வரலாற்றுப் போக்கில் வாசிப்பு


வாசிப்பின் தோற்றம் பரம்பல் பற்றிய ஒரு உசாவல்


எஸ்.சத்யதேவன்

1

வாசிப்பு என்ற சொல் இன்று அச்சடிக்கப்பட்ட பிரதிகளை வாசிப்பது என்றாகிவிட்டது. ஆயினும் அச்சுக்கும் வாசிப்புக்கும் இடையிலான உறவு ஒருநூற்றாண்டு காலத்திற்கு முன்னரே ஏற்பட்டது. அதே போல் எழுதப்பட்டவற்றை வாசித்தலே வாசிப்பு என்றும் கொள்ளப்படுகிறது. ஆயினும் வயலின் வாசிப்பு, தவில் வாசிப்பு, புல்லாங்குழல் வாசிப்பு என வேறுபட்ட கலைச் செயன்முறைகளையும் வாசிப்பு என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் கல்லூரியில் கற்பதைக்கூட 'காலேஜ்ஜில் பி.ஏ. வாசிக்கிறேன்' என்று குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளதை அக்காலத்தில் வெளிவந்த பனுவல்களின்வழி அறியலாம்.

ஆயினும் வாசிப்பு என்பதை 'தேவையான, பயன்படக்கூடிய, மகிழ்வளிக்கக்கூடிய விடயங்களை அறிந்து கொள்ளும் ஒரு செயன்முறை' என்று பருமட்டாக அர்த்தப்படுத்தி அதன் வழி வாசிப்பின் வரலாற்றை அணுக இக்குறிப்பு முயல்கிறது. அந்தவகையில் மனிதன் முதலில் வாசித்தது இயற்கையைத்தான். காலநிலை மாற்றங்கள், பொளதீக பொருட்களின் இயல்புகள், உயிரினங்களின் நடத்தைகள் என்பவற்றையே அவன் நீண்டகால இடைவெளியிலும் முதலிலும் புரிந்து கொண்டான். இது வாசிப்பு என்பதன் ஆரம்பபுள்ளியாக அமைகிறது. 

தான் புரிந்து கொண்டவற்றை பிற்காலத்தில் தான் புரிந்து கொள்வதற்காக அல்லது தனது குழுவினர் புரிந்து கொள்வதற்காகவும் ஒலிகள், அடையாளங்கள், குறியீடுகள் என்பவற்றை ஏற்படுத்தினான். அவற்றை அக்குழுவின் ஏனைய அங்கத்தவர்கள் புரிந்துகொண்டமை வாசிப்பு என்பதன் அடுத்தகட்டமாகும். அக்கால கட்டத்தில் வாசிப்பு என்பது விடயங்களை அறிந்து கொள்ளல், அறிந்து கொண்டதை ஏனையவர்கள் புரிந்து கொள்வதற்காக பதிந்துவைப்பதனூடாக பகிர்தல், அவ்வாறு பகிர்ந்து கொண்டதை ஏனையவர்கள் புரிந்துகொள்ளல் ஆகியவற்றை உள்ளடக்கிய (அறிதல் - பகிர்தல் - மீளவும் அறிதல் ஆகிய) தொடர் செயன்முறையாகவே இருந்தது. வாசிப்பு என்பதன் இந்த தொடக்கால அடிப்படையான அம்சங்கள் இன்றுவரை வாசிப்பு செயற்பாட்டில் மாற்றமுறாது உள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது. 

தற்காலத்தில் எழுதப்பட்டவற்றைத் தவிர ஓவியங்களை புரிந்து கொள்வதை நாம் வாசிப்பு என்று சொல்வதில்லை ஆயினும் மனிதன் வாசிப்பதற்காக முதன்முதலில் தெளிவாக எழுதியது பாறை ஓவியங்களைத்தான். எழுத்துக்கள் பரிணமிக்காத காலத்தில் ஓவியங்களும் குறியீடுகளுமே எழுத்துக்களாக இருந்தன. காலப்போக்கில் ஓவியங்களுடன் குறிகளை ஒழுங்குபடுத்தி எழுத்தை உருவாக்கிக் கொண்ட மனிதன் அவ்வோவியத்துடன் தொடர்பு பட்ட விடயங்களை ஒருவரி அல்லது இருவரிகளில் ஒழுங்கு படுத்தப்பட்ட குறிகளாகிய எழுத்தில்  அவ்வோவியங்களோடு சேர்த்து பதிவு செய்தான். சிந்துவெளிக் குறியீடுகள் இவ்வகையானைவையே என சிந்துவெளி குறியீடுகளை ஆய்வுசெய்யும் அறிஞர்கள் கூறுகிறார்கள். வாசிப்பு வரலாற்றில் எழுத்தானது வாசிப்பு என்பதோடு தொடர்புறும் முதல்நிலை இதைக் கொள்ளலாம்.

பிறிதொரு வகையிலும் வாசிப்பு என்ற செயன்முறை நிகழந்து வந்துள்ளது. முன்பு குறிப்பிட்ட குறிகள் ஓவியங்கள் எழுத்துக்கள் என்பவற்றைகொண்ட வாசிப்புக்கு கட்புல புலனூடாக நடைபெற்றது. ஆனால் இந்த வகை வாசிப்பு கட்புலனூடாக அல்லாமல் செவிப்புலனை அடிப்படையாகக் கொண்ட கேள்வி என்பதனூடாக நிகழ்ந்தது. ஓலிகளை ஒழுங்கமைத்து சொற்களையும் பொருட்களையும் உருவாக்கிக் கொண்ட மனிதர்கள் அவ்வொலிநிலைப்பட்டு வாய்மொழியாக தான் அறிந்து கொண்டதை பகிர்ந்து கொள்ளவும் கேட்டலினூடாக அதை புரிந்து கொள்ளவும் மறுபடியும் வாய்மொழியாக அதை மீளவும் பகிர்ந்து கொள்ளவும் செய்தது. அறிதல் - பகிர்தல் - மீளவும் அறிதல் ஆகிய வாசிப்பின் அடிப்படைச் செயன்முறைகள் இங்கு செவிப்புலனினூடாகவே முழுவதும் மெற்கொள்ளப்பட்டன. இதற்கு வசதியாக வாசிப்பதற்கு செய்யுள்களை உருவாக்கிக் கொண்டன. வேதங்கள் இவ்வாறுதான் நீண்டகாலத்திற்கு வாசிக்கவும் பகிரவும் செய்யப்பட்டன. அதனாலேயே வேதங்களை எழுதாமறை, எழுதாக்கிழவி என்று அழைக்கப்பட்டன.

குறியீடுகள் ஓவியங்கள் எழுத்துக்கள் ஆகியவற்றை  கொண்ட வாசிப்பானது ஒரு இனக்குழுமத்தைச் சேர்ந்த யாரும் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அதாவது பதிவு செய்தவரோடு தொடர்பு இருந்தாலும் இல்லாவிடினும் பதிவு செய்து வைக்கப்பட்ட அக்குறியீடுகள் பழக்கத்திலுள்ள சமூகத்தின் எந்தவொரு உறுப்பினரும் புரிந்து கொள்வதை கட்டுபடுத்த பதிவுசெய்தவர்க்கு இயலாமல்ப் போகிறது. ஆகவே இவ்வகை வாசிப்பு பொதுநிலை வாசிப்பாக இருக்கிறது. பெரும்பாலான கல்வெட்டுக்கள் பொதுவழக்கில் இருந்து பிராகிருத பிராமி எழுத்துக்களில் ஆக்கப்பட்டமை பொதுநிலை வாசிப்புக்காகவே என்பதுவும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்நிலையில் வாசிப்பு என்பது அதிகாரமற்றதாக இருக்கிறது. அதாவது வாசிப்பை குறித்த சிலருக்குள் மட்டுபடுத்தவும் அதனூடாக அச்சமூகத்தில் தமக்கு விசேட உரிமைகளையும் சலகைகளையும் வற்புறத்தவும் வாய்;ப்பில்லாத ஒன்றாக இருக்கிறது.

ஆனால் செவிப்புலனூடான வாசிப்பு என்பது நெருக்கமான தொடர்புகள் கொண்டவர்களிடையே மட்டும் நிகழக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளது. ஒரு விடயத்தை அறிந்துகொண்டவர் அதை தான் பகிரும் போது அதைப் புரிந்து கொள்ளக்கூடிய நபரையும் எல்லையையும் தீர்மானிக்ககூடியவராக இருக்கிறார். செவிப்புலனூடான வாசிப்பில் பகிர்ந்து கொள்பவரோடு நேரடித் தொடர்பில்லாத யாரும் அவ்விடயத்தை புரிந்துகொள்ள முடியாத நிலை காணப்படுவதால் இவ்வகை வாசிப்பில் புரிந்துகொள்ளப்படும் விடயங்களை குறிப்பிட்ட சிலருக்குள் மட்டும் மட்டுப்படுத்தி வைக்க வாய்ப்பு  ஏற்பட்டுவிடுகிறது. இதனால் அவ்விடயங்கள் சிலருக்குள் தனியுடமையாக மாறுகின்றன. அவற்றினூடாக அவர்கள் தமது குழுமத்தின் ஏனையவர்களிடமிருந்து தம்மை மேம்பட்டவர்களாகவும் சலகைகள் கொண்டவர்களாகவும் ஆக்கிக்கொள்ளும் வாய்ப்பை செவிப்புலனூடான வாசிப்பு வழங்குகின்றது. வேதங்கள் எழுதாமறையாக சிறப்பு வழக்கான சமஸ்கிருதத்தில் வாசிக்கப்பட்டதிற்கும் அதனுடாக அவ்வேதங்களை புரிந்துகொண்டவர்கள் தமது சமூகத்தில் எவ்வாறு அந்தஸ்த்து மற்றும் சலுகைகளை பெற்றுக்கொண்டமை இவ்வாறுதான் ஏற்படுகிறது.
இதற்கு மாறாக பிராமணியத்தை எதிர்த்து உருவாகிய சமண, பௌத்த மதங்கள் தமது இலக்கியங்களையும் நெறிகளையும் எழுத்துக்களில் பதிவுசெய்வதை ஊக்குவித்தன. அவ்வாறு எழுத்துக்களில் பதிவுசெய்யும் போதும் அவற்றை பொதுவழக்கில் இருந்த பிராகிருத, பாளி மொழிகளிலேயே பதிவுகளை மேற்கொண்டன. இவற்றோடு சங்கங்களையும் பள்ளிகளையும் அமைத்து அவற்றில் கட்புல வாசிப்பையும் செவிப்புல வாசிப்பையும் ஒன்றிணைத்தன. இதனால் வாசிப்பு என்பதில் ஒரு பாரிய பாய்ச்சல் நிகழ்ந்ததுடன் வாசிப்பில் செழுமையும் வீரியமும் மிக்க மரபு உருவாக வாய்ப்பும் ஏற்பட்டது. பண்டைய இந்தியாவின் செழுமைமிக்க புலமைமரபுகள் பிராமணியத்தை எதிர்த்த அவைதிக மதங்களிலிருந்து தோற்றம் பெற்றுமைக்கும் தொடர்ச்சியாக கடத்தப்பட்டமைக்கும் வாசிப்பில் அம்மதங்கள் ஏற்படுத்திய ஒன்றிணைவும் புதிய மரபுகளும் பெரிதும் துணைசெய்திருக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்

2

வாசிப்பு குறித்த வரலாற்று நிலைகள் தமிழ் சமூகத்திற்கும் பொருந்துவனாகவே உள்ளது. ஆயினும் தமிழ் சமூகத்தின் வாசிப்பில் சில சிறப்பு நிலைகளும் காணப்படுகின்றன. தமிழகத்தில் கி.மு. 10,000 இற்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொருந்தல் அகழ்வாய்வில் கிடைத்த ஆகோள் பூசல்பற்றி தாமிழி (தமிழ் பிராமி) எழுத்தில் பொறிக்கப்பட்ட வீரக்கல்லும் மட்பாண்ட கலவோடுகளில் உள்ள தாமிழி எழுத்துப் பொறிப்புகளும் தமிழ் சமூகத்தில் எழுத்தின் பயன்பாட்டை கி.மு 500 ஆம் ஆண்டுக்கு முந்தையவை என்பதை அறுதி செய்கின்றன. ஆகவே குறைந்தது கி.மு 500 ஆம் ஆண்டுகளிலிருந்து தமிழ் சமூகத்தில் எழுத்தினூடாக வாசிப்பது பழக்கத்தில் இருந்துள்ளது என்பதை அறியக்கூடியதாக உள்ளது. 

கி.மு.300 இல் இருந்து கி.பி 200 ஆம் ஆண்டுக்கிடைப்பட்;ட காலத்தை சேர்ந்த பல தாமிழி அல்லது பிராமி அல்லது இவை இரண்டும் கலந்து எழுத்துகளைக் கொண்ட கலங்களும் நடுகற்களும் தமிழ் சமூகத்தின் வாழ்பரப்பெல்லையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிகமாகக் கிடைத்துள்ளதனால் அக்காலத்தை 'தமிழின் முதல் அறிவொளி இயக்கம்' பரவலாகச் செயற்பட்ட காலம் என்பார் கல்வெட்டியல் பேரறிஞர் ஐராவதம் மகாதேவன். இக்காலப்பகுதியாக தமிழ் செவ்வியல் இலக்கிய காலமான சங்க இலக்கியங்கள் தோன்றிய காலம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இக்காலத் தமிழ் சமூகம் பற்றி அவர் குறிப்பிடும் பொழுது

'தமிழகத்தில் மிகப் பழமையான காலத்திலிருந்தே எழுத்தறிவு பரவலாகக் காணப்பட்டது என்பதற்கு இப்பொழுது பல சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் குகைகளில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ் - பிராமி கல்வெட்டுகள் வடநாட்டிலிருந்து வந்த தமிழ் தெரியாத சமணத் துறவிகளால் எழுதப்பட்டவை என்று முதலில் கருதப்பட்டது. ஆனால்கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட ஊர்களில் அகழ்வாய்வுசெய்தபோது நூற்றுக்கணக்கான பானைக்கீறல்கள் தமிழ்-பிராமி எழுத்துக்களில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பானைக்கீறல்கள் மதுரை, கரூர், உறையூர் போன்ற தலைநகர்களிலும் கொற்கை, அழகன்குளம், அரிக்கமேடு போன்ற துறைமுகங்களிலும்மட்டுமல்லாது அழகரை, போளுவாம்பட்டி போன்ற சிற்றூர்களிலும் கிடைக்கின்றன.
இப்பானைக்கீறல்களில் சாமானியர்களான பொதுமக்கள் கூட தத்தம் பெயர்களை எழுதியுள்ளதைக் காணமுடிகிறது. மேலும், அதே காலகட்டத்தில் அல்லது சற்றே பிந்தைய காலத்தில் எழுந்த சங்கநூல்களை ஆக்கியோர், தொகுத்தோர் சமுதாயத்தின் எல்லாத் தளங்களையும் சார்ந்தவர்கள் என்றும் தெரிகிறது. சங்கப்புலவர்களில்அரசர்களும் வணிகர்களும் பல்வேறு தொழில் செய்தவர்களும் பெண்டிரும் அடங்குவர். இச்சான்றுகளை நோக்கினால் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் முதல் அறிவொளி இயக்கம் மிகப் பரவலாக நடைபெற்றது என்ற முடிவுக்கு வரலாம்.'என்று குறிப்பிடுவார். 

இச்சான்றுகளிலிருந்து அக்காலச் தமிழ் சமூகத்தின் வாசிப்பு என்பது சமூகத்தின் பலநிலைகளிலும் பரவிக் காணப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. பொதுத்தளத்தில் நடுகற்கள் பானைக்கீறல்களாக இருந்த வாசிப்பு புலமைத்தளத்தில் செய்யுள்களாக அமைகிறது. இதில் தமிழ் சமூகத்தின் தனித்த அம்சங்களாக செய்யுள்களை சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் ஆக்கியுள்ளமையையும் நடுகற்கள்ஃபானைக்கீறல்கள், செய்யுள் ஆகிய இரு தளங்களிலும் தமிழ் மொழியே கையாளப்பட்டிருப்பதையும் நாம் அழுத்தமாக கவனிக்கவேண்டும். இதனால் தமிழ் சமூகத்தில் வாசிப்பு பொதுநிலையாகவும் சிறப்புநிலையாகவும் மாறி தனி அதிகாரத்தை வழங்கும் வாய்ப்புக்களை அதிகமாகக் கொண்டிருக்காதநிலை காணப்பட்டது.

வடஇந்திய நிலைமைகளிலிருந்து தமிழ் சமூகம் மாறுபடும் முக்கிய அம்சங்கள் இவையென்பதையும் நாம் மறந்துவிடலாகாது. பிராமணியத்தின் பரவல் தமிழ்நாட்டில் இருந்தபோது பிராமணியம் தனது செல்வாக்கையோ தாக்கத்தையோ தமிழ் சமூகத்தின் சிறப்பு நிலைகளில் ஏற்படுத்தவில்லை என்பதையம் அதனூடாக நாம் அவதானிக்க முடியும். மாறாக சமண பௌத்த மதங்களில் வருகை தமிழ் சமூகத்தின் வாசிப்புநிலைகளின் சிறப்பு கூறுகளை மேலும் செழுமையடையச் செய்துடன் புது மரபையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தியது. தமிழில் புலமைமிக்கவர்களை கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள் என்றே சொல்லும் வழமை நீண்டகாலம் இருந்தது. முன்பு குறிப்பிட்டதுபோல கட்புல செவிப்புல வாசிப்பு இரண்டும் ஒன்றிணைந்தாக தமிழக புலமைத்தளம் செயற்பட்டமையே இதன் காரணமாகும்.

குறிப்புக்கள் :

1. தமிழ் சமூகத்தின் வாசிப்பு முறைகள் பற்றிய விரிவான சமூக வரலாற்று ஆய்வை பேரா.ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் விரிவான முறையில்  மேற்கொண்டிருந்தார். அவரது முச்சந்தி இலக்கியம் (2004) , நாவலும் வாசிப்பும் (2010), காலச்சுவடு வெளியீடு ஆகிய இருநூல்களிலும் தமிழ் சமூகத்தின் வாசிப்பு வரலாறு பற்றி ஆழமான விரிவான தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
2. ஐராவதம் மகாதேவன், சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம், வரலாறு இணைய இதழ், இதழ்.31. அம்ருதா மற்றும் பண்பாட ஆகிய இதழ்களில் மீள்பிரசுரம்
Related

கட்டுரைகள் 4003508599746253066

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item