மன்னார் அமுதன் கவிதைகள்காமத்தைப் பாடுதல்
.............................................................
காலங்களைக்
கரைத்துக் குடித்த
கரும்பாறையென
கால் பரப்புகிறாய்

மதர்த்த மார்புகளும்
புடைத்த புருவமும்
நெடித்த
மயில் கழுத்தின் நீலமுமாய்
வெட்டி நடக்கிறாய்

குளிர் இரவைச் சூடாக்கி
சுடும் பகலை இரவாக்கி
பகலிரவெங்கும்
படர்ந்து கிடக்கிறாய்
என்னில்

பாறையாகவும்
படரும் பாசியாகவும்
நீயே இருந்திருக்கிறாய்

காலம் பிழைத்தெழும்
காலமெலாம்
விழித்திருந்து முத்தமிடவும்
மீண்டும் முயங்கிக் கிடக்கவும்
உன்னால் மட்டும்  எப்படி முடிகிறது...
                   
 00 

சாவின் வார்த்தைகள்
........................................................................

 எல்லோரும்
பார்க்கும் படியல்லவா
செத்தாய்....

கைவிரல்கள்
கடைசியாய் தெரிய
ஆறொன்றில் மூழ்கினாய்

நாக்கும் கண்களும்
வெளித்தள்ள
கால்கள் இழுத்து தொங்கினாய்

சீமைக்கிழுவை
வேறொன்றில் தலைவைத்து
வாயெங்கும் நுரைதள்ளினாய்

புகைகக்கக்கிப் புறப்படும்
பேரொலியின் முன் செவிடனாய்
உடல் சிதறினாய்....

இறந்தவுன் வாயில்
ஒட்டிக்கிடக்கிறது
சாவின் வார்த்தைகள்

வாசிக்கமுடிந்தாலும்
உன் வார்த்தைகளை
நானெப்படி எழுதுவது சொல்...
               
00

தகிப்பு
.........................................................................

உன் ஓடைக்கரையோரம்
பறந்திருக்கிறேன்
வண்ணத்துப்பூச்சியாகவும்
தட்டானாகவும்

இறகுகளின் வண்ணமுன்
கைகளில் ஒட்டியபோதும்
வால்கிழித்து இலைசொருகி
பறக்கவிட்டபோதும்
நீ அறிந்திருப்பாயா
பால்யம் பறிபோனதை

நீயிட்ட தூண்டிலில்
புழுவாகவும்
தவித்துத் துடிக்கும்
மீனாகவும்
சுருக்கில் தொங்கி
புகையிலை புகட்டப்பட்ட
ஓணாணுமாய்
கிறங்கிக் கிடந்ததெல்லாம்
என் பால்யம் தான்

சுந்தரவனங்களிலும்
முகடுகளின் மதர்ப்பிலும்
சுழிகளிலும் சிக்கி
சுழன்றிருக்கிறேன் தக்கையாய்...

பால்யங்களில் தேறி....
பருவங்களில்
தகித்துக்கிடக்கையில் தானா

உன் நீரோடை வற்ற வேண்டும்

Related

கவிதைகள் 1335346274071383862

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item