சமகாலக் கவிதைகளின் அகவய இயங்கியல்


ஒரு மனமுதல்வாத வாசிப்பு

ந.மயூரரூபன்


மனிதன் இயற்கை வடிவங்களிலிருந்து உருப்பெறுகின்றான் என்பது பொதுவான சமூக விதி, சமூகமையம் (Sociocentric) என்பது ஒரு தனியனின் இயல்பை எப்பொழுதும்; ஊடறுக்கும் வண்ணம் தனது மைய அலைகளை உருவாக்கிக் கொண்டிழுக்கும் அந்த வகையில் ஒரு தனியன் தனது சமூக- குழு வாழ்தலின் அகவய – புறவய இயங்கியல்களின் சட்டகத்துக்குள் நடந்து போகிறான்.

பொதுப்புத்தி சார்ந்த கருத்தியல் வெளிகளையும், பொருள்கொள் வெளிகளையும் கடந்து ஒரு தனிமனிதன் அல்லது எழுத்தாளனின் பண்புகள், அவனின் புலனுணர்வுதரும் மன நிகழ்வுகளைப் பேசுகின்றன. அவனது இருப்பு புலனுணர்வுகளில் சீரற்ற அசைவில் தனக்கான மனவெளிகளைக் காண்பதாய் அமையும்.

இத்தகைய தளத்திலேயே நாம் மனமுதல்வாதத்தின் அடிப்படைகளை இனங் கண்டு கொள்ள முடியும். லெவிஸ்ட்ராஸின் சிந்தனைக்கு றொபேட் எப் மேர்பி மனமுதல்வாதம் (ஆநவெயடளைஅ) எனப் பெயர் சூட்டுகின்றார். தொன்மம், மரபான தத்துவ விசாரணைகள், துன்பம், இழப்பு, வலி, கேள்விக்குள்ளாக்குதல், எனப் பேசுகின்ற இச்சிந்தனை, மனதுக்கும், செயலுக்கும் இடையிலான இயங்கியலில் இருந்து தோற்றம் பெறுகின்ற கலர்சாரக் கூறுகளுடன் ஒத்திருக்கின்றது.

இங்கு மனமுதல்வாதம் என்ற பதத்திற்குள் மனநிகழ்வின் பன்முகத்தன்மையை அடையாளம் காணமுடியும். இது பொருள்முதல்வாத, கருத்து முதல்வாத சிந்தனைகளுக்கு இயைபுடையது. நாம் எப்போதும் அனைத்து விடயங்களிலும் பொருள்முதல்வாத – கருத்துமுதல்வாதக் கூறுகளையே அடையாளம் காண்பதற்கு விரும்புகிறோம்.

இங்கு மனமுதல்வாதம் அகவய (ளுரடிதநஉவ), புறவய (ழுடிதநஉவ) இயல்புகளோடு அமைந்தது. இவை இரண்டையும் மனம் எனும் ஒரு பதத்திற்குள் இணைத்துக் கொள்ளலாம். மனிதனின் மன அமைப்பு என்பது நரம்பு மண்டலம், உடலியல் பண்புகளால் அமைந்தது. இங்கு மூளைதான் மனம்.
பொதுவாக மூன்றாமுலக நாடுகளின் இலக்கியப் படைப்புகள் தன்னைக்கண்டு தன்னிடம் பேசிக்கொள்ளும் இயல்பு கொண்டன என்பர். இது ஓர் பொது அடையாளப் படுத்தலாக இருந்தாலும் படைப்பின் அகவய இயக்கத்தினை இங்கு நாம் முதன்மைப்படுத்திக் கொள்ள முடியும்.

ஓர் எழுத்தாளன் தனது குழுசார் அடையாளப்படுத்தும் - அடையாளங்களாலும் சூழமைவுதரும் அகவயச் செல்வாக்கிற்குட்பட்டவனாகவும்/

மீறும் அகவயத்தைக் கொண்டவனாகவும் காணப்படுகின்றான். இங்கு தன்னை தனது எழுத்தின் பொருளாகக் காண்கின்றான்.

அந்த அடிப்படையில் கவிதைகள் பேசுகின்ற மனமொழியானது, அது கொண்டிருக்கின்ற குறித்த கவிதையின் காலம் மற்றும் தளத்தின் அடிப்படையிலானது. காலமும், தளமும் தருகின்ற அடையாள-அடையாளம் மறுக்கின்ற அடுக்குகளின் எல்லைக்குள் இவ் எழுத்துக்களை இனங்காணலாம். இங்கு தமக்கான சுய கருத்தியலை பெருங்கதையாடல்களுக்குள் இனங்காணுகின்ற வடிவத்தினையும், பெருங்கதையாடல்களை; கேள்விக்குட்படுத்தி ;அடையாளத்தை மறுக்கின்றஃ தனக்கான தனித்துவ உரையாடல்களை பேசுகின்ற எழுத்துக்களை கவனப்படுத்த முடியும்.

ஒரு தனிமனிதனின் மன இயக்கத்திற்குள் சமூக அமைப்புடன் இயைந்து போகின்ற தன்மையும், சமூக அமைப்பை- அதன் மூடுண்ட வெளிகளை உடைத்துப் பார்க்கின்ற தன்மையும் ஒரே சமயத்தில் கட்டமைந்திருக்கக் காணமுடியும். ஒவ்வொரு கவிதையும் எழுத்தாளனின் மன இயக்கத்தின் நாடிகளிலேயே துடித்துக் கொண்டிருக்கின்றது.

எமது படைப்புச்சூழலிலும், குறிப்பாக சமகாலப் படைப்புகளில் இத்தகைய வாசிப்பைப் பெறுவதற்கான முயற்சியாக இக்கட்டுரை அமைகின்றது. இங்கு சமகாலப் படைப்புக்களின் குறுக்குவெட்டுமுகமாக ஐந்து சமகாலக் கவிஞர்களின் கவிதைகளை வாய்ப்புப் பார்க்கிறேன்.

அவர்கள் தொடர்பான சுருக்க விபரம்:

1. சேரன் : உருத்திரமூர்த்தி சேரன் (1960), அளவெட்டி, யாழ்ப்பாணம்.
  ஈழத்தின் மிக முக்கியமான கவிஞர்;
  கனடா வின்சர் கல்கலைக்கழகத்தில் சமூகவியல்,
  மானுடவியல் பேராசிரியராக இருக்கிறார்.
  இதுவரை வெளிவந்த கவிதை நூல்கள்:
யமன், இரண்டாவது சூரிய உதயம், நீ இப்போது
     இறங்கும் ஆறு, மீண்டும் கடலுக்கு, காடாற்று.

2. கருணாகரன் : சி.கருணாகரன் (1963), இயக்கச்சி.
 ஈழத்தின் சமகாலத்தின் முக்கியமான கவிஞர்களில் ஒருவர்.
 ஊடகவியலாளர் மற்றும் பத்தி எழுத்தாளர்
 இதுவரை வெளிவந்த கவிதை நூல்கள்:
  ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல், ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள், பலியாடு, எதுவுமல்ல எதுவும், ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்.  

3. பா.அகிலன் : பாக்கியநாதன் அகிலன் (1970), நல்லூர், யாழ்ப்பாணம்.
 ஈழத்தின் சமகாலத்து முக்கியமான கவிஞர்களில் ஒருவர்.
 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை
 விரிவுரையாளர்.
 இதுவரை வெளிவந்த கவிதை நூல்கள்:
  பதுங்குகுழி நாட்கள், சரமகவிகள்.

4. சித்தாந்தன் : சபாபதி உதயணன் (1977), கோண்டாவில், யாழ்ப்பாணம்.
 ஈழத்தின் சமகாலத்து முக்கியமான கவிஞர்களில் ஒருவர்.
 ஆசிரியர்.
 இதுவரை வெளிவந்த கவிதை நூல்கள்:
காலத்தின் புன்னகை, துரத்தும் நிழல்களின் யுகம்5. தானா விஷ்ணு : தம்பித்துரை விசயசங்கர் (1976), இமையாணன், யாழ்ப்பாணம்.
 ஈழத்தின் சமகாலத்து முக்கியமான கவிஞர்களில் ஒருவர்.
 ஆசிரியர்.
 இதுவரை வெளிவந்த கவிதை நூல்கள்:
நினைவுள் மீள்தல், கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்.


இங்கு நான் வாசிப்பு எடுத்துக் கொண்டிருக்கும் கவிதைகளை பின்வரும் மூன்று தலைப்புக்களில் அடையாளப்படுத்துகின்றேன்.

அ. கவிதைப் பொருள்தரும் மனம்.
ஆ. கவிதை மொழிதரும் மனம்.
இ. கவிதைப் படிமம் தரும் மனம்.

அ. கவிதைப் பொருள்தரும் மனம்;

கவிதையின் பொருள் அது தரும் கருத்தியல், எழுத்தாளனின் இருத்தல் தொடர்பான சுதந்திரத்தின்மேலான கேள்விகளில் இருந்து பிறக்கின்றது. அவனின் சுதந்திரத்தை ஊடறுக்கும் அதிகார வகைகளின் ரோந்தும் விருப்புக்களின் பாதைத் திறப்பும் அவனின் அகவயத்தில் அலைகளைத் தூண்டும். இங்கு பின்வரும் பொருட்பிரிப்பின் அடிப்படையில் கவிதை வாசிக்கப்படுகிறது.

மண்ணிழப்பு / அகதியாதல், தொன்மம், மரபான தத்துவ விசாரணைகள், காயம்-வலி-இழப்பு, காமம்.

1. மண்ணிழப்பு / அகதியாதல்

 புறஉலகின் இயங்கியல் சாரமாக அநேக சமூக மக்கள் எதிர்கொள்ளும் ஒரு வாழ்க்கையின் அங்க இயல்பு மண்ணிழப்பு (டுயனெடநளளநௌள) என்பது பின்காலனித்துவ நாடுகளின் இதன் கொடுநிழலினை நாம் காணமுடியும், எமது அனுபவ அடுக்கில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இதன் எரிதணலை உண்டுகொண்டிருக்கின்றன(இங்கு மண்ணிழப்பு என்பது நிலத்தை இழந்தவர், நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர் எனும் பெர்ருளில்  வாசிக்கப்படக் கூடியது)

(1) “இப்பொழுது இருக்கிறது
காயம்பட்ட ஒரு பெருநிலம்
அதற்கு மேலாக பறந்து செல்ல
எந்தப் பறவையாலும் முடியவில்லை
நாங்கள் திரும்பிவரும் வரை”
(சேரன் ஊழி)

“என் இயலாமையின் கண்ணீரில்
நீ வளரும் நாடற்ற நாடு.”
(சேரன் மணல்வெளி)

(2) “பள்ளிக்கூடங்களை மருத்துவமனையாக்கி
மருத்துவமனையை கொலைக் கூடங்களாக்கி
மணல்வெளியை புதைகுழிகளாக்கி
வீடுகளை அகதிநிலமாக்கி
கடற்கரையை மலக்காடாக்கி
கண்ணீரை ஏந்தி நின்ற சனங்களை ஏளனம் செய்தனர்
யுத்தப் பிரபுக்கள்”
(கருணாகரன் சாவரங்கு  )

பெரும் போருக்குப் பின்னர், தான் விட்டுவந்த நிலம், காயப்பட்ட நிலமாக, “நாடற்ற நாடு” என சேரனால் அழைக்கப்படுகின்றது. எட்ட நிற்கும் இயலாமையின் மன அவசத்தையும் இங்கு காணமுடியும்.

வாழ்ந்த, திரிந்த நிலம் அதன் இயல்புதிரிந்து கொலைக்களமாகவும், புதைகுழியாகவும், மலக்காடாகவும் மாற்றப்பட்டு மக்கள் இரு தரப்பினராலும் ஏளனப் படுத்தப்பட்டதை கருணாகரனின் குறித்த கவிதை பேசுகின்றது.

ஒருவன் மண்ணிழந்தவன் ஆகுதல் என்பது அவனுக்கு மண்ணோடு இருக்கும் உறவுசார்ந்த நிலம் தொடர்பானது. எழுத்தாளனின் - அல்லது ஒரு குழுசார் அங்கத்துவ அடையாளம் என்பது அவர்களின் ஆழவேர்கொண்ட பிரக்ஞை சார்ந்தது.

(2) தொன்மம்

கலை என்பது அறிவியலுக்கும், தொன்மத்திப்பிற்கும் இடைப்பட்டது என்கின்றார் லெவிஸ்ட்ராஸ் தொன்மங்களினூடு சமூகத்தின் கூட்டுமன இயக்கத்தினை அறிந்து கொள்ளலாம். தொன்மங்கள் எப்பொழுதும் வரலாறுடன் ஊடாடுவது6 இங்கு கவிதைகளில் அரசியல், வரலாற்று விமர்சனத்தின் கூறுகளை இனம்கண்டு கொள்ளல் பொதுவாக இயற்கை கலாசாரம் எனும் இரண்டையும் ஒன்றிணைக்கும் செயலினைத் தொன்மக் கதைகள் செய்கின்றன என்பர் லெவிஸ்ட்ராஸ். இங்கு தொன்மக்கதைகளின் பெருங்கதையாடல் பண்பு எழுத்தாளர்களின் அரசியல் கருத்துக்கு வெளிக்குள் உடைபடுவதை கண்டுகொள்ள முடியும்.

இங்கு சித்தாந்தனது கவிதையில் மனித சமூகத்தின் இரத்த வெறிக்கான காரணத்தை தொன்மத்தினூடு அடையாளப்படுத்தும் தன்மையும் காணப்படுகின்றது.

(i) “கல்வாரி மலைக்காற்றைப் பிளந்த
 உமது சொற்களில்
 இருளின் வலி படர்ந்திருந்தது
 சிலுவையில் வழிந்த பச்சைக் குருதியை
 நீர் அவர்களுக்கு வழங்கியிருக்கக் டாது
 பிறகுதானே
 இன்னுமின்னும் அதிகமாகியது இரத்தவெறி”
(சித்தாந்தன், இருளுள் வதைபட்டுச் சிதைகிற ஒளி  
      ஓவியம்)

அதேபோல் தானா விஷ்ணுவின் கவிதையில் வைரவர் அதிகாரத்தரப்பினரின் தொன்மக் குறியீடாக பயன்பட்டிருப்பதையும்  காணலாம்.

(ii) “மனிதர்களை விட்டகன்ற குறிகளை
மாலைகளைச் சூடி
திமிரெடுத்தாடினார் வைரவர்
சிறுதுளி விந்து கசிந்து வீழ்ந்தது மண்ணில்”
(தானா விஷ்ணு, பெருஞ்சுடரில் கருகிப்போன விட்டிற்
பூச்சி)

இங்கு கவிதையில் தொன்மங்கள் மன இயங்கியலை புறவய நிலையில் அறிவுபூர்வமாக அணுகியிருப்பது கவனத்திற்குரியது.

(3).மரபான தத்துவ விசாரணைகள்

பொதுவாக தத்துவ விசாரணைகள், ஒருவனின் துன்பம், வலி,இழப்பு, ஏமாற்றம் தருகின்ற இயலாமையில் தோன்றுகின்ற மன நிகழ்வால் அமைகின்றது. இது தனது இருப்பு தொடர்பான உலக வாழ்க்கையை பற்றற்ற நிலையில் ஒரு உலகப் பொதுமைக்குள் பர்க்கின்ற பார்வையாக அமையும்.

நீ எதைக் கொண்டுவந்தாலும் உனது தேகமும் உனது பெயரும் இவ்வுலகில்தான் உருப்பெற்றது. உனக்கு ஏதும் சொந்தமில்லை என்கின்ற ஒரு பொதுக்கருத்தியல் எமது சமூகத்தில் மரபான சொல்லாடலுக்குள் கட்டமைந்த மனதின் வெளிப்பாடாய் அமைகின்றது.

(i) “எதையும் கொண்டுவந்ததில்லை

தேகத்தையும்
தேகத்திற்கொரு பெயரையும் புனைந்ததிங்குதான்
………………..
தோலோடு இடுங்குண்ட இந்தச் சொற்கள்
அந்த சிறுகொண்டைக் குரவி
காலத்தின் வெளியில் எஞ்சுவதில்லை ஏதும்”
(பா.அகிலன,; நீர்க்குமிழி)

அதேபோல் பறவைகளையும், மரத்தையும் கொண்டு எழுதப்பட்ட இக்கவிதையில் அது அது அதன் இயல்பால் அமைந்த விதிக்குட்பட்டது. – அது அதன் கடமையைச் செய்யும் எனும் பொதுக்கருத்தியலுக்குள் ஒரு பறவையின், பறவைக்கூட்டத்தின் தனியடையாளங்களின் முக்கியத்துவம் அவசியமில்லை என்பதை மரபான தத்துவார்த்த சட்டகத்திற்கூடான விமர்சனமாக கருணாகரன் தந்துள்ளார்.

(ii) “எந்தப் பறவை வந்தாலென்ன
விலகிச் சென்றாலென்ன
பறவைகளுக்காகவே காத்திருக்கின்றன
இலைக்கம்பளம் விரித்து ஒவ்வொரு மரமும்
இரவும் பகலும்……….”
(கருணாகரன், வரவேற்பு)

(4) காயம், வலி, இழப்பு
காயம், வலி, இழப்பு என்பது மனிதர்களின் அனுபவங்களில் பொதுச்சொற்கள் எனினும் ஒவ்வொரு தனிமனிதனுக்குமான மனவலியும், அதன்மொழியும் தனி;த்தனியானது குறிப்பாக இலங்கையில் நடந்து முடிந்த போர், போருக்கு பின்னான காயங்களும், வலிகளும் இழப்புக்களும் தனித்த உணர்வுச் சூழலை ஏற்படுத்த வல்லன.

கூட்டு வன்புணர்வின் பின்னான மனவலியை வெளிப்படுத்தும் கவிதை. சொல்முறையால் மனத்தை அதிர்விக்கும் அமைப்புக் கொண்ட பா.அகிலனின் அகவயம் தருகின்ற, பாதிப்பு தருகின்ற மனமொழியின் முன்னே காலம் கலங்கியாடி மடிகின்றது.

(i) மந்;தோவின் பெண்கள்
“ஒட்டிக்கிடந்த உயிரின் கடைசிச் சவ்வு

அருகுவர
யாந்திரிகமாய் நீக்கினாள் கீழாடை
இரத்தக் கிடங்கில்
மொய்த்துக் கிடந்தன ஆயிரமாண் குறிகள்

நீரள்ளிப் பெய்தபின்
அவள் மூளையில் இருந்து
ஒவ்வொரு ஆண்குறியாய் பிடுங்கத் தொடங்கினேன்.

காலம் கலங்கியாடி மடிந்தது.”
(பா.அகிலன்)

சாவீட்டுச் சடங்கு செய்யமுடியாத உறவுகளின் இழப்புத் தருகின்ற வலியைச் சேரனின் காடற்றுப் பேசுகிறது.
(ii). “முற்றிற்று என்று சொல்லி
காற்றிலும் கடலிலும் கரைத்துவிட்டு
கண்மூட
காற்றும் கிடையாது
கடலும் கிடையாது
காடற்று எப்போதோ?”
(சேரன், காடாற்று)

சாவின் புன்னகையைக் காண்கின்ற வலி, இழப்பு, என்ன வகையான மன அமைப்பை உருவாக்கப் போகின்றது? உருவாக்கி இருக்கின்றது?
(iii) ரத்தக்கிடங்கு
“பெருங்கிடங்கினுள்ளே காத்திருந்தது
ரத்த நிறத்தினொரு நிழல்

ஆயிரமாயிரம் தலைகளைக் கொன்றுபோடும்
இந்த நாட்களில்
கறுத்திருக்கும் வெயிலுக்குள்
கொப்பளிக்கின்றது இரத்தப் பெருக்கு

சாவின் புன்னகைகளைக் கண்டேன்”;
(கருணாகரன்)

கடவுளர்களின் நகரங்களில் வாழும் மனிதர்களின் பிரார்த்தனை தெருவில் சுடப்பட்டு இறந்தவனின் இறுதி மன்றாட்டாயும் கதறலாயும், நிர்க்கதியற்றலையும் பயங்கரத்தின் வலியை சித்தாந்தன் தன்மொழியில் தருகின்றார்.

(iஎ) “ஒப்பாரிகளும் விசும்பல்களும்
ஓலங்களிலுனாலுமான நகரத்தில்
சனங்களின் பிராத்தனை
தெருவில் சுடப்பட்டு இறந்தவனின்
இறுதி மன்றாடலையும் கதறலையும்
நிர்க்கதியாய் அலைகிறது.”
(சித்தாந்தன், கடவுளர்களாக நகரங்களில் வாழுதல்)

முழுமையாக எல்லாவற்றையும் இழந்துவிட்டு சுதந்திரத்தால் என்ன பிரயோசனம் எனக் கேட்டும் தனாவிஷ்ணுவின் மனோநிலை போரை-சுதந்திரத்திற்கான போராட்டத்தை விமர்சிக்கும்;; இழந்தவனின் மனக்காயமாக பதியப்படுகிறது,

(எ) “மாண்டவர் இனி வரார்
எந்தப்பிள்ளையும் உயிர் திரும்பா
தகிக்கும் பிணக்குவியலுக்குள்
இரத்தம் உறைந்த தங்கவாள்
கண்டெடுத்தென்ன பிரயோசனம்”
(தானா விஷ்ணு, கனத்தநாள்)(5) காமம்
காமம், இயல்பூறிய உணர்வு மனதிடுக்குகளில் ஊறும் தாகம், பசி, தேவை கவிதைகளில் அறிவு நிலையில் தள்ளிவைக்கப்படும் மனநிகழ்வு. இன்று மனமொழிகளில் கவிதைகளில், காமம் அதன் பன்முகத்தளத்தில் பேசப்படுகின்றது.

மோகத்தின் முரணை – அதன் இயல்புகடந்த புணர்ச்சியை சித்தாந்தனின் கவிதை சொல்கிறது.

(i) “திசைகளின் முரண்களிலிருந்து
ஈனத்தில் பிறப்பெடுக்கும் வனமிருகங்களின்
ஒழுங்கற்ற ஒலிக்குறிகளை
வாசித்தபடி புணரத்தொடங்கினோம்
ரூபங்களின் இணைவில்
பெருகிய மோகத்தின் உச்சத்திலிருந்து
வடிந்து வற்றத் தொடங்கியது பசி”
(சித்தாந்தன், பாறைகளுக்கிடையில் விழித்திருப்பவனின் இரவு)

காமத்தின் நினைவு மயக்கத்தை சேரனின் திணைமயக்கக் கவிதை ஒன்று நினைவு மீட்கின்றது.

(ii) “நின்றும் இருந்தும் கிடந்தும்
படர்ந்தும் உன்னைத் தொட்டுணர்ந்த
காலங்கள்
இருட்டும் திருட்டும் எனச்
சேரா
திருக்கமுடியுமோ இந்நாளில்
ஊர்வாயை மூட
ஒரு துளி சுக்கிலம்.”
(சேரன், திணைமயக்கம் 19)

காமம்;;.
நினைவைப் பெருக்குவது.
பா.அகிலன் சொல்வது போல் அது பல்லாயிரம் ஊஞ்சல்கள், அவரவர் கரத்தில் அவரவர் கிண்ணம்.

ஆ. கவிதை மொழி தரும் மனம்

கவிதை மொழி எழுதுபனிடம் இருக்கின்ற தனிமொழி எங்கிருந்தோ அவனுக்குத் தெரியாமல், அவனது தேவைக்கேற்ப, கலாசாரத்தி;ற்கேற்ப அவனது மொழிதலை நிறைவு செய்யும் ஒன்று. அதனை மொழிக்கிடங்கு என்பர். இது சமூகம் தந்தது. சாதி அல்லது குடும்பம் தந்தது18 எழுத்தாளனின் நனவிலி மனதின் சேகரத்திலும் அவனது அகவய இயக்கத்தின் வெளிப்பாட்டிலும் இம்மொழிக்கிடங்கின் தனித்துவத்தை அடையாளம் காணமுடியும்.
மொழியினூடான மிகையூடாட்டம் இதனை வசப்படுத்தும்.

சேரனின் இம்மூன்று வரிகளும் வெளிப்படுத்தும் அரசியல் கருத்துருவப் பரிமாணம் பாரியது.

“நீரற்றது கடல்
நிலமற்றது தமிழ்
பேரற்றது உறவு”


இதேபோல் பா.அகிலன் கவிதையொன்றின் பகுதி
“தாய் வெந்து முதுமை கிடந்த இடத்தில்

அவனில்லை
அவரில்லை

எவருமில்லை

பாழ்”
(தாயுரை)

மொழியைப் பயன்படுத்துவதிலுள்ள நுட்பத்தை, அதன் அறிகை நிலைப் பயன்பாட்டினை நாம் இங்கு கண்டுகொள்ள முடியும். அதன் வரிகளுக்கிடையிலான இடைவெளி கவிதையின் மொழியற்ற மொழிதலைச் செட்டாக்கியுள்ளது.


இ) கவிதைப்படிமம் தரும் மனம்

கவிதைப் படிமம் ஒரு கவிதையில் தனக்கான கருத்துருவத்தை உற்பத்தி செய்கின்றது. அது எழுதுபவனின் கருத்துருவ வடிவத்திற்கும், வாசிப்பவனின் கருத்துருவ வடிவத்திற்கும் நடுவேஃபொதுவில் நிற்பது. ஒரு மாயத்திரை போன்ற கவிதைப்படிமம் உண்மையைப் போன்ற ஒன்றையே தரவல்லது. கவிதைப்படிமப் புனைவால் பேசுபொருள் இன்னொன்றாய் மாறுவதற்கான கதவுகள் திறக்கப்படுகின்றன.
பொதுவாக போர்ச்சூழலில், அதிகாரம் மேலோங்கிய அரசியல் சூழலில் கவிதைகளின் மன இயங்கியல் படிம மொழியாய் அமைந்துவிடும் வாய்ப்பை அதிகம் கொண்டுள்ளது.

இறுதிப்போரின் இறுதிக்கட்டத்தில் பாலச்சந்திரனின் சாவைப் பேசுகிறது தானா விஷ்ணுவின் இக்கவிதை.

“தோல்வியின் மௌனத்தை
அணிந்து வெளியேறும் குட்டி இளவரசன்
பொம்மைகளைப் பற்றியபடி
செத்துவிழுகிறான்
சாம்ராட்சியத்தின் இறுதி மயானவெளியொன்றில்”
(தானா விஷ்ணு, ஒரு சாம்ராட்சியம் - மூன்று நாய்கள்)

சித்தாந்தனின் இக்கவிதை, ஒரு அரசியல் வெளியில் நிகழுகின்ற சாவின்பின்னான கருத்துக்கூறலை விமர்சிக்கின்றது. யேசுவைப் படிமமாக்கியுள்ளது.
    “யேசுவே
நீர் சிலுவையில் அறையப்பட்ட போது
துயரத்தாலும்
அவமானத்தாலும் தலை குனிந்தீர்
உமது சீடர்களோ
தாகத்தாலும் பசியாலும்
தலை தாழ்ந்து விட்டதாகச் சொன்னார்கள்”
(சித்தாந்தன், இருளுள் வதைபட்டுச் சிதைகிற ஒளி ஓவியம்)

எழுத்தாளனின் மனமொழி பேசுகின்ற கவிதைப் படிமத்தை வாசிக்க கவிதைக்கான காலம், அதன் தளம், உணரப்படவேண்டிய தேவை உண்டு. அவ்வாறில்லாவிட்டாலும் அது இன்னொரு வாசிப்பினைத் தரக்கூடும்.

ஒரு கவிதையின் அகவய இயங்கியல் என்பது எழுத்தாளனின் மனமொழி. அகவய இயங்கியல் கட்டமைக்கப்பட்ட சட்டகம் என்பது தனது சுயத்தைப் பிரதான மையமாகக் கொண்டு தனது வாழ்வியல் இருப்பு, சமூக, பொருளாதார, அரசியல் ஊடாட்டங்கள், தன்மீதான கழிவிரக்கம், கோபம், சித்திரவதை, வலி, பயம், மோகம் என ஞாபகங்கள் குத்தியெடுக்கின்ற ஒவ்வொரு மன அடுக்கின் கூறுகளுமாய் அமைகின்றன. இங்கு கையாளப்பட்ட கவிதைகள் இறுதிப் போரின் பின் குறித்த எழுத்தாளர்களால் வெளியிடப்பட்ட தொகுப்புக்களில் இருந்து எடுக்கப்பட்டவை. எனவே தனியனின்-கூட்டு மனங்களின் மன அவசத்தினை இங்கு தரிசிக்க முடியும்.

ஒரு எழுத்தாளனின் கவிதை/படைப்பு என்பது தத்துவ, ஒழுக்க, நீதி, அரசியல், மத, சிந்தனைகளிலிருந்து விடுபட்ட வெள்ளை எழுத்தாக அமையமுடியாது.

கவிதையின் அகவயம் என்பது எழுதுபவனதும், வாசிப்பவனதும் அகவய அமைப்பிலேயே தங்கியுள்ளது. இருவரினதும் கருத்துவ செல்வாக்கு இங்கு இருக்கும்.அவரவர் சமூகம், இனம், மதம், இன்ன பிறகூறுகள் தந்த புறநிலை அருட்டல்கள் இந்த வாசிப்பில் தேவைப்படுகின்றது.

எழுதுதல் மன அமைப்பின் நுண்ணுடுக்குகளில் இருந்து உருவாவது ஒருவன் எதை, எப்படி எழுதுகின்றான் என்பதை அதுவே கட்டமைக்கின்றது. வாசிப்பவனின் மனமுதல்வாதந்தான் எழுத்தின்/கவிதையின் சித்தாந்தத்தை உருவாக்கிக் கொள்ளும்.
Related

கட்டுரைகள் 2239385074943168171

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item