சமூக வாழ்வின் விழுமியங்களுக்கூடான பயணம்

 மைதிலியின் நாவல்களை முன்வைத்து 

சி.ரமேஷ்

நாவல்கள் கதைக்கருவாலும் வடிவமைப்பாலும் பாத்திரப்படைப்பாலும் உத்திகளாலும் சிறந்த மொழிநடையாலும் தம்மை தன்னிகரற்ற நாவல்களாகத் தக்கவைத்துக் கொள்கின்றன. காலச்சூழலுக்கேற்ப சீர்திருத்த நோக்கோடு சமூக கருத்தாக்கங்களை உள்வாங்கி எழுதப்படும் நாவல்கள் மக்களை வயப்படுத்தி விழிப்புணர்வைத் தூண்டு வல்லனவாக உள்ளன. பெண்களின் சமூகத் தகுதிநிலை, இருத்தலை (existence) அறிந்து கொள்ளவும் அவர்களின் மீதான பாலினப் பாகுபாடு (Discrimination sex) தொடர்பான சமூகப் பண்பாட்டு வேர்களை இனம் கண்டு கொள்ளவும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை அறிந்து கொள்ளவும் பெண்களுக்கு எதிரான அடக்கு முறை, சுரண்டல் முறைகளை உணார்ந்து கொள்ளவும் பெண்புனைவாக்கங்கள் துணை செய்கின்றன. அவ்வகையில் வெளிவந்த  நாவல்களே மைதிலி தயாபரனின் சொந்தங்களை வாழத்தி, வாழும் காலம் யாவிலும்.

மைதிலி தயபரனின் கலை உலகப்பிரவேசம் 1992களில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மத்திய வித்தியாலயத்தில் .பொ..சாதாரண தரம் படிக்கும் போது ஆரம்பமாகியது.நாடகம், கவிதை, சிறுகதை, பேச்சு, பாடல், நாவல் என பன்முகத்தளங்களில் அவர் இயங்கினார். 1997இல் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பொறியியற் துறையில் கல்வி கற்ற போது சிறுகதை, கவிதை, நாடகங்களின் ஊடாகவும் தனிமுத்திரை பதித்தார்.1998 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக் கழகத்தால் நடாத்தப்பட்ட சிறுகதையாக்கப் போட்டியில் முதலாம் இடம் பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நிலவே நீ மயங்காதே நாவல் இந்திரா பிரியதர்சினையை வவுனியாவின் முதல் பெண் நாவலலாசிரியராகத் தமிழுக்கு அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்க்கவி தன்னை இனி வானம் வெளிச்சிடும், ஊழிக் காலம் நாவல்களின் ஊடாகத் தன்னை மிகச் சிறந்த நாவலாசிரியராகப் பதிவு செய்தார். இப்பிற்புலத்தில் இணைந்து கொண்டவரே மைதிலி தயாபரன் ஆவார். நடுத்தரமக்களை மையமாகக் கொண்டு படைக்கப்பட்ட வாழும் காலம் யாவிலும், சொந்தங்களை வாழ்த்தி. ஆகிய இவ்விருநாவல்களும் பண்பாடு, மனிதாபிமானம், பெண்ணியம், சட்டம், சம்பிரதாயம் என்னும் பொருண்மையில் தம்மைக் கட்டமைத்துக் கொள்கின்றன. ஆண்மையவாதங்களை உடைத்து பெண்ணுரிமைவாதங்களை முன்னெடுக்கும் சராசரிப் பெண்நிலைப்பாட்டில் இருந்து விலகி குடும்பங்களுக் கிடையில் நிகழும் உறவுமுறைச் சிக்கல்களையும் சமூக குடும்ப முன்னேற்றத்துக்காக உழைத்து ஓடாய்த் தேயும் மனிதாபிமானமிக்க மக்களையும் காட்சிப்படுத்துகிறது. சமுதாய அமைப்பில் காணப்படும் குறைபாடுகளை சட்டத்தின் மூலமும் குடும்பங்களுக்கு இடையில் நிலவும் பிரச்சினைகளை மனிதாபிமானத்தின் மூலமும் பரஸ்பரம் நட்பின் நிமித்தம் ஒன்று சேரும் உறவுகளுக்கு இடையில் நிகழும் சிக்கல்களை அன்பின் மூலமும் களையலாம் என்பதை வெளிப்படுத்தும் நாவலே வாழும் காலம் யாவிலும்.

சீதனப்பிரச்சினை, வெளிநாட்டு மோகம், குடும்பப் பிரச்சினை, திருமணப்பிரச்சினை, விவாகரத்து என யாவற்றிலும் பெண்கள் படும் துன்பங்களை மென்னுணர்வுத் தளத்தில் பதிவு செய்யும் இந்நாவல் மனித வாழ்வியலுக்கூடாக சமூக யதார்த்தத்தை தக்க வைத்துக் கொள்கிறது. வறுமையிலும் செம்மையாக வாழ்ந்து கல்வியுலகில் நிகழ்த்தும் சாதனைகள் வாழ்வை  உயர்த்தும் என்பதை பிரேம், பிரியங்காவின் வாழ்வினூடாக இந்நாவலில் எடுத்தும் காட்டும் மைதிலி தயாபரன் ஒத்த சிந்தனை மிக்கவர்கள், ஒரே தொழிலில் ஈடுபவர்கள் மனதளவால் இணைந்து, வாழ்வில் இணையும் போது அவ்வாழ்க்கை உயர்வு பெறுவதுடன் கணவன் மனைவிக்கு இடையில் புரிந்துணர்வு ஏற்பட அதிகவாய்ப்பு உள்ளதாகவும் கூறுகிறார். அத்துடன் இப்பாத்திரங்களின் ஊடாக இந்நாவல் காதல் பற்றிய தெளிவான மனப்பதிவு ஒன்றையும் தருகிறது. திருமணத்துக்கு முந்திய காதல் ஒருவரை ஒருவர் புரிந்துணர்வுடன் அணுகவும் ஒருவரில் உள்ள குறை, நிறைகளை கண்டுணர்ந்து வாழ்க்கையை நடாத்தவும் திருமணத்துக்கு முந்திய காதல் உதவும் என்பதையும் இந்நாவல் வெளிப்படுத்துகிறது.

மனைவி கணவனுக்கு வழி காட்டியாக அமைவதுடன் கணவன் வழி பிறழ்ந்து நெறிதவறி நடக்கும் போது மனைவி இடிந்துரைப்பவளாகவும் அமைய வேண்டும் என்பதை பிரேம், பிரியங்கா வாழ்வினூடாகவும் ராகுல், சந்தியா வாழ்விற்கூடாகவும் எடுத்துரைக்கிறார். புகைத்தலுக்கு அடிமையாகும் பிரேம் ஒரு கட்டத்தில் தன் வாழ்வுடனும் நோயுடனும் போராட வேண்டிய இக்கட்டுக்குள் தள்ளப்படுகிறான். அச்சமயத்தில் தான் புகைக்கும் போது அதனைக் கண்டிக்கும் பிரியங்காவை நினைவு கொள்கிறான். இதேயபோன்று தன் கணவன் உண்மைக்காகவும் நேர்மைக்காகவுமே தன் வக்கீல் தொழிலைப் பயன்படுத்த வேண்டும் என நினைக்கும் சந்தியா, ராகுல் தன் கட்சிக்காரரான பிறம்யாவுக்கு முறையற்ற - நியாயமற்ற முறையில் விவாகரத்தை பெற்றுக் கொடுக்கும் போது ராகுலைக் கண்டிப்பதுடன் தன்கோபத்தை வெளிப்படையாகவும் தன் செய்கையினூடாகவும் காட்டுகின்றாள். பிள்ளை ஒன்று இருக்கும் போது விவாகரத்து எடுத்து பெற்றோர் திருமணம் செய்யும் போது அது குழந்தையைப் பாதிக்கும் செயல் என்பதையும் பிறம்யாவின் விவகரத்தினூடாக இந்நாவல் எடுத்துப் பேசுகிறது. அதே சமயம் தேவையான சந்தர்ப்பத்தில் விவாகரத்து வழங்கப்பட வேண்டும் என்பதை ஆனந்த் சஞ்சனாவின் வாழ்க்கைக்கூடாகவும் இந்நாவல் எடுத்துரைக்கிறது.

ஆணானவன் பெண்ணை புரிந்து கொள்பவனாகவும் பெண் கஸ்டப்படும் போது அதாவது இக்கட்டுக்குள் தள்ளப்படும்போது அவளுக்கு வாழ்வளிப்பவனாகவும் இருக்க வேண்டும் என்பதை ஆனந்த் சஞ்சனாவின் வாழ்க்கைக்கூடாக விளக்கும் இந்நாவல் நற்பண்பு மிக்க மனிதர்களையும் என்றுமே மனிதம் செத்துவிடாது என்பதையும் விளக்கிச் செல்கிறது. வவுனியா பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றும் சஞ்சனா வறுமையுடன் போராடித் துயருரும் சிறுவயதிலேயே திருமணமாகி கணவனால் கைவிடப்பட்டவள். அவளின் நன்நடத்தையால் கவரப்பட்டு அவளிடம் தன் மனதைப் பறிகொடுக்கும் ஆனந்த் அவளைத் திருமணம் முடித்து வாழ்வு கொடுக்கிறான். பெண் துயருரும் போது ஆண்மகன் அவளுக்கு உறவுப் பாலமாக அமைவதுடன் அவளுக்கு வாழ்வு கொடுத்து ஆதரவுக் கரம் நீட்டுபவனாவும் இருக்க வேண்டும் என்பதையும் இந்நாவல் எடுத்துரைக்கிறது.

காதலனைத் தேர்வு செய்யும் போது காதலி அவதானமாகத் தெரிவு செய்தல் வேண்டும் என்பதை கவிஷ்னாவின் வாழ்க்கைகூடாக இந்நாவலில் ஆசிரியர் வெளிப்படுத்தி நிற்கிறார். கவிஷ்னாவின் தமக்கை ஒழுக்கமற்ற ஆடவனைத் தன் காதலனாகத் தெரிவு செய்தபோது அவனின் துர்நடத்தைகள் அவளுக்குத் தெரிய வர அவனை விட்டு அவள் பிரிந்து அவள் வேறு திருமணம் செய்துவிடுகிறாள். இதனை அறிந்த காதலன் அவளின் தங்கை கவிஷ்னாவை அக்காவின் காதல் கடிதம் தன்னிடம் உண்டு எனக்கூறித் தன் இச்சைக்கு செவிசாய்க்கும் படி வற்புறுத்துகிறான். இந்நிலையில் கவிஷ்னா தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். அவளை ஆனந்த், ராகுல் இருவரும் பொலிஸாரின் ஒத்துழைப்பதுடன் காப்பாற்றி விடுகின்றனர். திரிலிங் சினிமா பாணியில் இச்சம்பவங்களை இணைத்து கதை பின்னப்பட்டாலும் கதை வாசிப்பவனுக்கு இன்பவியலை ஊட்டுகிறது. உறவுகளின் உன்னத தியாகங்கள் மதிக்கப்படவேண்டியது என்பதை கவிஷ்னாவின் வாழ்வு விளக்கி நிற்கிறது. நாவல் என்பது அனைவரையும் மகிழ்விக்க கூடியது. எளியநிலையிலுள்ள சாதாரண மனிதனின் வாழ்க்கையினை முழுமையாக வெளிப்படுத்துவதையும் அவ்வெளிப்பாட்டைத் தகுதியுடையது என்று எண்ணுவதையும் நோக்காகக் கொண்ட இலக்கியவகையே நாவல் என்பார் சேர் எவ்வோர் எவ்வான்ஸ். அவ்வகையில் மைதிலி தயாபரனின் நாவல்கள் எளிமையான மொழிநடையில் மனிதவாழ்வியலை முழுமையாக வெளிப்படுத்துவனவாகவும் வாசகனுக்கு மகிழ்வை ஏற்படுத்துவனவாகவும் காணப்படுகின்றன.

விளக்கவுரை கருத்துரை நாவலை சிதைக்கவல்லது எனப் பேராசிரியர் கைலாசபதி தம் நாவல் இலக்கியம் என்னும் நூலில் கூறுவார். ஆயினும் மனித மேம்பாடு, அதன் உன்னதம், இலட்சிய மாந்தர்களின் வெளிப்பாட்டுத் தன்மை கருதி அவர் உரைக்கும் கருத்துரைகள் மனித வாழ்வைச் செம்மைப்படுத்த வல்லனவாகவும் மனிதனை நெறிப்படுத்தி வழிப்படுத்த வல்லனவாகவும் உள்ளன. நாவல் வெறும் பொழுது போக்காக இருத்தலாகாது வாழ்க்கைத் தத்துவம் ஒன்றை வெளிப்படுத்துவனவாகவும் அமையவேண்டும் என்னும் நோக்கில் எழுதப்பட்ட நாவலே சொந்தங்களை வாழ்த்தி. நா. பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர் அரவிந்தன், பொன்விலங்கு சத்தியமூர்த்தி, சத்தியவெள்ளம் அண்ணாச்சி அகிலனின் பாவை விளக்கு தணிகாசலம், சிதம்பரசுப்பிரமணியத்தின் இதயநாதம் கிருஷ்ணன் முதலான பாத்திரங்கள் இலட்சியப்பாத்திரங்கள். தனக்கென வாழாது பிறருக்காகவே வாழ்ந்து மடியும் உன்னத பாத்திரங்கள். தம் வாழ்வியலுக்கூடாக மனித சமூகத்தை மாற்றமுனைந்த பாத்திரங்கள். நெறியான வாழ்வுக்கூடாக நிலைத்து நின்ற பாத்திரங்கள். அவ்வகையில் நனவோடை உத்தியில் எழுதப்பட்ட மைதிலி தயாபரனின் சொந்தங்களை வாழ்த்தி.தொடர்புகளின் அடிப்படையில் நினைவுகளையும் நிகழ்ச்சிகளையும் ஒன்றிணைத்துப் பின்னப்பட்ட இந்நாவலில் இடம் பெறும் காந்தன் இலட்சிய மனிதன். தான் கொண்ட இலட்சியத்துக்காக மனிதரை  நேசித்தவன். அம் மனிதர்களின் சிரிப்பினில் தன் துன்பங்களை ஆற்றுப்படுத்த முனைந்தவன்.

சமூக முன்னேற்றத்துக்காக மனித உயர்வுக்காக வருந்தி வருந்தி செய்யும் முயற்சிகள் காந்தனின் வாழ்வை புரட்டிப்போட்டாலும் விதி அவனது வாழ்வை மாற்றி அமைத்தாலும் அதனை எண்ணி துவளாது சலிக்காது போராடி மக்களுக்காக வாழ்ந்து மடிகிறான் அம்மாமனிதன். அவனது வாழ்வு நடப்பியவ் வாழ்வியல் முறைக்கூடாகவும் மனித நுண்ணுணர்வுக்கூடாகவும் உறவுகளின் இழையோட்டத்துக்கூடாகவும் எடுத்துக்காட்டப்படுகிறது. நாம் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த பேரழிவுகள் காந்தன் தன் தாய், தந்தை, தம்பியை ஆழிப்பேரலைக்கு பலி கொடுப்பதனூடாகவும் நந்தன் தன் காலை போரில் இழப்பதனூடாகவும் பதிவு செய்யப்படுகிறது.

சுயநலத்துக்காக சொந்தங்களைத் துறந்து பெற்ற தாய் தந்தையரைக்கூட அநாதை ஆச்சிரமத்தில் விடுகின்ற இவ்வுலகில் நண்பனுக்காக கசிந்துருகும் உண்மை மனிதனின் இலட்சிய நட்பினையும் இந்நாவல் பதிவு செய்கிறது. சிறுவயது முதல் காந்தன் இறக்கும் வரை தொடரும் அந்த நட்பு நுண்ணுணர்வுத்தளத்தில் பதிவு செய்கிறது.

அற்புத நவிற்சியிலிருந்து விடுபட்டு வாழ்வின் சம்பவங்களை உள்வாங்கி இயங்கும் மைதிலியின் நாவல்கள் மனித வாழ்வின் சிக்கல்களைக் கூறி அதன் தீர்வுகளையும் வெளிப்படுத்துபவை. சமூகத்தில் உயர்ந்த வாழ்வுக்கு கல்வியே அடிப்படை என்னும் உயர்ந்த எண்ணக்கருவை மனதில் விதைப்பவை.சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உள்வாங்கி இயங்கும் மைதிலியின் நாவல்கள் மத்தியதரவர்க்கத்தின் வாழ்வியலுக்கூடாக ஈழத்தின் குறிப்பிட்ட காலகட்டத்தின் வரலாற்றையும் அதன் இயங்கியல் போக்கையும் எடுத்துரைப்பவை. புதிய தமிழ் இலக்கியச் சூழலுக்கமைய நவீன உத்திகளை உள்வாங்கி வாழ்வின் இயற்புலத்தை கனதியான மொழியமைப்புக்கூடாக நாவல் தன்னை வெளிப்படுத்தும் போது அந்நாவல் முழுமை பெறும். அவ்வகையில் மைதிலியின் நாவல்கள் சமூக தளத்தில் மனிதனையும் மனித மேம்பாட்டையும் வாழ்வின் இயற்புலத்துக்கூடாக வெளிப்படுத்தி தன்னை தக்க வைத்துக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

00


Related

விமர்சனங்கள் 5557478760423422947

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item