உடைபடும் சட்டகங்கள் : அலைவுறும் பிரக்ஞை

ந. மயூரரூபன்


டைப்பு என்பது முற்றுமுழுதான தூய உருவாக்கம் அல்ல.  ஏனெனில் அது இல்லாத ஒன்றிலிருந்து உருவாவதுமல்ல.  எங்கோ ஒரு வெளியிலிருந்து பிரம்மமாய் தோற்றங்கொள்வதுமல்ல.  அது ஒரு தேதையிலிருந்து உருவாவது.  எமக்குள் அலைந்து கொண்டிருக்கிற தேவையின் உந்துதல் உருவாக்கித் தருகின்ற வெளிப்பாட்டின் அடையாளமே இது.

இப்படி ஒரு படைப்பு உருவாகிறபோது அதன் முழுமை எப்படி நிகழ்கிறது| முழுமையாக்கும் சட்டகங்கள் எவை என்கிற கேள்விகளும் உருவாகின்றன.

அது படைப்பாளியின் பிரக்ஞையா?
அவனது நனவிலி மனமா?
ஏதாவது மாதிரிச் சட்டகமா?

பொதுவாக எந்தத் தனிச் சட்டகங்களும் தனக்குரியதாக ஒரு படைப்பை அடையாளப்படுத்த முடியாது.  இவற்றுடன் வாசகனின் மன - மொழி இயங்கியல் இணைகிற போதுதான் ஒரு படைப்பின் முழுமையை நாம் உணரமுடியும்.

இதனால் ஒரு படைப்பு| குறித்த ஒருமைப்புள்ளியை நோக்கி நகர்வது சாத்தியமற்றதாகிறது.  இங்கு எழுத்தின் மையம் அழிந்து போகிறது.

இந்தப் படைப்பின் முழுமைக்குள் படைப்பாளியின் சுயம் வேறற்றுக் கலந்துள்ளது.  சமூகம், இனம், நாடு, உலகம் என்பன கட்டமைத்த புனைவுக்குள் அமிழ்ந்துள்ள அவன்| தனது சுயத்தை அவற்றின் இயல்பு வெளியிலேயே கட்டமைத்துள்ளான்.

“கடவுளர் அலையும் காலத்தில்
இரவில் புணர்ச்சிக்கலையும் நாய்களினது
காலடி ஓசைகளும் கடவுளர்களுடையவைதான்
ஒப்பாரிகளும் விசும்பல்களும்
ஓலங்களினாலுமான நகரத்தின்
சனங்களின் பிரார்த்தனை
தெருவில் சுடப்பட்டு இறந்தவனின்
இறுதி மன்றாடலாயும் கதறலாயும்
நிர்க்கதியாய் அலைகிறது.
(கடவுளர்களின் நகரங்களில் வாழுதல், சித்தாந்தன்)

போர்  சிறைப்பிடித்த காலத்தின் இருப்பினைப் பேசும் கவிதையின் ஒரு பகுதி இது.  போர்ச் சூழலின் பயங்கரம் இல்லாத ஒன்றல்ல.  தூய புனைவுமல்ல.  வாசகனின் மனதில் கடவுளரின் தோற்றம்| அவனின் அறிகைக்கும் நனவிலி மனதின் உருவாக்கத்திற்குமேற்ப திறந்துகொள்ளும்.  ஒரு படைப்பாளியின் சுயம்| அதிகாரத்தின் மீதான விமர்சனமாய், ஒடுக்கப்பட்டோரின் சார்பு நிலை தரும் அகவயமாய், புனைவின் சொற்களின் அரசியல் தரும் படிமமாய் வெளிப்படுகிறது.

“இவை தவிர
ஒருவன் கொல்லப்படும் போது 
பெரிதாக என்ன நடக்கப் போகின்றது
இன்னொருவன் கொல்லப்படுவான்
என்பதைத் தவிர”
(ஒருவன் கொல்லப்படும்போது, அலறி)

படைப்புத் தருகின்ற சூழல் - அதுவொன்றுதான்.  காலத்தைப் போர் சிதைத்த கணங்கள் அவை.  சாவின் அவலத்தை - அது உருவாக்கியுள்ள பிரக்ஞையை இக் கவிதை பேசுகிறது.
“ஒருவர் பின்னொருவராய்
சாகக் காத்திருக்கிறோம்
பிணங்கள் விழ விழ
பிணங்களாயே விழ”
(இருள், கருணாகரன்)

இருப்பின் உடனடிக் கணங்கள் வரிகளில் தொற்றியிருக்கின்றன.  வாழ்வின் மீதான அவநம்பிக்கையும் தொடரனுபவத்தின் பின்னான நிதான எதிர்பார்ப்பும் இங்கு வெளிப்படுகிறது.

“உண்மையின் புலன்கடந்த உறுதிப்பாடுகள் இறந்துவிட்டன| மொழி விளையாட்டுக்களின் துயரமான போராட்டத்தில் பொதுப் பகுப்பு முறைகள் மறைந்துவிட்டன| வட்டாரச் சொல்லாடல்களைக் கடந்த உண்மையான விதிமுறைகள் என்று எதுவுமில்லை| இருப்பதெல்லாம் தம்மை நியாயப்படுத்திக் கொள்ளப் போராடும் வட்டாரக் கதைகூறல்களின் முடிவற்ற போர் மட்டுமே”
- செய்லா பென்ஹபிப் (1992)

நாங்கள் இதுவரை காலமும் பேசிவந்த| அதியுன்னத கருத்தியல்களும், நம்பிக்கைகளும் காலாவதியாகிவிட| பிரக்ஞை மாற்றத்தினை சமகால ஈழத்துக் கவிதைகளில் நாம் காணமுடியும்.  குறிப்பாக கோட்பாட்டு நிலையிலும் சமூக சீர்த்திருத்த - மாற்றங்களை பேசிவந்த இயல்பு முற்றுமுழுதாக புறந்தள்ளப்படுகின்ற சூழல் இது.

ஒரு உடனடித் தன்மையை (ஐஅஅநனயைஉல) நாம் இங்கு அனுபவிக்க முடியும்.  பிரட்ரிக் ஜேம்சன் வான்கோவினதும், அன்டிவரோனினதும் காலணி ஓவியங்களை ஒப்பிட்டு இதனை தெளிவுபடுத்துகிறார்.  அன்டிவரோலின் ‘டைமன்ட் தூள் ஷீ’ எனும் ஓவியம் சிறப்பானது எனினும் அங்கு பார்ப்போனோடு பேசக்கூடிய பண்பு இல்லை.  பார்ப்போன் ஓவியத்தில் தனக்கான ஓரிடம் உண்டு என்பதை உணர்ந்துகொள்ளவே முடியாது.  ஆனால் வான்கோவின் ‘ஒரு சோடி பூட்ஸ்கள்’ ஓவியம் அவ்வாறானதல்ல.  அது நவீன காலகட்டத்தைச் சேர்ந்த காலணி ஓவியத்தோடு பார்ப்போனுக்கு உறவை ஏற்படுத்தவல்லது.  அது ஹிட்லரின் அவுஸ்விட்ஸ் (போலந்தில் உள்ளது) சித்திரவதை முகாமில் குவிக்கப்பட்ட காலணியில் தொங்குவதை பார்ப்போனுக்கு நினைவூட்டுவது.

இதுவரை பார்க்கப்பட்டுவந்த கவிதை தொடர்பான எண்ண அடுக்குகள் மாற்றங் கண்டுள்ளன.  பிரட்டிக் ஜேம்சன் குறிப்பிடுகின்ற உடனடித் தன்மையை இங்கும் அடையாளப்படுத்த முடியும்.

போர் - போருக்குப் பின்னான சூழமைவால் சுழன்றோடுகின்ற - அலைகின்ற நமது மனங்கள் மரபார்ந்த படைப்புச் சிந்தனை வெளிகளிலிருந்து - வரைந்த சட்டகங்களிலிருந்து நகர்ந்திருக்கிறது என்பதை சமகால ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் சொல்லுகின்றன.

00

Related

கட்டுரைகள் 2614331655335012316

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item