பறைமேளக் கூத்துக் கலையை வெகுசனமயப்படுத்துவதற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாடு


கலாநிதி சி.ஜெயசங்கர்


......... the drummers (Paryars) still retain a dialect which has a number of archaic  Tamil words and a few Prakrit words.Besides drumming of funerals and folk temples, they were heralds and traditional weavers.Some among them practiced native medicine and astrology.The chief  of this community used to maintain the geological records of the Vellala chieftains. Even today they have their own shrines dedicated to the deity 'valliyakkan'(Val - yakkan - might be Yaksha) and the preset is known as 'valluva kurukal' (Dr.P.Ragupathy,1987,Page 206)


பறை, தமிழர்களின் பாரம்பரியக் கலை. தமிழரது தொன்மையை அடையாளப்படுத்தும் சமூகப் பண்பாட்டு விடயங்களுள் பறைக்கு முதன்மையான  இடமுண்டு. பறையை முழங்கிவரும் பறையர் சமூகம் தமிழர் சமூகத்தின் தொல்குடிகள் என்றவொரு வரலாற்றுச் சிந்தனைப் பள்ளியுமுண்டு. இவை எல்லாவற்றுக்கும் மேலாக பறை எனும் கருவியின் இசை முழக்கும் அதனுடன் இணைந்த ஆடல்களும் அசைவுகளும் எவரையும் அசரவைக்கும் அதன் இயல்பும் யதார்த்த அனுபவமாகவும் இருந்து வருகின்றது.

ஆயினும் சாதி ரீதியாகத் தாழ்த்தப்பட்டதும் ஒடுக்கப்பட்டதுமான சமூகமாகப் பறையர் சமூகம் ஓரங்கட்டப்பட்டுவரும் சமூகப் பண்பாட்டுச் சூழலில் பாரம்பரியமான அவர்களது இசைக்கருவியும் ஒதுக்கப்பட்டதாகவே இருந்து வருகின்றது.

பறை என்னும் இசைக்கருவியின் வீரியத்தையும் மீறியதாக சாதிய ஆதிக்கத்தின் இருப்பும் இயக்கமும் இருந்து வருகிறது. இதன் காரணமாக காலாதி காலமாக இக்கலையை மீட்டி வருபவர்களது சமூகமே தங்களது கலை மரபைத் தூக்கிவீசவும் தொடர்ந்தும் பறை வாத்தியத்தைத் தொழிலாகச் செய்துவரும் சொந்தச் சமூகத்தினரையே பண்பாட்டுப் படுகொலைக்கு ஆளாக்கவும் வன்முறைக்கு உள்ளாக்கவும் நேர்ந்திருப்பது மேற்படி நிலைமையின் பாரதூரத் தன்மையைக் காட்டுவதாக இருக்கிறது.
பாரம்பரியமாகப் பறையை முழக்கி பண்பாட்டின் புராதனத்தை பறைசாற்றுவது என்பதிலும் அதனை விலத்தி வெளியே வைப்பது அல்லது தூக்கி வீசவைப்பதாக சமூகப் பண்பாட்டுச் சூழல் இயங்கி வருகிறது. புலத்தில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களிலும் இதுவே யதார்த்தமாக  இருந்து வருகிறது.

தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது முஸ்லிம் மக்களது வாழ்வியல் சடங்குகளிலும் பறை இசைக் கலைக்கு முக்கியமான இடமுண்டு. “தமிழ் பறைமேளக் கூத்தர்கள்; முஸ்லிம் மக்களின் கலியாண நிகழ்வுகளிலும் கத்னா எனும் விருத்தசேதன நிகழ்வுகளிலும் பங்கு கொண்டு பறைமேளக் கூத்தை நிகழ்த்தியுள்ளனர். பறைமேளத்திற்குரிய பதினெட்டு வகைத் தாளங்களில் இரண்டு தாளங்களை அதற்கென விசேடமாக அடிக்கும் மரபும் இருந்து வந்துள்ளது. அது மாப்பிள்ளைத் தாளம் என அழைக்கப்படுகிறது”. (நேர்காணல் .பரசுராமன், .பி.எம் இதிரிஸ்)

“1950களில் எங்கள் பகுதியில் சுன்னத் கல்யாணம் வெகு சிறப்பாக நடக்கும். வசதி குறைந்தவர்கள் பறை மேளம் எடுப்பார்கள். போடிமார் தவில் மேளம் எடுப்பார்கள். பெரும் தனவந்தர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து சின்ன மேளம் எடுப்பார்கள். சின்ன மேளக் கச்சேரியில் பெண்கள்தான் அதிகம் வாசிப்பார்கள். இந்த அத்தனை வாத்தியங்களையும் பறை மேளக் கூத்து மிஞ்சி விடும். எங்கு பறை மேளம் வந்தாலும் அந்த இடத்திற்கு நான் போய் விடுவேன். எங்கள் பகுதியில் பறை மேளக் கூத்தில் இரண்டு குழுவினர் கொடி கட்டிப் பறந்தார்கள். பழுகாமத்திலிருந்து கொட்டான் தத்தியும் களுதாவளையிலிருந்து சாமியன் தத்தியும் பிரபலம். சாமியன் தத்திக்கு சாமியனே தளபதி. அவர் இடுப்பில் கட்டியிருக்கும் பறை அவர் சொன்ன விதமாக ராகங்களை எழுப்பும். வலது கையில் பிரம்பால் செய்த கோலும் இடது கை பறையிலும். அவர் காலிலும் கையிலும் பெரும் சிலம்புகள் நர்த்தனமாடி ஒலியெழுப்பும்.

இரண்டு தளபதிகளும் பெரும் முடி வளர்த்து கொண்டை கட்டியிருப்பார்கள். கொண்டையில் பெரும் வெள்ளிக் கொண்டைப்பூ மாட்டியிருக்கும். கூத்து உச்சத்தைத் தொடும் போது கொண்டை தானாகவே அவிழ கொண்டைப்பூ சபையோருக்குள் போய் விழும். பெரும் முடிகளும் கரங்களோடு இணைந்து தவிலைத் தடவிக் கொடுக்கும். அந்தக் காட்சியைச் சொல்வதற்கு வார்த்தையின்றி நான் முட்டுப்படுகிறேன். பறையை வாசித்துக் கொண்டே மேடையை அவர் வலம் வரும் காட்சி எனக்கு நிகராக இந்த உலகில் யாரிருக்கிறான் என்பது போலிருக்கும். அப்படியொரு அற்புதக் கலைஞன் அவர். அவருக்கு நேரெதிரில் இடுப்பில் கட்டிய பறை மேளத்துடன் கொட்டான் தத்தியின் தளபதி கொட்டான் நின்று கொண்டிருப்பார். நாலடிக்கும் குறைவான உயரம். இடுப்பில் கட்டிய பறை மேளத்துடன் அவர் அந்தரத்தில் கரணம் போட்டு காற்றாகச் சுழன்று சுழன்று வாசிப்பார் . இரண்டு கலைஞர்களின் இடுப்புகளில் இருக்கும் பறை மேளங்கள் இரண்டும் புணர்ந்து புணர்ந்து மருகிச் சாவும். ஒன்றையொன்று துரத்தித் துரத்தி ராகம் எழுப்பும். ஆகா என்னவென்பேன்! சுன்னத் வைக்கும் நேரம் அதற்காக வேண்டியே சாமியனும் கொட்டானும் தவம் இருப்பார்கள். கடைசி சேவகம். பள்ளிவாசல் மரைக்கார் மார் வட்டக் களரியிட்டு இருக்க ஒஸ்தா மாமாவுக்கு முன்னால் சுன்னத் கார மாப்பிள்ளை உரலில் அமர்ந்திருக்க அந்தக் கச்சேரி நிகழும். கொட்டானும் சாமியனும் ஒருவர் தவிலில் மற்றவர் ராகத்தோடு அடிப்பார்கள்.” 1965க்குப் பிறகு சுன்னத் கல்யாண வீடுகளுக்கு இவர்களை அழைப்பது ஹராமாக்கப்பட்டது . அந்த இடத்தை லவ்ட் ஸ்பீக்கரும் நாகூர் .எம். ஹனீபாவும் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். (எஸ்.எல்.எம் ஹனீபா முகநூல் புதிவு)

ஈழத்தமிழர்தம் பண்பாட்டு விழாக்களின் அம்சமாக மணப்பறை, பிணப்பறை, சடங்குப் பறை எனப் பல்வேறு நிலமைகளிலும் உரித்துடைய கலையாக பறை இசைக்கலை விளங்கி வந்திருக்கின்றது. காலனியத்தின் விளைவான  நவீனமயமாக்கம் காரணமாகவும் சமஸ்கிருத மயமாக்கம் காரணமாகவும் சாதிய ஆதிக்கச் சூழலில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகளுடனாவது இயங்கிவந்த சூழலும் அற்றுப்போகத் தொடங்குகிறது.
நவீனமயமாக்கம் காரணமான காலனித்துவக் கல்வி பறையைக் கைவிட்டு கல்வியால் சாதிய அடையாளத்தை மறைப்பது முனைப்புப் பெறுகிறது. அதேவேளை தமிழர் சடங்கு முறைகள் சமஸ்கிருத மயமாக்கத்திற்கு  ஆட்படுத்தப்படுவதன் காரணமாக கைவிடப்பட்ட தமிழர் பண்பாட்டு அம்சங்களுள் பறையும் ஒன்றாகிவிடுகிறது. உள்@ர்த் தெய்வ வழிபாட்டு முறைகள், திருமண முறைகள் சமஸ்கிருதமயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் சூழ்நிலையில் கைவிடப்படும் பாரம்பரியமான பண்பாட்டு நடைமுறைகளில் பறையின் நீக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றது.

கூட்டு எதிர்ப்பு முயற்சிகள் மீது வீசப்படும் பெரும் ஆயுதம், தினசரி ஏகாதிபத்தியத்தால் ஏவப்படும் கருவி, பண்பாடு என்பது, பண்பாட்டு வெடிகுண்டின் விளைவு, மக்கள் தமது பெயர்கள், மொழிகள், சூழல், போராட்ட மரபு, ஒற்றுமை சுயவலு மற்றும் தம்மீதே கொண்டுள்ள நம்பிக்கையை ஒழிப்பதாகும். அதுÉ அவர்களது கடந்த காலத்தை எந்தச் சாதனைகளும் அற்றகளர் நிலமாகக் காண வைக்கிறதுÉ எனவே அதிலிருந்து தூர விலக வைக்கிறது. தம்மிடமிருந்த தொலைவில் உள்ளவற்றோடு அடையாளப்படுத்திக் கொள்ள வைக்கிறது. உதாரணமாக அடுத்தவர் மொழியை ஏற்றுக் கொண்டு, தம்மொழியைக் கைவிட வைக்கிறது. நசிந்து போன  பிற்போக்குச் சக்திகளோடு ஒன்றிணைய வைக்கிறது. அவர்களது உயிரூற்றுகளை அடைப்பவற்றோடு உறவு கொள்ள வைக்கிறது. போராட்டங்களின் ஒழுக்க மதிப்பீடு பற்றிய அய்யங்களைக் கிளப்பிவைக்கிறது. வெற்றி அல்லது சாதனைக்கான சாத்தியங்களைக் கைக்கெட்டாத, நகைச்சுவைக்கு இடமளிக்கும் கனவுகளாகக் காண வைக்கிறது. இதன் விளைவு நம்பிக்கையின்மை, கையறு நிலை, கூட்டு மரண விளைவு ஆகியவை. ஏகாதிபத்தியம் உருவாக்கிய இந்தக் களர் நிலத்தின் மத்தியில் அது தன்னைத் தானே அரு மருந்தாகக் காட்டிக்கொள்கிறது”. (கூகி வாத்தியாங்கோ- 2004:3-4)

சாவு வீடுஅல்லதுஇழவு வீடுஎனப் பேச்சு மொழியில் உரையாடப்படும் மரணச் சடங்குடனேயே பறையின் சமகாலப் பிரசித்தத்தைக் காணமுடிகிறது. அதுவும் மேற்கத்தையப் பறை அணியால் மாற்றீடு செய்யப்படுவது தற்காலப் போக்காக இருந்து வருவதும் கவனத்திற்குரியது. கோயில் திருவிழாக்களின் சுவாமி ஊர்வலங்களிலும் மேற்கத்தேயப் பறை அணியைப் பெருமையுடன் ஏற்றுக் கொள்ளும் பண்பாட்டுச் சூழலைக் காணமுடிகிறது. இதற்குச் சமாந்தரமாக பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்லாதவர் பறை முழக்க அழைக்கப்படுவதும் உள்@ர்த் தெய்வச் சடங்கு விழாக்களில் காணக்கூடியதாக இருக்கிறது.

பொருளாதார ரீதியாக சாதகமான நிலைமைகளைக் கொண்டுள்ள போதும் சாதி என்கின்ற சமூகக்கூறு பறையருக்கும் பறைக்குமான அத்தியந்த உறவை அறுத்தெறிவதாக இருந்து வருகிறது. அதே நேரம் சாதிரீதியான விலத்தி வைப்புக்களை அல்லது புறத்திக்கு வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதவொரு தற்காலச் சூழ்நிலையில் பறையர் அல்லாதவரை பறைமுழக்க அழைப்பதும்É மேற்கத்தேயப் பறை அணியை அழைப்பதும் வாய்ப்பான மாற்று ஏற்பாடாகி இருக்கிறது.

இதனால் உள்ளுர்த் தெய்வச் சடங்குகளில் பறையர் சமூகத்தைச் சேராதவர் பறை முழக்க அழைக்கப்படுவதும், ஆகம முறையிலமைந்த கோயில் சுவாமி ஊர்வலங்களிலும்; மரணச்சடங்குகளிலும் மேற்கத்தேயப் பறை அணி அழைக்கப்படுவதும் அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது
ஆகம முறையிலமைந்த கோயில் சுவாமி ஊர்வலங்களில் உள்@ர்ப் பறை முழக்கம் ஆகாததாகவும் மேற்கத்தேயப் பறை முழக்கம் பெருமிதத்துக்குரியதாகவும் ஆகியிருக்கிறது. இந்தச் சமூக உளவியல் ஆய்விற்குரியதாக இருக்கிறது.

சமூகப் பண்பாட்டு அம்சங்கள் பலவற்றின் கூறாக இயங்கியும் இருந்தும் வந்த பறை இழிவுக்குரியதாகவும் அச்சந்தருவதாகவும் முகமாற்றம் செய்யப்பட்டு அகற்றப்படுவதான எதிர்மறையான வளர்ச்சிப் போக்கு கடந்த ஐம்பது வருடங்களில் மிகவும் துரிதகதியில் நிகழ்ந்து வந்திருப்பதைக் காணமுடிகின்றது.

காலனியத்தின் உண்மையான நோக்கம் மக்களது வளங்களை ஆதிக்கம் செலுத்துவது அவர்களது உற்பத்தி, உற்பத்தி முறைமை மற்றும்  வினியோகத்தைக் கட்டுப்படுத்துவது அதன் மூலம் நிஜ வாழ்வின் முழுமையான பரப்பையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது சமூக உற்பத்தியைக் காலனியம் இராணுவக் கைப்பற்றல் அதைத் தொடர்ந்த அரசியல் சர்வாதிகாரம் மூலம் அமுல்படுத்தியது.

ஆனால் அதன் மிக முக்கிய ஆதிக்கப் பரப்பு காலனியப்படுத்தப்பட்ட மக்களது மனப் பிரபஞ்சத்தை ஆக்கிரமிப்பதாகும். அதற்கான வழி மக்கள் தம்மைத் தாமே உணரும் விதத்தையும் உலகத்தோடு கொள்ளும் உறவையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது. அதாவது ஒரு பண்பாட்டை ஆதிக்கம் செலுத்துவது அரசியல், பொருளாதார ஆதிக்கம், சிந்தனை ஆதிக்கம் இன்றி முழுமையாகவும் வலுவானதாகவும் இருக்கமுடியாது. மக்களது பண்பாட்டைக் குலைப்பது அவர்கள் பிறருடன் கொள்ளும் உறவுகளில் சுய வரையறை செய்து கொள்ளத் தம்மைப் பயன்படுத்தும் கருவிகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது.” . (கூகி வாத்தியாங்கோ- 2004:21)

காலனியத்தின் இம்முயற்சிக்கு இரண்டு கூறுகள் உள்ளன. வேண்டுமென்றே மக்கள் குழுவின் பண்பாட்டை கீழ்மைப்படுத்துதல் அதன் கலை, நடனங்கள், மதங்கள், வரலாறு, புவியியல், கல்வி, வாய்மொழி மரபு, இலக்கியம் ஆகியவற்றை மதிப்பற்றதாக்குதல் ஒரு புறம் மறுபுறம் காலனிய மொழியை திட்டமிட்டு உயர்த்துதல் ஆகிய இரண்டும் ஒரே சமயத்தில் நடத்தப்படும். (கூகி வாத்தியாங்கோ 2004:21)

ஆதிக்கத்திற்குட்பட்டு புறத்திற்குரியதாக வைக்கப்பட்ட சூழலிலும் கைக்கொள்ளப்பட்ட குடிமை முறைகளுக்குள் காணப்படுகின்ற பறை சார்ந்து உரிமங்கள், கடமைகள் என்பனவும் இல்லாமல் ஆக்கப்பட்ட எதுவுமற்ற ஒரு நிலையை நோக்கிய போக்கையே தற்காலத்தில் அவதானிக்க முடிகிறது.

தமிழர் சமூகப் பண்பாட்டு வெளியில் பறையர் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளின் மறுதாக்கமாக பறையர் சமூகத்துள் இருந்தும் பறையை அகற்றி விடுவது அந்த அடையாளத்தை மறைத்துவிடுவது முனைப்புப் பெற்றிருக்கிறது.

பறையர் சமூகத்தினரின் கடவுளான வல்லியப்பனைக் கைவிட்டு ஆகம முறைக் கடவுளரையும் வழிபாட்டு முறைகளையும் ஏற்றுக் கொள்ளல் அல்லது வல்லியப்பனை வல்லிபுர ஆழ்வாராக சமஸ்கிருதமய முகமாற்றி ஏற்றுக்கொள்வது நிகழ்கின்றது. இது ஒவ்வொரு சாதிகளுள்ளும் நிகழ்ந்து வருகின்றது. உயர் சாதியர் என்று அழைக்கப்படுபவர்களது சமயங்களிலும் சாமிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு நாகரிகப்படுத்துவது அல்லது நவீன மயப்படுத்துவது நிகழ்கின்றது.
இந்நிலையில் ஈழச் சூழலில் சாதிய அரசியலை முன்னெடுத்த இடது சாரிகளின் சாதிய அடையாளம் பற்றிய உரையாடல் எத்தகையதாக இருந்தது என்பதும் ஆய்விற்குரியது. இழிசனர் இலக்கியம் பற்றிப் பேசிய அவர்களது உரையாடல்களில் இழிசனர் கலைகள் பற்றிய உரையாடல்கள் எத்தகையவையாக இருந்தன என்பது கவனத்திற்கொள்ள வேண்டி இருக்கின்றது.

தமிழரது தேசிய அடையாள அரசியலை முன்னெடுத்து சமபந்தி போசனம் நிகழ்த்திய தமிழ்த் தேசிய அரசியல் முன்னெடுப்பாளர்கள் சமகளரி அல்லது சமமேடைக் கலைநிகழ்ச்சிகள் பற்றிய சிந்தனைகள், செயற்பாடுகள்  எவ்வாறாக இருந்தன என்பதும் ஆய்விற்குரிய விடயங்களாக இருக்கின்றது.
கலை பற்றிய கற்கை நெறிகளுக்குள்ளும் அவற்றை முன்னெடுக்கும் கலைப் புல நிறுவனங்களுக்கும் தொடர்பற்றவையாக அல்லது தகைமைக்கான கற்றலுக்கு உகந்தவையாக கருத்தில் கொள்ளப்படாத நிலையே பறை சார்ந்து காணப்படுகிறது.

நவீன கலை, பண்பாடு, சமூக, அரசியல், கல்வி ஆகிய தளங்களில் கருத்திற்கொள்ளப்படாத, சமூக மதிப்புப் பெறாத, புறக்கணிப்புக்கும்  புறத்திக்குமான பறையின் ஈராயிரம் ஆண்டு கடந்த வரலாற்று இருப்பின் அர்த்தம் உரையாடலுக்கு உரியது. இது பறையின் வலுவான முழக்கத்திற்கு வழிகோலுவதாக இருக்கும்.

பறையைக் கலையாக முழக்கும் பறையரதும் அதன் மதிப்பையும் மாண்பையும் உணர்ந்திருக்கும், விளங்கியிருக்கும் மற்றையோரதும்  எண்ணிக்கை தற்காலத்தில் சுருங்கியதாயினும் வலியதென்பதும் வரலாறு. இதற்கு வித்துவத்துடன் பறை முழக்கும் வல்லபங்களின் இன்றைய இருப்பும் அவர் தம் கலைச் சிறப்பும் நடைமுறைச் சாட்சியங்களாக இருக்கின்றன. இத்தகைய பின்னணியில் பறைபற்றிய சமகால உரையாடல்கள், ஊடாட்டங்கள் கவனத்திற் கொள்ளப்படுவது அவசியமாகின்றது.
தமிழகச் சூழலில் சாதிய அரசியலின் கூர்மை, அதுசார்ந்து பறையைப் போர்ப்பறையாக்கி முழக்குவது, பறையைத் தூக்கித் தூரவீசி விடுவது தேவையானவர் பறையைத் தூக்கி எடுத்துக் கொள்ளட்டும் என்ற இரு போக்குகள் வலிமை உடையவையாகக் காணப்படுகின்றன. இதற்குச் சமாந்தரமாக தலித் கலை விழாக்களில், இடது சாரி இயக்கங்களது மக்கள் கலை விழாக்களில் பறைக்கலை ஆற்றுகையாக முகங்கொள்ள வைக்கப்பட்டு வருகிறது.

இலங்கைச் சூழலில் இவ்வாறான சமூக, அரசியல் செயற்பாடுகளாக முன்னெடுக்கப்படும் நிலைமைகள் இல்லாமலே இருக்கின்றன. தலித் இயக்கங்களின் இன்மை, சாதிய அரசியல் பேசிய இடதுசாரி அமைப்புக்களின் மற்றும் தேசியவாத அரசியல் அமைப்புக்களின் கவனத்தில் இவை எடுத்துக் கொள்ளப்படாமையைக் காணமுடிகிறது.
ஆயினும் பறையின் முதன்மை முக்கியத்துவம் பற்றிய சிந்தனையோட்டத் தொடர்ச்சி நூலிழை அளவிலானதேனும் தொடர்ச்சியாக வந்திருப்பதனையும் காணமுடிகிறது. பறை பற்றிய எழுத்துக்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். நவீன இலக்கியங்களும் அருந்தலாகவே இவற்றைக் கையாண்டு இருக்கின்றன. நவீன கலை மரபுகளிலும் இவற்றின் இடம் மிகவும் அருந்தலாகவே இருந்து வந்திருக்கின்றது. சமூக அரசியல் முன்னெடுப்பில் பண்பாட்டு அடையாளத்தின் முக்கியத்துவம் உணரப்படாததும், விளங்கிக் கொள்ளப்படாததுமான நிலைமையே இருந்து வருகின்றது. இதுவும் பறையின் வலுக்குன்றிய நிலைமைக்குக் காரணமாகிறது.

திருவிழா, திருமண ஊர்வலங்களில் நட்;டுவமேளம், நட்டுவ மேளகாரர்களுடன் காணப்பட்டதான இரண்டாம் பட்சமான அணுகுமுறை  மருவிப் போய் ஆக்கபூர்வமானதொரு நிலமை ஏற்பட்டிருப்பது போல, பிண ஊர்வலத்தில் இடம்பெறும் ஏற்கத்தகாத நடவடிக்கைகள் அற்றுப் போகாமல் பறையையே அற்றுப் போக வைக்கும் நிலைமைக்கு இட்டுவந்த காரணங்கள் ஆராயப்பட வேண்டியவை. பிண ஊர்வலத்தில் மரியாதையுடன் கலந்துகொள்ள முடியாமையினதும்É அத்தகைய நிலமையினை மாற்றிக் கொள்ள முடியாமையினதும் காரணங்கள் எவையாக இருக்கின்றன என்பதை புரிந்து கொள்வது அவசியமாகின்றது.
சாதி அடுக்கில் நட்டுவ மேளகாரர் ஒப்பீட்டு ரீதியில் இடைநிலைச் சாதிக்குரியவராகவும் பறை மேளகாரர் அடிநிலைச் சாதிக்குரியவராகவும் காணப்படுவதும் இழவு வீட்டுடன் நட்டுவமேளம் அல்லது பெரிய மேளம் தொடர்பற்றிருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாமெனக் கருத முடிகிறது.

இத்தகைய ஒரு பின்னணியில்தான் பறை என்ற தமிழரின் புராதன கருவியையும் அதனை முழக்கிவரும் மூத்த குடியினரையும் செழும்பாக மூடியிருக்கும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரலாக முன்னெடுப்பதில் துணை நிற்பது மேற்கத்தேய, சமஸ்கிருதமய காலனித்துவ நீக்க முன்னெடுப்புக்களின் பாற்பட்டது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாயிற்று.
பல்தேசிய நிறுவன ஆளுகைக்கான உலகமயமக்கல் சூழலில்ஏகாதிபத்தியத்தின் நவகாலனிய கட்டத்தையும் வடிவத்தையும் எதிர்க்கும் வர்க்கத்தினர் இந்த அச்சுறுத்தலை மேம்பட்ட, படைப்பூக்கம் மிக்க உறுதியான போராட்டம் மூலம் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. தமது பண்பாடுகளில் உள்ள போராட்டக் கருவிகளை இன்னும் வலிமையோடு செலுத்த வேண்டியுள்ளது. தமது மொழிகள் ஒவ்வொன்றிலும் உள்ள போராட்டத்திற்கான பொது மொழியைப் பேச வேண்டியுள்ளது. “ஒன்றுபட்ட மக்கள் ஒற்றுமை தோற்றவில்லை என்றும்என்ற பாடலைப் பாட தமது பல்வேறு மொழிகளைக் கண்டு பிடிக்க வேண்டும்”. (கூகி வாத்தியாங்கோÉ 2004:4) 

பறைமேளம் சார்ந்த கலை, செயல்வாத முன்னெடுப்பு என்பது காலனிய ஆதிக்க நீக்கங்கள் பெற்ற சமூக உருவாக்கங்களின் பாற்பட்டதாகவும் அடையாளங்கள் எவையெனினும் அவை மதிப்புடனும் மாண்புடனும் கொண்டாடப்படுவதற்குரியவை என்பதும் பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களின் அடிப்படை ஆகும்

இந்தவகையில் நவீன அறிவுப்பரப்பில் பேராசிரியர் .கணபதிப்பிள்ளையின் பறை பற்றிய எழுத்துக்கள் தீர்க்கமான தொடக்கங்களாகக் காணப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து பேராசிரியர் சு.வித்தியானந்தன் பறைமேளக் கலையை எழுத்தின் மூலமாகவும் ஆற்றுகைகளில் இணைத்துக் கொண்டதன் மூலமும் சவால்களுக்கு மத்தியிலும் பறைமேளக் கலையின் மாண்பைத் தனது செயற்பாடுகள் ஊடாக அறிவுறுத்தியவராகக் காணப்படுகின்றார். இவர்கள் இருவருக்கும் பின்னர் பல்கலைக்கழகம் சார்ந்து மேற்படி தொடர்ச்சி வலுக்குன்றியதாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் கலாசார உத்தியோகத்தரும் ஆய்வாளருமான .தங்கேஸ்வரி மற்றும் அன்புமணி இரா.நாகலிங்கம் ஆகியோரது பணி குறிப்பிடப்பட வேண்டியது.
ஆயினும் 1990களின் நடுப்பகுதி முதல் கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத்துறையினர் நடத்தி வந்த வருடாந்த உலக நாடக விழாவில் பறையும் பறைமேளக் கூத்தும் முதன்மை இடத்தைப் பெற்றுக்கொண்டிருந்தன. பறைமேளக் கலைஞர் மாண்பு செய்யப்பட்டனர். கலாநிதி சி.மௌனகுரு வடிவமைத்த கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத்துறையின் பண்பாட்டு இசை அணியில் பறை முக்கிய இடத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறது.
மூன்றாவதுகண் உள்@ர் அறிவுத்திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழவின் பறை சார்ந்த செயற்பாடுகளின் பங்காளர்களாக பறைமுழக்கக் கலைஞர்களும் ஆர்வலர்களும் இணைந்து இயங்குவதாக வடிவமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை கால நவீன அறிவு மற்றும் கலைப்புல முன்னெடுப்புக்களிலிருந்து இது வித்தியாசமானதாக அமைகின்றது. பறையும் பறையரும் ஆய்வுப்பொருளாக மட்டும் கையாளப்பட்டதிலிருந்து பண்பாட்டு அடையாள உருவாக்கங்களின் பங்கெடுப்பாளர்களாகவும் இணைக்கப்பட்டிருப்பது நிகழ்ந்திருக்கிறது.
இந்தவகையில் கூத்து மீளுருவாக்கச் செயற்பாட்டில் பறையறைவோன் பாத்திர மீளுருவாக்கம் குறிப்பிடத்தக்கதாகும். “மட்டக்களப்பில் பயில் நிலையிலிருந்து வரும் வடமோடி, தென்மோடிக் கூத்துக்களில் வரும் பறையறைவோன் பாத்திரத்தின் சித்தரிப்பானது சமூகத்தில் பறையறைவோர் சமூகம் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறையின் பிரதிபலிப்பாகவே அமைந்துள்ளது.
பறையறைவோனின் ஆடை, அலங்காரம் அவன் வருகைக்கான தாளக்கட்டு, பாடல்கள், ஆட்டக் கோலங்கள், சபையோருடனான உரையாடல்கள், நடிப்பு முறைமைகள் எனச் சகல அம்சங்களிலும் பறையறைவோன் உயர்சாதிக் காரருக்கு அடிமையான, கிண்டலுக்கும், கேலிக்கும் உரிய பாத்திரமாகவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றான்.

குடிகாரனுக்குரியதான தாளக்கட்டிற்கேற்ப ஆடிக் கொண்டு ஒரு கையில் கள்ளுப் போத்தலுடன் பறையினைத் தோளில் தொங்கவிட்டபடி, திக்குத் திசை தெரியாத, கதைக்கப் பேசத் தெரியாத அகடவிகடப் பாத்திரமாகவே அறிமுகமாவான்”. (அண்ணாவியம்- 2012 - 24)

கூத்தரங்கினூடாக காலங்காலமாக வலியுறுத்தப்பட்டுவரும் பிராமணீய ஆணாதிக்க கருத்தியல்கள் கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டு மீளுருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அதாவது சாதி அடிப்படையிலான ஆதிக்க கருத்தியல் கட்டமைப்புக்கள் தலித்திய சிந்தனைகளுடனும் பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க கருத்தியல் கட்டமைப்புக்கள் பெண்ணியல்வாதச் சிந்தனைகளுடனும் கேள்விகளுக்குள்ளாக்கப்பட்டு கட்டவிழ்ப்புச் செய்யப்பட்டு மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய மாற்றங்கள் கூத்து எழுத்துருக்களை மையப்படுத்தி விடயம் சார்ந்த மீளுருவாக்கமாக அமைந்துள்ளன.” (அண்ணாவியம்- 2012 - 24)

பாரம்பரியக் கூத்துக்களில் சாதீய ஏற்றத் தாழ்வுப் பார்வையுடன், உயர் சாதிக்காரர்களின் மகிழ்ச்சிக்கான கோமாளிப் பாத்திரமாகத் தோன்றிய பறையறைவோன், மீளுருவாக்கம் செய்யப்பட்ட கூத்துக்களில் ஆக்க பூர்வமான, மனித வாழ்வுக்கு அடிப்படையான சிந்தனைகளை மேலெழுப்பி மனிதர்களை உரையாடச் செய்து சிந்திக்கத் தூண்டும் கூத்தராக மீளுருவாக்கம் பெற்றிருப்பது சிறப்பான விடயமாகும்.
இச்சூழ்நிலையில் பறையைப் பயில்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனப் பறையர் சமூகத்தால் தடை விதிக்கப்பட்டு பறைகளும் அடித்து நொறுக்கப்பட்டு தொழில் செய்பவர்களும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, பறையை அழைக்க வேண்டாம் என வெளிச் சமூகத்திற்கும் பகிரங்க வேண்டுகோள் விடுத்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை கவனத்திற்குரியதாகிறது.
பறைமேளம் அடிப்பது தற்காலத்தின் தேவைக்கு அத்தியாவசியமான பயன்பாடுள்ள ஒரு செயற்பாடல்ல. இது சமூகத்தின் மேன்மையையோ, சமூக சமத்துவத்தையோ, புகழையோ ஈட்டுவதுமில்லை. மற்றவரால் மதிக்கப்படுவதுமில்லை. மாறாக போதை தலைக்கேறிய கும்மாளக் கூத்தாக சமூகத்தை இழிவுபடுத்தும் செயலாக அமைவதோடு இதைச் செய்வோர் தீண்டத் தகாதவராக மனித நேயமின்றி ஒதுக்கப்பட்டும், சாதி வேற்றுமை, தாழ்வு மனப்பாங்கு விதைக்கப்பட்டும் கல்வி, பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்துவதாகவே அமைந்தள்ளது.” (மூன்றாவது கண் உள்ளுர் அறிவுச் செயற்பாட்டு மடல் 2013, பக்கம் 4)

இதற்கு மூன்றாவது கண் நண்பர்களின் எதிர்வினை கீழ்க்கண்டவாறு அமைந்தது. “ஆகவே இன்று தமிழ் அடையாளம் பற்றியும், தமிழின் தொன்மை பற்றியும் பேச முற்படும் நாம் வரலாற்று தொல்பொருள் ஆராய்ச்சிகளின்படியும் மானுடவியல், சமுகவியல் ஆய்வுகளின்படியும் தமிழர் சமூகத்தின் பூர்விகம் பறையர் சமுகத்திலிருந்தே ஆரம்பமாகியுள்ளது என்ற தற்கால ஆராய்ச்சி உண்மைகளை மனதில் இருத்திக் கொண்டு பறையர் சமுகத்தின் தமது அடையாளம் இழக்காத வகையில் மனிதர்கள் என்ற வகையில் தமது தனித்துவங்களைப் பேணியபடி சுயமரியாதையுடனும், சுயபலங்களுடனும், வாழ்வதற்கான கருத்தியல் நிலையினையும், செயற்பாட்டு முறைகளையும், உருவாக்கவது அவசியமாகும். குறிப்பாகத் தமிழ் அடையாளம் என்றும், தமிழரின் பாரம்பரியக் கலைகள் என்றும் கூறியபடி இக்கலைகளை அழியாது காக்க வேண்டும் என வெறும் வாய்ப்பேச்சாக மட்டும் சொல்லிக்கொண்டிருக்கும் நாம் உண்மையில் எந்தளவிற்கு இது குறித்த நடைமுறை ரீதியில் சாத்தியப்படக்கூடிய ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம் என்பது பற்றி எம்மை நாமே கேள்வி கேட்க வேண்டியுள்ளது.” (மூன்றாவது கண் உள்ளுர் அறிவுச் செயற்பாட்டு மடல் 2013,பக்கம் 5)

ஒரு மனிதர் தனது சாதிய அடையாளங்களை அதாவது தொழில்முறைகளை மறைத்துக் கொள்ள முற்படுவது என்பது அவர்களது சாதிய அடக்கு முறையை இல்லாதொழிப்பதற்கான தீர்வாகாது என்பது நிரூபணமாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள்இங்கே இவர்கள் சொல்லும் வன்முறையற்ற சமூக அடையாளம் எதுவாக இருக்கிறது?

பறையர்கள்  பறையை அடித்துக் கொண்டு அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் தாம் செய்து வரும் தொழிலைச் செய்து கொண்டு எவ்வித சுய சிந்தனையோ கல்வியறிவோ இல்லாது ஒருவித எதிர்ப்புணர்வும் இன்றி ஆதிக்க சாதியினர் சொல்லுகின்ற எல்லா அடிமாட்டு வேலைகளுக்கும் ஆமாப் போட்டுக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தால் அது வன்முறையற்ற சமூகமாக இருக்கும் என்பது தானே இவர்களது கோரிக்கை.” (மற்றது சஞ்சிகை, 2003) 

  பறைமேளக் கலையைத் தடைசெய்த நடவடிக்கையில் பறைமேளக் கலைஞர் அல்லாத படித்த அல்லது பிற தொழில்களில் ஈடுபடுபவர்களே தீர்மானம் எடுப்பவர்களாக இருந்திருப்பது அவதானிக்கப்பட்டது. பறையைத் தொழிலாகச் செய்பவர்கள் மேற்படி தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருக்க, பறையைத் தடை செய்தவர்கள் அதற்கு மாற்றான தொழில் ஏற்பாடுகளைச் செய்ததாகவும் இருக்கவில்லை.
  பறையைத் தொழிலாகச் செய்வது தடைப்பட்டுப் போக, மாற்றுத் தொழில் ஏற்பாடுகளும் அற்ற நிலையில் மேற்படி தொழிலை முன்னெடுத்த சிலர் பிச்சை எடுக்கத் தள்ளப்பட்டிருந்தனர். பிச்சை எடுப்பது சாதி அடையாளங்கள் அற்ற தொழில். பறையை முழக்கி அடையாளம் காட்டுவதிலும் பிச்சை எடுத்துத் திரியவிடுவது பிரச்சினையற்றதாக ஒரு சாராருக்கு இருந்திருக்கிறது.

  இது பறையைத் தொழிலாகக் கொண்ட சாதியினர் மீது உயர்சாதியினர் எனத் தம்மைக் கட்டமைத்துக் கொண்டோர் கட்டவிழ்த்து விட்டுவரும் பல்வகை வன்முறைகளதும் எதிர் வெளிப்பாடாகவே காணமுடிகிறது.
  இங்கு அடையாளப்படுத்தித் தாக்குபவர்களும் அடையாளம் மறைத்துத் தப்பித்திருக்க விளைபவர்களதும் இலக்காக சாதிய அடையாளத்துடன் கூடிய தொழிலைப் பெருமிதமாகவும்É வருவாய்க்குரிய தொழிலாகவும் முன்னெடுத்துவரும் கலைஞர்களையே தாக்கி அழிப்பதாகக் காணப்படுகிறது.

  இந்நிலையில் மேற்படி அகப்புற வன்முறைகளை எதிர்கொண்டு நின்ற ஒருவராக களுதாவளையைச் சேர்ந்த .பரசுராமன் காணப்படுகின்றார். இவரது நிலைப்பாட்டுக்கு உறுதுணையாகவும்É வலுவான எதிர்க்குரலாகவும் இவரது பாரியார் இருந்தார்;. இவர் பறைமேள வித்துவானும் பன்முக ஆளுமையுமான காலாபூசணம் ஆனக்குட்டி அவர்களின் மகளாவார்.
  “குடிமைக்கு போவதா விடுவதா என்றதை எந்த வகையிலும் தீர்மானிக்க முடியாதவர்களாக இருந்த காலத்தில் மௌனமாக இருந்தவர்கள்போவதா விடுவதா என்பதைத் தீர்மானிப்பவர்களாக நாங்களே இருக்கின்ற காலத்தில் தடைபோடுகிறார்கள்என்ற .பரசுராமனின் கூற்று இங்கு கவனத்திற்குரியதாகிறது. இது சாதி சார்ந்து ஏற்பட்டிருக்கின்ற நிலைமாற்றத்தை அறிவிப்பதாக இருக்கிறது.

  இந்நிலையில் உயர்சாதியார் எனப்படுபவரின் சாவீடுகளில் குடிவெறியும் சாதிவெறியும் கலந்து விளைவிக்கும் கேவலங்கள் அவமானகரமானவை. இந்தச் செயலூக்கத்தினதும் அதனை அனுமதித்துக் களிகொள்ளும் உளவியலும் ஆய்வுக்குரியவை.

  பறைமேளக் கூத்துக்கலையை வெகுசனமயப்படுத்துவதற்கான பங்குகொள் ஆய்வு என்பது சாதிய ஆதிக்கங்களையும் பல்வகைப்பட்ட காலனியமயப்படுத்தல்களையும் எதிர்கொள்வதுடன் தொடர்புபடுகின்றது. மாறாக சாதிய ஆதிக்கங்களின் வன்முறைகளையும் அதன் தாக்கங்களையும் விளைவுகளையும் கருத்திற் கொள்ளாது பறையை வெறும் காட்சிக்கான ஆற்றுகைக் கலையாக கையகப்படுத்துவது பண்பாட்டு கொள்ளையாகவே கணிக்கப்படுகின்றது.

00

Related

கட்டுரைகள் 8198301671180623969

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item