அஞ்சலி -கவிஞர் குமரகுருபரன்


“ஞானம் நுரைக்கும் போத்தல்“, “மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது“ உள்ளிட்ட பல கவிதை நூல்களைத் தந்த கவிஞர் குமரகுருபரன் அகாலமரணம் அடைந்துள்ளார். எளிமையும் ஆழமுமிக்க அவரது கவிதைகள், வாழ்வின் எளிமையான பக்கங்களையும் கூர்ந்து அவதானித்து வெளிப்படுத்துபவை.

அண்மையில் கனடா இலக்கியத் தோட்டத்தின் “இயல் விருது“ குமரகுருபரனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
மரணம் யாவற்றையும் குலைத்துப் போட்டுவிடும்.

குமரகுருபரனுக்கு நீள்கரையின் அஞ்சலிகள்.

குமரகுருபரனின் கவிதைகள்
…………………………………………………………………………………………………………………………………………….
இறந்து போவதைப் பற்றி
யோசிக்காத ஒருவரேனும் இருந்தால்
உயிர்வாழ்வதைப் பற்றி பேசலாம்.

அவ்வளவு துயரம் உயிரோடிருப்பது
என்பதை சொல்ல ஆசைப் படும் எவனும்
இறக்கும் வரை அதை மூச்சு விடுவதில்லை.

இறந்து போவதன் உச்சநிலையை
சொல்வதற்கு இறந்து போனவனே
தேவைப் படுகிறான்

இறந்து போனவனைப் புகழ்வதில்
இறந்து போன இதிகாசத்தை உயிர்ப்பிப்பதில்
இறந்து போன தத்துவங்களை கொடியேற்றுவதில்
இறந்து போன பழக்க வழக்கங்களைப் பேணுவதில்

இறந்த மூங்கில் துளைகள் இசைக்கும் காற்றென

இறப்பை ஞாபகப் படுத்திக் கொள்கிறார்கள் யாரும்.

உயிரோடிருப்பதற்கான ஆகமங்கள்
எவரிடமும் இல்லை.

தவிர,

உண்மையிலேயே
யாரும் உயிரோடு இல்லை.
00


யாரும் யாருடனும் இல்லை
இனிய கீதம் ஒன்று காற்றில் தவழ்ந்து வருகிறதைப்
போல் ஆரம்பமும் முடிவும் அற்றவை தீர்மானிக்கிற
பொழுதுகளில் நிரம்பி வழிவது ஒருத்தருக் கொருத்தர்
நிகழ்த்தும் துரோகங்கள்.
அவை உண்மையில் அப்படி ஆரம்பித்திருக்காது
வேறொன்றும் இல்லை எனும்போது அப்படியும்
சொல்லிக் கொள்ளலாம்.
சொல்வதை யாரிடம் சொல்வீர்கள்
ஒரு மரத்தைப் போல கற்புடன் யாரும் இங்கில்லை
வேறொரு மனதின் வீச்சத்துடன்
நம்மை எல்லாரும் நெருங்கி அணைக்கிறார்கள்
அது தவறென்று சொன்னால்
வாசமற்று உதிர்வீர்கள்
எப்படியெல்லாம் வருகிறது வாழ்க்கைக்கான அவசியம்
தூரப் போனால்
எல்லாம் சரியாகும்.
யாரேனும் அருகில் இருக்கிறார்களா
என்பதைச் சோதிக்கும் போது
நாம் இறந்துவிடுகிறோம்.
வானத்தில் மின்மினி கண்ணசைக்கும்போது
இரவை ஒரு பொழுதும் கடக்க முடிவதில்லை
அவை எதுவும் நமக்கானதும் இல்லை.
கண்மூடி உறங்குகையில் எதுவுமே இல்லை
இதைப் பொய் என அறிவிக்க வாவது
யாரும் யாருடனும் இருக்கிறீர்களா?

00

Related

அஞ்சலி 1720191057093750371

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item