி தானே
கறுப்புப் பிரதி + வெள்ளைப்பிரதி = சாம்பற் பிரதி இந்தப் புணர்ச்சியும் சரி தானே

நண்பர் நீங்கள் கூறுவதில் ஒன்று இலக்கணப் புணர்ச்சி மற்றது வர்ணப்புணர்ச்சி. இரண்டும் அவற்றின் தன்மையில் சரியானவையே. ஆனால் இதை எந்த அர்த்தத்தில் சொல்கிறீர் என்று தான் புரியவில்லை
கறுப்பை ஒரு பிராணியாகவும் வெள்ளையை பிறிதொரு பிராணியாகவும் வையுங்கள். இரண்டில் எந்தப் பிராணியை நீர் சாதுவானதாகக் கருதுவீர்?. ரமேஷ் குழம்பாதீங்கோ கறுப்பை, வெள்ளையை பிராணிகளாக்குவதில் உங்களுக்கு ஏற்படும் சங்கடத்தைப் புரிகின்றேன். கறுப்பை ஒரு கருத்தாகவும் வெள்ளையை பிறிதொரு கருத்தாகவும் சொல்லப்படும் போது இரண்டையும் பிராணிகளாக்குவதில் என்ன தவறிருக்கிறது. இந்தப் பிரதியே உயிரினங்களை சட்டமிட்டு அடைப்பதை மறுதலிக்கின்றது. ரமேஷ், “வெறும் புற அடையாளம் ஒன்றின் முழுமையாக அமையாது. அகமும் புறமும் சேர்ந்தது தான் முழுவுருவம்எனப்பலரும் சொல்லியிருக்கிறார்கள். என்னளவில் முழுமை என்று ஒன்றில்லை என நினைக்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்

நண்பர், உங்களின் இந்தக் கருத்துப்பிழையானது. நூற்றுக்கு நூறு வீதம் இதனை நான் மறுக்கின்றேன். எதற்கும் முழுமையுண்டு. அவையவை அவற்றின் அளவில் முழுமை கொண்டவை. முழுமை என்ற ஒன்று இருப்பதாலேயே குறைமை என்ற ஒன்று பற்றிப் பேசப்படுகின்றது. நீங்கள் சொல்வதன் படி கறுப்பு வெள்ளை என்பது அவற்றின் தன்மைகளில் முழுமை கொண்டவை. இரண்டையும் பிரதிகளாக்கும் புத்தியில் நீர்தான் அவற்றிற்கு முழுமை, குறைமைகளைப் புனைய முடியும். ஆனால் அவற்றின் அர்த்தத்தில் அவை முழுமையானவை.”

ரமேஷ் கொஞ்சம் பொறுங்கோ, எல்லாவற்றிற்கும் ஒரு முழுமை இருப்பின் மேலும் மேலுமேன் புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் நிகழுகின்றன. ஒரு கண்டுபிடிப்புடனேயே அது முழுமையுறுவதாய் ஏன் திருப்தி கொள்ள முடிவதில்லை

ஒன்றின் மீதான திருப்தியின்னை இன்னொன்றின் மீதான கண்டுபிடிப்புக்கு தூண்டுகிறது. இங்கு திருப்தியின்மை பொருளால் விளைந்ததல்ல. அது பயனாளியின் மனதால் விளைந்தது. அதற்காகப் பொருளை குறைமிக்கதாய் கூறுவது பொருத்தமானதல்ல.”

சரி ரமேஷ் இதை விடுவம். கறுப்பு வெள்ளைப் பிரதி பற்றிப் பேசுவோம். பேசும் போது இந்த விவாதத்திற்கும் பொருள் புரிய முடியும். ரமேஷ் நீண்ட நேரம் ஒரு இடத்தில் அமர்ந்து பேசுவது சிரமமாக இருந்தால் சொல்லுங்கோ கொஞ்சம் நடக்கலாம்

ஓம் ஓம்நடப்பம்

சரி கறுப்பு வெள்ளை என்கின்ற இந்த இரண்டும் தனித்தனிப்பிரதிகள் தான் சமயத்தில் கூட்டுப் பிரதிகளாகியும் விடுகின்றன. இவை இரண்டும் தன் தனித்தன்மையை நிலை நாட்டுவதில் காட்டும் அக்கறையில் தான்  பிரதியின் மையம் கூர்மையடைகிறது.”

நண்பர், கூர்மை என்பது என்ன? மையத்தின் திரட்சியா? மையம் என்பதை ஏற்கிறீர்களா?”

எதற்கும் மையம் உண்டு என்பதை நான் ஏற்கின்றேன் ரமேஷ். ஆனால் மையத்தை சிதறடிக்க லேண்டும் என்பதுதான் என் அவாஇந்தப்பிரதியிலும் இது தான் நிகழ்ந்தது. இரண்டின் கூர்மையடைவில் ஏற்பட்ட சிதைவு மையத் தகர்ப்புத் தானே.”

இதைத் தானே x,y கதையிலும் சொன்னீர். ஒன்றை இன்னொன்றால் விளக்குவது என்பதே ஒன்றின் போதாமை தானே.”

போதாமையில்லை ரமேஷ் மேலும் அர்த்தத்தை வலுப்படுத்தும் யுக்தி. அதைவிட x,y கதைப் பிரதிக்கும் கறுப்பு வெள்ளைப் பிரதிக்கும் மையமில்லை அதனால் ஒன்று போன்றதான தோற்றத்தைத் தரலாம். ஆனால் இரண்டிலும் வேறுபாடிருக்கின்றது.”

சரி எனது மனப்பிரதி தொலைந்ததிற்கும் இந்த இரண்டு பிரதிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது.”

தொடர்பிருக்கு, உமக்கு உமது மனத்திற்குச் சூழ இருப்பவர்களுக்கும் என்ன தொடர்பிருக்கோ அது போன்ற தொடர்புதான்

நண்பர் ஒரு புனைவு அல்லது பிரதி கேட்பவனுக்கு அல்லது படிப்பவனுக்கு ஏதாவது ஒரு நுழைவு வாசலையாவது கொண்டிருக்க வேண்டும். உமது இந்தப்பிரதி வாசல்களடைக்கப்பட்ட பிரதி. அதைவிட இருண்மை அடர்ந்த பிரதி. இதற்குள் வாசகனால் நுழைந்து விட முடியுமா சொல்லுங்க? தவிர இதை நான் அருவப் பனைவு என அழைக்க விரும்புகிறேன்.”

“  சரி ரமேஷ் நீங்கள் கருதுவதன் படி எங்களால் எல்லாப்பிரதிகளுக்குள்ளும் இலகுவாக நுழைய முடியுமாக இருக்குமெனில் இங்கு படிப்பாளிக்கும் பிரதியை முன் வைத்தவனுக்கும் இடையில் என்ன நிகழ்வதாக கருதுகிறீர்கள்

நண்பர் இங்கு தான் நீங்கள் பிழை விடுகிறீர்கள். நான் x ஐப் போல ஒற்றை வாசிப்பைக் கோரவில்லை. அது சாத்தியமில்லை என்பதும் தெரியும் அதைவிட புனைவுப்பிரதி என்பது நிலையான அர்த்தம் கொண்டதல்ல என்பதையும் நான் புரிகின்றேன். ஆனால் வாசகனை நுழைய முடியாதவாறு மொழியில் பரிசோதனைகள் புரிய வேண்டுமா? என்பது தான்  என் கேள்வி.”
சரி ரமேஷ் முதலில் அரூவப் புனைவு என்றால் என்ன என்பதை விளக்குங்கள்

நண்பர் அருவம் என்பது உருவம் என்பதன் எதிர்ப்பதம் அப்படித்தானே. உருவம் என்பதற்கு புறக்காட்சிக்கான வடிவம் இருக்கின்றது. இதனால் அதை இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அருவம் என்பது புறக்காட்சியில் புலனகாதது உருவத்தைப் புரிந்து கொள்ளுமளவிற்கு அருவத்தைப் புரிந்து கொள்ள முடியாது. ஆகவே அருவம் என்பதற்கு பொதுவான மதிப்பீடு இல்லை. இதுக்கு எப்படியான மதிப்பீட்டை உருவாக்க முடியும்? இதனால் தான் உங்கள் பிரதியையும் அருவப்பிரதி என்கிறேன்.”
உங்கள் விளக்கம் புரிகின்றது ரமேஷ். இன்னும் ஒன்றை நான் கூற விரும்புகின்றேன். நீங்கள் கூறிய அருவம், உருவம் என்பவற்றோரு அருவுருவம் என்பதையும் சேர்த்திருக்கலாமே

அதில் எனக்கு உடன்பாடில்லை, அருவுருவம் என்பது மிதமான ஒரு கனவு நிலை. புனைவுப் பிரதியைப் பொறுத்த வரை அது சாத்தியமேயில்லை. அருவம் உருவம் என்பதற்கு திட்டவட்டமான கருதுகோளுண்டு. அருவுருவம் என்பதற்கு திட்டவட்டமான கருதுகோளில்லை.”

சரி ரமேஷ் ஒரு பிரதிக்கு திட்டவட்டமான ஒரு வடிவம் தேவை என நினைக்கிறீர்களா”?

ஓம் ….. ஓம் வடிவம் என்ற ஒன்று தேவை தானே

கொஞ்சம் பொறுங்கோ ரமேஷ் நாவுலர்கிற மாதிரி இருக்கு அந்தக் கிணற்றில் கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு வருகின்றேன்.”
நானும் வருகிறேன்

சரி எதில் விட்டீர்கள்

நானிதை ஏற்கவில்லை. திட்டவட்டமான வடிவம் தேவையென படைப்பாளியிடம் எதிர்பார்ப்பது சரியாக இருக்காது. ரமேஷ் இன்னொரு பிரதியை இந்த இடத்தில் முன்வைக்க விரும்புகின்றேன்.”
சொல்லுங்கோ

ரமேஷ் இது இரண்டு பறவைகள் பற்றிய பிரதி, ஒன்று இன்னொன்றை உறிஞ்சிக்குடிக்கும்மாயப்பிரதிஇப்பிரதியின் படி பறவை ஒன்றை நீசன் என்றும் மற்றையதைத் தாசன் என்றும் இந்தப் பிரதியாளர் பெயரிட்டிருந்தார். இந்தப்பிரதி பறவைகள் பற்றியது என்பதால் பலராலும்சுதந்திரப்பிரதிஎனப் பெயரிடப்பெற்றது.”

பிரதியை முன்வையுங்கோ.”

பிரதியின் படி நீசன் மிகச் சாதுவானது. தாசன் மிகவும் கொடூரமானது. இரண்டும் ஒரு கூட்டிலேயே வாழ்ந்தன. நீசன் இரை சேகரிக்கும் பறவையாகவும் தாசன் அதை உண்ணும் பறவையாகவும் இருந்தது.”
இந்தப்பிரதியின் மூன்றாவது அதிகாரத்தில்த்தான் பிரதியின் உச்ச கட்டமான சிதைவு நிகழ்ந்தது. நீசன் கூரிய அலகுள்ள மிகவும் கொடூரமாகத் தோற்றமளிக்கும் பறவை. அது நுகரி வட்டத்தின் படி மண்புழு போன்ற சிறு உயிரினங்களையே அதிகமும் உணவுக்காகப் பிடிக்கின்றது. ஆனால் தாசனோ மிகவும் சாதுவான பறவை போன்ற தோற்த்தைத் தந்தாலும் அது மிக்க மாமிச உண்ணி. வழமை போல நீசன் சேகரித்து வைத்த மண்புழுக்களை அது திண்ணத்தொடங்கிய போதுதான் அதற்கு அந்த சந்தோகமே தொடங்கியது. வழமையாக 30 சென்ரிமீற்றர் வரை நீளமாக இருக்கும் மண்புழுக்கள் அன்று 5சென்ரிமீற்றர் வரை சிறிதாக இருந்தன. தாசன் கோபம் கொண்டது. நீசன் திண்றுவிட்டு தனக்கு மீதி வைப்பதாய் எரிச்சல் உற்றது. அந்த எரிச்சல் கோபமாக மாறி நீசனை விரட்டி விரட்டிக் கொத்த தொடங்கியது. உண்மையை நீசன் பல முறை எடுத்துச் சொன்ன போதும் தாசன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் தன் அடங்காத பசிக்கு நீசனையே உண்ணத் தீர்மானித்து விரட்டியது.”

ரமேஷ் இந்தப்பிரதியில் நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். சாதுவான தோற்றம் கொண்ட ஒரு பறவையிடத்து கொடூரமனமும் கொடூரமான தோற்றம் கொண்ட பறவையிடம் மென்மையான மனமும் இருக்கின்றது.
இந்த இரண்டு பறவைகளுமே இரண்டு முரண் பிரதிகள் அவற்றின் பெயர்கள் அவற்றின் இயல்புக்கு பொருந்தி வரவில்லை. இங்கு பிரதிக்கு அப்பால் இன்னொரு அரூபமான பிரதி இழையோடுகிறதை நீங்கள் அவதானிக்கலாம்.”

நண்பர் அது என்ன அரூவமான பிரதி

அது நீங்கள் கண்டயை வேண்டியது. இதை எப்படிப் புரிந்து கொள்வதொன்றால். இதை முற்று முழுதான பறவைப் பிரதி எனக்கொள்ளாமை மூலந்தான்.”

என்ன கதைக்கிறீர்! பிரதியை ஆரம்பிக்கிற போதே இதை பறவைப் பிரதி என்றே முற்குறிப்பிட்டீர் பிறகு இப்ப மாறிக் கதைக்கிறீர்.”

ரமேஷ் கொஞ்சம் பொறுங்கள் நான் முற்குறிப்பு எதையும் தரவில்லை. அது பிரதி தன் தேவை கருதி உருவாக்கியவை. இதில் குறிப்பு என்ற பதமே அபத்தமானது.”

என்ன அபத்தம் உந்தப் பிரதியே ஒரு அபத்தமான பிரதி தான்
அபத்தம் என்ற பதம் இந்த உரையாடலில் நான் தவிர்த்திருக்க வேண்டிய பதந்தான்

சரிசரி பெருந்தன்மைப்பாசாங்கு காட்டாமல் விசயத்துக்கு வாருங்கள்
ரமேஷ் இந்தப்பிரதியை யாதார்த்தமற்றது எனச்சொல்கிறீர்கள் போல எனக்குபடுகிறது

ம்

பிரதியின் யாதாரத்தம் உங்களைப் பொறுத்தது. இந்த இடத்தில் தான் நீங்கள் சறுக்குகிறீர்கள். பிரதி எதைக் கோருகிறது. தெரியுமா? ஒரு யதார்த்தமான, இயல்பான மனநிலையை

பிரதி கோருகிறது என்பதற்காக படிப்பவன் அத்தகைய மன நிலையைச் சேர்க்கையாக உருவாக்க முடியாது.”

நான் மனநிலை உருவாக்கம் பற்றிப் பேசவில்லை. படிப்பாளியின் மனம் பிரதியை வாசிப்பதற்கான ஏது நிலையைப் பெறும் போது இது சாத்தியமாகும் என்கிறேன்.”

ஒரு போதும் இது நடக்காது

எப்படிச் சொல்கிறீர்கள்

படிப்பாளியின் மனநிலை பற்றி நீங்கள் சொல்லும் விதமே நம்பத் தகுந்ததாயில்லை.”

நண்பர் நானிதை ஒரு இலகுவான உதாரணம் மூலம் விளக்குகின்றேன். நீங்கள் எப்போது உணலு உண்பீர்கள்.”

பசிக்கும் போது

பசிக்கும் போது இயல்பாகவே உங்களுக்கு உணவில் நாட்டம் ஏற்படுகிறது. எப்படியாவது சாப்பிட வேண்டும் என நினைப்பீர்கள். பசிக்காக எதையாவது உண்ட பின் தான் உங்கள் மனநிலையில் உணவுக்கான தவிப்பு இல்லாது போகும் இதைப் போல தான் பிரதியை வாசிப்பதற்கான உந்துதலும் அமையும்

நண்பர் பசி என்பது மனித உடலின் தேவையால் விளைவது. பிரதி வாசிப்பு என்பது அவ்வாறில்லைத் தானே

தேவை என்பது வெறும் உடலியல் தேவையென நீங்கள் கருதுவது தவறு. உளத்தேவையும், இருக்கல்லவா? பிரதி வாசிப்பு உளத்தேவையால் வருவது
நண்பர் இரண்டு தேவையையும் உணர்வது மனந்தானே ஆதலால் தேவை என்பது ஒரு பொதுமை என்பதை நீங்கள் விளங்க வேண்டும்
நானும் இதைத்தானே சொல்கிறேன். ரமேஷ் எப்படியாக இருந்தாலும் மனந்தான் முதன்மை அலகு

சரிசரி இனியாவது என் மனப்பிரதி தொலைந்ததிற்கும் உங்கள் பிரதிகளுக்குமுள்ள தொடர்பைச் சொல்வீர்களா

அதைத் தானே இவ்வளவு நேரமும் விளக்கிக் கொண்டிருக்கின்றேன்.”
பூச்சாண்டி காட்டாதிங்க நண்பர் என் மனப்பிரதியின் தொலைவு குறித்து நீங்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் வினாக்களுக்கும் உங்கள் பிரதியில் எந்த விடையுமில்லை.”

அப்படிச் சொல்லாதீங்கோ ரமேஷ் நீங்கள் தானே பிரதியின் அரூப நிலை பற்றி பல கருத்துக்களை முன் வைத்தீர்கள். அரூபமான பிரதிக்கு என்ன ஆதாரமிருக்கிறது.”

இதைப் பற்றியெல்லாம் ஏற்கனவே கதைத்தாகி விட்டது. இனிக் கதைக்க ஒன்றுமில்லை.”

நிறைய இருக்கு ரமேஷ்

அரூபமான ஒரு பிரதியைத் திருடிய மனம் ஒரு அரூபமானது தானே. அப்படியிருக்கையில் இரண்டு அரூப மனங்களும் சேர்ந்து உருவாக்கம் வினையாற்றுகை ஏதோ ஒரு கட்டத்தில் பிரதியைக் கொண்டு வந்து சேர்க்குமல்லவா.”

இல்லை அரூபங்களின் வினையாற்றுதல் நீங்கள் ஏற்கனவே கூறியவைகளின் படி அரூபத்தின் திரிதலாகவே அமையும். இங்கு பிரதியில் ஏற்கனவே இருந்த அடையாளம் சிதறடிக்கப்பட்டு பிரதி தன் சுய நிலையை இழந்து விடுமல்லவா?”

இல்லை அரூபங்களின் வினையாற்றுதல் நீங்கள் ஏற்கனவே கூறியவைகளின் படி அரூபவத்தின் திரிதலாகவே அமையும். இங்கு பிரதியில் ஏற்கனவே இருந்த அடையாளம் சிதறடிக்கப்பட்டு பிரதி தன் சுயநிலையை இழந்து விடுமல்லவா?”

உண்மையில் ரமேஷ் x,y பிரதியும் இதைத்தான் முன்நிறுத்துகிறது. நான் சொன்னது உங்களிடமிருந்து தவறிய பிரதி எந்த இரும்புச் சுவர்களால் அடைக்கப்பட்டாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அது தன்னை வெளிப்படுத்திவிடும் என்பதைத் தான்

அப்படியென்றால் என்னுடைய பிரதி என்னுடையதாகக் கிடைக்காதா?
ஒரு போதும் சாத்தியமில்லை

உங்கள் இந்தக் கோட்பாடுகள் கோணலானவையாகப்படுகின்றன.”
உண்மை தான் கோட்பாடுகள் ஒரு போதும் நேர்கோட்டில் பயணிப்பதில்லைத் தானே

கோட்பாடு என்பதற்கு திட்டவட்டமான வரைவிலக்கணம் இல்லை என்கிறீர்களா”?

இல்லை

அப்படியென்றால் ஒரு கோட்பாட்டை எப்படி விளங்கிக் கொள்வது

கோட்பாடு என்பதை நான் இயங்கு நிலைப் பொருண்மையாகக் காண்கிறேன். இங்கு இயங்குதல் என்பது தான் கோட்பாட்டுக்கு வடிவம் கொடுக்கின்றது. ஆதலால் எந்தக் கோட்பாடும் உலக மாற்றம், சமூக மாற்றம் என்பவற்றுக்கு உட்பட்டே அமையும், இத்தகு மாற்றங்களுக்கு உள்ளாகாத, ஏற்காத கோட்பாடுகள் பெயரளவிலான கோட்பாடுகளாக மட்டுமே இருக்க முடியும்

விளங்குகிறது நீங்கள் கோட்பாடுகளுக்கு திட்டமான வரையறை இல்லை என்கிறீர்கள். ஆனால் கோட்பாடுகளைப் பிறருக்குக் கற்பிப்பவர்கள் அவற்றிற்கு வரைவிலக்கணங்களைக் கொடுக்கின்றார்களே.”
அவற்றை அவரவர் நிலை சார்ந்து உருவாக்குகிறார்கள். அல்லது யாரோ சொன்னவற்றைத் தாமும் மீள ஒப்புவிக்கின்றார்கள். மாறும் உலக இயக்கத்தை இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களில்லை.”
அப்படியென்றால் கோட்பாடுகளை பின்பற்றுபவர்களை முட்டாள்கள் என்கிறீர்களா?”

அப்படிச் சொல்லவில்லை

இல்லை உங்கள் வாதம் அப்படி சொல்வதாகத்தான் தெரிகிறது.”
ரமேஷ் நீங்களே உங்களுக்கு சார்பாக என் வாதங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள்

சும்மா பேக்காட்டாதீங்கோ நான் வெளிக்கிடப்போறன்
என்ன அவசரம்

அவசரம் ஒன்றுமில்லை ஒரு  பொழுமை வீணடித்த குற்றவுணர்வு இப்பத்தான் தெரிகிறது

குற்றவுணர்வா?”

திருப்பி யோசிக்கையில் நாம் உரையாடியவை சாத்தியமற்றவை போலப்படுகிறது

ரமேஷ் நீங்கள் உங்கள் பிரதி உங்களுடையதாகக் கிடைக்காது என்ற ஆற்றாமையில் பேசுகிறீர்கள். இவை முக்கியமான உரையாடல் இதை எப்படியாவது பதிவு செய்ய வேண்டும்.”

விசர்த்தனமா செய்யாதீங்கோ, யார் இதையெல்லாம் பிரசுரிப்பார்கள்?”

யாராவது இருப்பாங்கள்

சரி சந்திப்பம்

ம்

00

Related

சிறுகதைகள் 7597449850601153282

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item