‘அல்லது சிலுவையில் அறையப்பட்ட யேசு’


-சித்தாந்தன் சபாபதி

நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்கப் பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.

-நகுலன்

இந்தத் தொகுதியிலுள்ள கவிதைகளை படித்து முடித்தபோது நகுலனின் இந்த வரிகள்;தான் என் நினைவுக்கு வந்தன.

‘அல்லது யேசுவில் அறையப்பட்ட சிலுவை’- என்ற இந்த தலைப்பின் முன்னால் ‘சிலுவையில் அறையப்பட்ட யேசு’ என்ற தொடர் தொக்குநிற்பதாகவே படுகின்றது. ஆதலால் இதனை ‘சிலுவையில் அறையப்பட்ட யேசு அல்லது யேசுவில் அறையப்பட்ட சிலுவை’ என்றும் வாசிக்க முடியும்.

00

தன்னறிமுகக்குறிப்பு - அங்கிகாரத்தைக் கோரும் மாற்று வடிவம்

இந்த தொகுப்பின் ‘தன்னறிமுகக் குறிப்பை’ வாசிக்கத் தொடங்கியபோதே. எனக்குள் சில கேள்விகளும் எழத் தொடங்கியிருந்தன.
“இன்று சமூகத்தில் ஒரு தமிழ்க் கவிதைத்தொகுப்பிற்கு கட்டப்பட்டு இருக்கின்ற அத்தனை பலங்களையும் அங்கீகாரங்களையும் எனக்குப் பொருத்திக்கொள்வதில் கொஞ்சமும் உடன்பாடில்லை.
இன்று தமிழில் கவிதை எழுதுபவனுக்கு அடைமொழியாக உடனேயே வந்துவிடும் கவிஞன் என்ற அசிங்கமான பெயரைக் கொண்டு என்னை அழையாதீர்கள்.நான் கவிஞனல்ல”என கற்சுறா எழுதியிருக்கின்றார்.
பொதுவான பலங்களையும் அங்கிகாரங்களையும் தனக்கு பொருத்திக்கொள்ள வேண்டாம் என்று ஒரு கோரிக்கையை முன்வைத்துக் கொண்டு தன் கவிதைளை வாசகப் பரப்பை நோக்கித் தந்திருப்பதோடு ‘கவிஞன்’ என்ற சொல்லை அசிங்கமானதாகக் கருதி அந்தப் பெயரால் தன்னை அழைக்க வேண்டாம் என வேண்டுகோளையும் விடுக்கும்  ஒரு ‘கவிதை எழுதியின்’ தொகுப்பான ‘அல்லது யேசுவில் அறையப்பட்ட சிலுவை’ தொகுப்பின் பலவீனங்களையே நான் முன்வைக்க விரும்புகின்றேன்.

“நான் கடவுளால் ஏமாற்றப்பட்டேன்
நான் தேசத்தின் பெயரில் ஏமாற்றப்பட்டேன்
இலக்கியத்தின் பெயரிலும் ஏமாற்றப்பட்டேன்”  என தான் ஏமாந்த கதையினைத் தன்னறிமுகக்குறிப்பில் சொல்கின்றார் கற்சுறா. ஏன் அவர் தொடர்ந்தும் ஏமாளியாக இருந்துகொண்டிருக்கின்றார் என்பதுதான் புரியவில்லை.

கற்சுறா- அதீதமான ஒரு மிகைப்படுத்தலை தன்னறிமுகக் குறிப்பாகத் தந்திருக்கின்றார். அவர் அங்கீகாரங்களை புறமொதுக்குபவர் போல தன் குறிப்பை எழுதியிருந்தாலும் ஒரு எதிர்நிலையான முறையில் அங்கீகாரத்தை பெற விரும்புபவராகவே எனக்குத் தெரிகின்றார். தன்னை ஏமாற்றப்பட்டவன் என்று அடையாளப்படுத்துவதிலிருந்தே அங்கிகாரத்திற்கான முதல் வழியைத் திறக்கின்றார். ஒரு விதத்தில் தன்மீதான கழிவிரக்கத்தின் மூலமாக தன் அங்கிகாரத்தை கோரும் ஒருவகை உத்தியாகத்தான் இதனை நான் பார்க்கின்றேன்.
ஆனால் எந்த அதிரடிப்பிரகடனங்களும் ஒரு நிலை நிறுத்தலைச் செய்துவிடாது என்பதுதான் பொதுவிதி. இந்த பொதுவிதியின் அடிப்படைப் புரிதலிலிருந்து என் கருத்தாடலை நான் தொடங்கலாம் என் நினைக்கின்றேன். ஆயினும் தன் கவிதைகளுக்குள் வாசகரை நுழைய அனுமதிப்பதற்கு முன்னால் அவர் செய்கின்ற பிரகடனம், அவரது கவிதைகள் பற்றிய அவர்சார்பான ஒரு தரிசனவெளியைத் திறந்துவிட முயல்கின்றது.
“நாங்கள் தொடர்ந்தும் துரோகியாகவே இருக்கின்றோம்
ஆனால், எம் எதிர்நிலையில் மாவீரர்கள்தான் மாறிக்கொண்டிருக்கிறார்கள்”

இதனை படித்தவுடன் எனக்குள் சில கேள்விகள் எழுந்தன.
நாங்கள் என்பது யாரை?
யார் யாரை துரோகியாக்குவது?
மாறிக்கொண்டிருக்கும் மாவீரர்கள் யார்?

இந்த முற்கூற்றை ஒட்டி எழும் கேள்விகளைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் இந்த முற்கூற்று உத்தியானது இந்தப் பிரதிபற்றிய மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகவே இருக்கின்றது.
வரலாற்றில் மாவீரர்கள் எவ்வாறு எதிர்நிலையில் மாறிக்கொண்டிருக்கின்றார்களோ அவ்வாறே துரோகிகளும் மாறிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு காலத்தில் விசுவாசிகளாக, புனிதர்களாகக் கொண்டாடப்பட்டவர்கள் பின்னைய காலங்களில் துரோகிகளாக இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
துரோகிகளாக இழிவுபடுத்தப்பட்டவர்கள் பிற்காலங்களில் புனிதர்களாக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இது ஈழவிடுதலைப் போராட்டத்தில் எண்ணிறைந்த உதாரணங்களால் நிறுவப்படக் கூடியது. ஆதலால் துரோகி என்னும் பதத்திற்கு நிலையான இருப்புநிலையை வழங்குவது பொருத்தமற்றது.

ஆனால் இத்தகைய பிரகடனங்களையும் மிகைக் கூற்றுக்களையும் தாண்டி கவிதைகளுக்குள் நுழையும் போது, ஈழத் தமிழ்க் கவிதை மரபின் நீட்சியையும் தொடர்ச்சியையும் அதன் இயல்பு குலையாமல் காத்துவருகின்ற ஒரு சராசரிக் கவிதைக் குரலே இத் தொகுப்பிலும் ஒலிக்கின்றது. அவர் அம்பைக்கு எழுதிய கவிதையிலேயே இந்த பொதுப்போக்கின் வழியினை ஏற்றுக் கொள்கின்றார். ஆயினும் கவிதை சொல்லும் முறைமையில் கற்சுறா புதிய வெளிகளைத் திறக்க எத்தணிக்கின்றார்.

நேர்த்தியாக சொற்களை அடுக்குதல், வடிவத்தைச் சிதைத்து வடிவத்தை உருவாக்க முயலுதல், சொற்களை, அவற்றுக் கிடையில் நிகழும் இடைவெளிகளை குறுக்குதல் என பல நுட்பங்களை தன் கவிதைகளில் நிகழ்த்த் முயன்றிருக்கின்றார்.

பழையதும் புதியதுமான புலி எதிர்ப்பாளர்கள்

தமிழ் இலக்கியச் சூழலில் பலரும் தங்களைக் கலகக் குரலாக காட்டுவதற்கு முதலில் எடுக்கும் உத்திதான் ‘புலி எதிர்;ப்பு’. இந்த உத்தியை கற்சுறா ஏலவே எடுத்திருக்கின்றார். இது எதிர்ப்புக் கவிதைகளின் மரபு போல உருவாகியிருக்கின்றது. ஆனால் இவர்களின் இந்த மரபு இப்போது சரியத் தொடங்கியிருக்கிறது. புலிகள் இருக்கும் போது இவர்களின் இந்த கலகத்தனமான ஒலிப்பு ஒரு எதிர்ப்பரசியிலின் அழமான வடிவமாக இருந்தது.  ஆனால் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்தப் பழைய புலி எதிர்ப்பாளர்களின்  கலகக் குரல் வலுவிழந்து போக புதிய புலி எதிர்;ப்பு மனநிலையாளர்களின் குரல்கள் வலுவோடு எழத்தொடங்கியிருக்கின்றன. ஆனால் இந்தக் குரல்களில் வெளிப்படும் எதிர்ப்புணர்வு பெரும்பாலும் அரசியல் நோக்கமற்றது. அனுபவங்களின் வழியிலான திரட்சியினால் உருப்பெற்றது.

ஆயினும் வீழ்ச்சியின் பின்னரான காலநீட்சி எல்லாவற்றையும் காலத்தின் பதிவாகவே கொள்ளத் தொடங்கியிருக்கின்றது. வரலாற்றின் மீள் வாசிப்புக்கான உப பிரதிகளாக இப் பிரதிகள்; பலவும் மாறியிருக்கின்றன. எனவே இவைகள் மீது சாதகத் தன்மையோடும் எதிர்த்தன்மையுடனும் கேள்விகளை முன்வைக்க முடிகின்றது. இந்த நிலையிற்றான் கட்டமைக்கப்பட்ட உண்மைகள் மீதும் பொய்கள் மீதும் பொருள் பொதிந்த நோக்குநிலை தமிழ்வெளிக்குத் தேவைப்படுகின்றது.

கற்சுறாவின் கவிதைச் செயன்முறை 

பெரும் சொற்கிடங்கிலிருந்து சொற்களை எடுத்தெடுத்து பொருத்தமான முறையில் அடுக்கவும் ஓட்டவும்வல்லதான செய்நேர்த்தி மிக்கவையாக இத் தொகுதியின் கவிதைகள் பலவும் காணப்படுகின்றன.
ஆயினும் நுட்பமான செயற்றிறனுடன் வெளிப்படும் கவிதைகள் பலவும் சொற்களின் இயல்பை ஒழிப்பவை. அவற்றினது நியமங்களை மறுதலிப்பவை. கவிதை குறித்து பொது மனம் எதிர்பார்க்கும் சட்டகங்களை அல்லது மரபுகளை மீறுபவை. ஒரு நேர்கோடான புரிதலுக்குரிய கவிதைகளாக இவையில்லை. பல இடங்களிலும் யதார்த்தத்தை மீறியதான சொற்திமிருடன் இயங்குகின்றன. இதனால்த்தான் கற்சுறா புதியதான மொழிதல் முறையினைத் தன் கவிதைகளில் வெளிப்படுததுகின்றார் என்பதான தோற்றம் ஏற்படுகின்றது.

சொற்களை உடைத்துடைத்து அவற்றின் இருப்பிடங்களை மாற்றி அமைப்பதன் மூலமான ஒரு மொழிதல் முறையை ‘நகுலன்’ தமிழில் உருவாக்கியிருக்கின்றார். இத் தொகுதியிலுள்ள 38,39,40,41,42,44,45,47 என இலக்கமிடப்பட்டுள்ள கவிதைகள் நகுலனின் மொழிதல் முறையை ஒத்த கவிதைகள்.

நகுலனின் கவிதை

“நான் ஒரு
உடும்பு
ஒரு
கொக்கு
ஒரு
ஒன்றுமே இல்லை.”

இதே விதமான சொல்லல் முறையைத்தான். மேற் சொன்ன இலக்கங்களிலுள்ள கவிதைகளில் காணலாம்.
கற்சுறாவின் 45 வது கவிதை
“நான்
முன்,நீ
இடைவெளியைத் தீண்ட
கையில் நீர்க்கும் கடவுள்,
கவிதை.”

புதிர்த்தன்மையோடு வார்த்தைகளை கோர்க்கும் நகுலனோடு இயைந்த தன்மையை இந்தக் கவிதையில் காணமுடிகின்றது.
ஆயினும் நகுலன் காட்டும் அகவுலகத் தரிசனமோ புற உலக உணர்தல்களோ கற்சுறாவின் கவிதைகளில் தீவிரம் பெறவில்லை.

கவிதை மொழியை அருவத்தன்மையிலிருந்து மேலெழச் செய்து அதன் நேர்த்தியைச் சிதைக்கும் மொழிதல் முறையை உருவாக்க விளையும் கற்சுறா, இதனை ஒரு விதமான உத்தியாகக்  கையாளுகின்றார் எனத் தோன்றினாலும் ஒரு விதத்தில் கவிதையின் புரிதல் தொடர்பான வாசகப் எதிர்பார்ப்பை மறுக்கின்றார். ஆக ஒரு வாசிப்பில் இந்தக் கவிதைகளைப் புரிய வேண்டும் என நினைக்கும் வாசக மனநிலை. ஒரு மூட்டமான மனநிலையோடே பிரதியிலிருந்து வெளியேறும்.

கற்சுறா சொற்களின் தேவையற்ற ஒட்டுக்களை நீக்கி, சொற்களைக் குறுக்குகின்;றார். ஆயினும் அவரது கவிதைகள் சொற்களின் கனத்தால் வாசிப்பை இடையூறு செய்யும் அவலத்தை எதிர்நோக்கவில்லை.

31 வது கவிதை

“சிதர் துளி நடுக்கம்.
நாராய்
வரிவிட்டு
அலை அலையாய்
கரை சேரா அடங்குவது எங்கே?”

இத்தகைய கவிதைகளில் நிகழும் அவலம் என்னவெனில் சில இடங்களில் சொற்கள் புழக்கத்தில் இல்லாத சொற்களைப் போன்றதான தோற்றத்தைக் காட்டுகின்றன. இத் தன்மை கவிதையின் வரிகளுக்கிடையிலான ஒருங்கிசைவைக் குலைக்கின்றது. பல இடங்களில் சொற்கள் முடிவின்றி இன்றி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதுபோல ஆகிவிடுகின்றன.உண்மையில் கவிதையின் வாசிப்பு என்பது முற்றுப்பெற்ற சொற்களுடன் முடிந்துபோவதோ. அல்லது அந்தரத்தில் நிற்கும் சொற்களுடன் சேர்ந்து அலைவதோ அல்ல. அதற்கு அப்பாலான வெளியை நோக்கி அழைத்துச் செல்வது. இங்குதான் தேர்ந்த கவிஞனின் சொற்களின் பயன்பாடு தொடர்பான ஆளுமை வெளிப்படுகின்றது. கவிதை என்பது சொற்களினால் உணர்வை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு மாயத் தருணத்தினாலானது.

இந்தத் தொகுதியிலுள்ள குறிப்பிடத்தக்க கவிதைகளில் ஒன்று ‘அவனியூ பப்லோ பிக்காஸோ இல் ஊடறுக்கும் மரணக்கூத்து’ எனத் தலைப்பிடப்பட்ட கவிதை

“இடையில் நிறுத்தி
டுபா டுடா டத்தா டுக்கா டுட்டா
மொழி பேசுபவனா நீ என்று
என்னிடம் கேட்கும் வரையில்
ஒரு மொழி இன்னொரு மொழியிற்கு
வெறும் விலங்குச் சத்தமாக
மட்டுமே ஒலிப்பதின் இயல்பு
தன்மையாயிருந்தது”

இந்தக் கவிதை சொல்லவரும் செய்தி மிக முக்கியமானது. புலம் பெயர் தேசங்களில் மொழியின் பெயரால் எதிர்நோக்கும் சிக்கல்களை வெளிப்படுத்தும் இவ்வரிகள் ஆழமான பொருண்மையைக் கொண்டிருந்தாலும் உரைநடைத்தன்மை மிக்கவையாகக் காணப்படுகின்றன. கற்சுறாவின் பல கவிதைகளிலில் இந்தத் உரைநடைத் தன்மையைக் காணமுடியும். ‘மு.பொ’வின் கவிதைகளிலும் இத்தகைய உரைநடைத் தன்மையுண்டு. கவிதையை தன்னுடைய கருத்தைப் பரிமாறுவதற்கான ஊடகமாக மட்டும் கையாளும் போது, கவித்துவ தன்மைகளுக்கு அப்பாலான சொற் சேர்க்கைத்தனம் வந்து சேர்ந்துவிடுகின்றது. மாறாக கவிதையில் வெளிப்படும் அரசியல் என்பது கலையாக்கக் கூறுகளுடன் வெளிப்படக்கூடியது. இதனால் பிரச்சாரத்தனமோ கோசங்களோ கவிதையின் இயல்பைச் சிதைக்கும் ஆபத்துக்கள் ஏற்படாது. கற்சுறா தான் முன்மொழிய விரும்பும் அரசியலை முதன்மைப்படுத்தியதாகக் கவிதையை எழுதும் போது அவரது கவிதைகளில் உரைநடைத் தன்மை அதிகமும் வெளிப்படுவதாக நான் கருதுகின்றேன்.

 “அதிகாரத்தை சிலுவையில் அறைவதா
அதிகாரத்துக்கு எதிரான எம் இதயங்களைச் சிலுவையில் அறைவதா?

-எஸ்போஸ்

கற்சுறாவின் கவிதைகளின் அடையாளம் எது? அதனது எதிர்ப்பரசியலா? அல்லது அந்தக் கவிதைகள் கொண்டிருக்கின்ற மொழிதல் முறையா? அல்லது கவிதைகள் பேசுகின்ற அதிகார எதிர்ப்பா? அல்லது அதிகார மறுப்பா?

கற்சுறாவின் கவிதைகள் அதிகாரத்தை எதிர்க்கின்றன என்பதனைவிட அதிகாரத்தை மறுக்கின்றன என்றுதான் சொல்லமுடிகின்றது. அதிகாரத்தின் முன் மண்டியிட்டவனின் கையாலாத்தனத்தின் வெளிப்பாடுகளாக கவிதைகள் வெளிப்படுகின்றன. ஆனால் இதுவும் ஒருவகையில் அதிகார எதிர்ப்புத்தான். ஆடைகளை இழுத்து அவிழ்ப்பவன் முன் தானே ஆடைகளைக் களைந்து அம்மணமாய் நிற்பது போன்றது.
எஸ்போஸின் கவிதை ஒன்று- சித்திரவதைக்குள்ளாகும் ஒருவனின் மனநிலை பற்றியது. சித்திரவதை செய்பவனிடம் சித்திரவதைக்குள்ளாகுபவன் உண்மையை மறுக்கும் போது. அங்கு தோற்றுப்போவது யார்? சித்திரவதைக்குட்படுபவனா? அல்லது சித்திரவதை செய்பவனா? என அந்தக் கவிதை கேள்வியினை எழுப்பும். ஆகவே மறுப்பது என்பதும் ஒரு வகையில் அதிகார எதிர்ப்புத்தான்.

“வதைகளை,
குருதி தாண்டிய வார்த்தைகள்
என்னிடம் பொய்த்தன

ஆசனவாய் கசியும்
குருதியிலும்
நனைகிறது பயம்.

மௌனமாய்,
எனது மொழியையும்
களவாடியிருந்தனர் குழந்தைகள்.

உண்மைகளையும் பொய்களையும்
அவர்கள் மட்டுமே
இப்போதும் சொல்லுகிறார்கள்”

இந்தக் கவிதை அதிகாரம் தோற்றுப்போகும் சித்திரவதைக் கூடத்தைப் பற்றியது. இந்தக் கவிதையின் இடையில் “ எனது பொய்களைவிட, அவர்களின் பொய்கள் உண்மையாய்த் தெரிந்தது” என வருகின்றது. அதிகாரம் உண்மையைப் பொய்யாக்கவும் பொய்யை உண்மையாக்கவும் குற்றவாளிகளை நிரபராதிகளாக்கவும் நிரபராதிகளைக் குற்றவாளியாக்கவுமான வல்லமையின் வடிவமாக எப்படியெல்லாம் மாறுகின்றது என்பதை கற்சுறா பதிவு செய்கின்றார்.

எதிர்ப்பு மனநிலையின் அரசியல்

தன்னுணர்வின் வாதைகளை அதிகமும் பேசும் இத்தொகுதியின் கவிதைகள் பலவும் 90 களின் பிற்கூறுகளில் எழுதப்பட்டவை. இந்தக் காலப்பகுதி ஈழவிடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் போரிடும் தரப்பினர் தங்கள் மீதான விமர்சனங்களை போராட்டக்களங்களுக்கு வெளியே இருந்து எதிர்கொண்ட காலப்பகுதி. அவர்கள் கட்டமைக்கும் ஒவ்வொரு புனிதம் பற்றிதான மரபுகளுக்கும் வெளியே இருந்து விமர்சனங்கள் சடுதிசடுதியாக முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. சுகனின் ‘பிரபாகரன்’ பற்றிய கவிதை, சேரனின் ‘வீரர்கள் துயிலும் நிலம்’ போன்ற கவிதைகளை இந்த வகையிலானதாகக் கொள்ளலாம்.

கற்சுறா, தன்னனுபவத்தின் வாயிலாக புலி எதிர்ப்பு மனநிலைக்கு வந்து சேர்ந்திருப்பவர். இந்தத் தொகுதியிலுள்ள ‘மல்லாவிச் சந்தி’ பற்றி குறிப்பு அவரது இத்தகைய அரசியல் உருவாக்கத்திற்கான காரணத்தைச் சொல்கின்றது. இன்னும் அவரிடம் நிறையக் காரணங்கள் இருக்கக்கூடும். அவற்றின் நியாய அநியாயத் தன்மைகள் மீது கேள்விகளை எழுப்புவது எனது நோக்கமல்ல. கற்சுறா போன்றவர்களின் எதிர்த்தல் மனநிலை எப்படி ஒரு திரண்ட குரலாக நிலைபெற முடியாமல் போனது என்பதற்கு அப்பாலும் கேள்விகளும் இருக்கின்றன. அவையும் கவனத்தில் கொள்ளத்தக்கன.

தன்னிலை அனுபங்களாக பதிவான பல கவிதைகளிலும் அவரின் உணர்வுநிலை சார்ந்து வெறுப்பும் கோபமும் இயலாமையும் தொடர்ந்து வெளிப்படுகின்றன.

23 வது கவிதையில்

“நேற்று வரைக்கும்
எதையோ நனைத்து
என்னமாவோ முடிந்து போன
பயந்த எழுத்துக்களை எழுதமுடியவில்லை.

வந்து போகும் ஒவ்வோர் நாட்களும்
காறித்துப்பி என்னை அசிங்கப்படுத்தி விட்டு
நகர்கிறது.

கோபம் தலைக்கேற
எழுத்திற்கும் கருத்திற்குமாய்
காணாமல் போனவர்களின் வரிசையில்
என்னையும் சேர்த்துவிட்டு
எவனுக்கோ பயந்து
எழுதமுடியாமல் போன தலைப்புக்களை
தேடிக்கொண்டிருக்கிறேன்.”

இது அச்சத்தின் நிழல் படிந்த மனநிலை. ஆனால் இந்த மனநிலையையும் தாண்டி கற்சுறா, அச்சம் படிந்த காலத்தின் வன்முறைகளை, ஜனநாயக மீறல்களை, அச்சமற்ற குரலில் பதிவு செய்கின்றார். ஆயினும் அவர் வாழும் தேசம் ஒப்பீட்டளவில் அச்சமற்ற சூழல் கொண்டது. அந்த சூழலில் இருந்து கொண்டு அச்சமான காலத்தின் வதைகளையும் வாதைகளையும் பதிவு செய்திருக்கின்றார்.

21 வது கவிதையில்

“ஒரு இரவில்
அறுதலிகளாய்ப் போன
எனது பயல்களுடன் போய்ச்சேர,
எதாவதொரு தெருவில்
சாவுவரின் சுகம்
இந்த மண்ணைவிட.”

அதிகார நிலைநிறுத்தல்களுக்காக உள்மோதல்களால் தோழர்களை இழந்த வலி அவரை மண்ணிலும் மரணத்தை மேலாகக் கருத வைத்திருக்கின்றது. இத்தகைய காரணங்கள் அவரது எதிர்ப்பு நிலையினை வடிவமைத்திருக்கின்றன.

அந்நியமாதல்

தன்னை தேசமற்றவனாக பல கவிதைகளிலும் அடையாளப்படுத்தும் கற்சுறா, அந்நியமாதலை வலிந்து உருவாக்குகின்றார். அதிகாரத்தை எதிர்த்து நிற்பதற்கான வெளிகளைக் கொண்டிராத ஒரு சமூகத்தில் வாழுகின்றவன், தன்னை ஆற்றுப்படுத்த அந்தியமாதலை ஒரு ஆயுதமாக்குகின்றான். இது தவிர்க்க முடியாதது. தான் வாழாத தேசம் தன்னுடையதல்ல. அல்லது தன்னை வாழ அனுமதிக்காத தேசம் தன்னுடையதல்ல என்ற எதிர்மனநிலையை வலிந்து கட்டமைக்கத் தொடங்குகின்றான். கற்சுறாவின் அந்நியமாதலும் இத்தகையதுதான்.

18 வது கவிதையில்

“இழவு வீட்டில் மாரடிச்சு அழும்போது
வெடுக்கை
கிளறி வெளியிலிடுங்கள்
குறியும் இராச்சியமும்
கோடிடாது
இனி என் முதுகில்.” என எழுதுகின்றார்.

தன்னை தானே விளிம்பு நோக்கி நகர்த்துவதன் மூலம் கற்சுறா எதை கட்டமைக்க விளைகின்றார்? அடையாள மறுப்பையா? அடையாள இழப்பையா? பல அவிதைகளிலும் எதிர்நிலையில்- ‘அவர்கள்’ பன்மைப் படர்க்கையில் சுட்டுகின்றார்.

‘ஒரு கிலிசுகெட்டழிகிறது தேசம்’ பன்னிரண்டாவது கவிதை.

“போரையும் கூடவே சாதியையும்
கொண்டுருளும் கூட்டத்தில்
அம்மணமாய் உலாவந்தேன்.

……………………………………………….
…………………………………………………
பிடி மண்ணில் நிறைகிறது
மீசை முளைக்காத புதைகுழிகள்

அள்ளி எடுக்கும் பிடிமண்ணில்
அவர்கள் தேசம் குறைகிறது
தேசம் ஒன்றும் இல்லாத
வெறுமையின் தரிப்பிடத்தில்

அம்மணமாய் உறங்கி
அம்மணமாய் உயிர் கொள்வேன்”

இங்கு அவர்கள் என சுட்டப்படுவது யார்? போர் புரிந்தவர்களையா? போரின் சுமைகளை தங்கள் தோள்மீது சுமந்தலைந்த மக்களையா? அல்லது மக்கள் சமன் புலிகள் என்ற சமன்பாட்டை ஏற்றுக்கொண்டு, தான் அந்நியமாகின்றாரா?

கற்சுறாவின் கவிதைகள் ஈழப்போராட்டத்தில் இனத்தின் பெயரால் புனிதத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்துவிதமான வதைகளையும், கொலைகளையும் உள்ளுறைந்த துயரத்தின் மொழியில் பேசுகின்றன. கைவிடப்பட்ட மக்களின் துயரத்தை, அவர்களின் நம்பிக்கைகளின் சிதைவை? அவர்களின் இழப்பை எனத் திரண்ட அவலத்தின் குரலாக வெளிப்படுத்துகின்றன.

இந்தத் தொகுதியிலுள்ள 35 வது கவிதை

போராட்டத்தின் வீழ்ச்சியை பதிவு செய்யும் கவிதை
“பெருநிலம்
மயானத்தின் வெளிவாசல் கதவு மூடிக்கிடக்கிறது” எனத் தொடங்கும் கவிதை

இடையில்,

ஓலம் மரணத்தின் மூச்சை திணறவைக்கிறது.

சாய்த்துச் செல்லப்பட்டு
நிலமெங்கும் பரவி விடப்பட்ட மரணக்குவியல்.

எனத் தொடர்ந்து
முடிவில்,

இரவின் நிலக்கீழ் அறைகளில் பதுக்கி வைக்கப்பட்;ட கதைகளை
யார் நமக்கு இனிச் சொல்வது?

அழிப்பதற்கு ஏதுமற்ற மக்கள்
மௌனித்திருக்கிறார்கள்
ஏஞ்சியிருக்கும் ஒரு சொட்டு வாழ்விற்கு.

2009 இல் எழுதப்பட்ட கவிதை இது. வீழ்ச்சியை மாபெரும் அவலத்தின் வடிவமாய் கற்சுறா காண்கின்றார்.

 “இரவின் நிலக்கீழ் அறைகளில் பதுக்கி வைக்கப்பட்ட கதைகளை
யார் நமக்கு இனிச் சொல்வது? என கேள்வியினையும் முன்வைக்கின்றார்.

இங்கு கதைகளைச் சொல்வதல்ல பிரச்சினை. சொல்லப்படும் கதைகளைக் கேட்கக்கூடிய செவிகளையுடையவர்களாக எவருமில்லை என்பதுதான் பிரச்சினை. துயரத்தைச் சொல்ல மேலெலும் உதடுகள் மீது முட்கள் இறைக்கப்படுகின்றன. தங்களது நம்பிக்கைகள் சிதையக்கூடாது எனப் பலரும் நினைக்கின்றார்கள். ஆனால் இது சிதைவல்ல. அனுபவமாக எடுத்துக் கொண்டு முன்செல்ல வேண்டிய படிப்பினைகளைத் தருவது. ஆனால் இதற்கு யாரும் தயாரில்லை.

இதனால் யாரும் தாங்கள் சிலுவையில் அறையப்படுவதை விரும்பவுமில்லை.

00
நன்றி- புதிய சொல் (இதழ்-2,2016)

Related

விமர்சனங்கள் 5695005919611700595

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item