அணங்கு - ந.மயூரரூபன்வெயிலின் சூடு எங்கும் விரிந்து கொண்டிருந்தது.

அடுக்கடுக்காய் எல்லாவெளிகளிலும் தன்னை விரித்து ஒவ்வொரு இடுக்குகளிலும் நுழைந்து கொள்கிறது.
கீழே மணலில் வெயிலின் சூட்டு முட்கள் முளைத்துக் கொண்டேயிருந்தன.

விழித்திருக்கும் கால்கள் தன்னிச்சை யாகவே ஒதுங்கிக் கொள்கின்றன. காட்டின் புறவெட்டையில் எஞ்சியிருந்த நான்கு மரங் களும் தம்மசைவைத் தொலைத்து வெயிலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

எச்சிறு உயிருக்கும் தைரியமில்லை. சூட்டின் முனைகளில் நிழல் கண்டு எங்கேயோ ஒளிந்து கொண்டன.
தலைகளைப் புதைத்து கொண்டன.

தொலைவைப் பார்க்கும் விழிகள் கானலில் கூசிக் கொள்ளும். ஆனால் எந்த விழிகளையுமே பார்க்க முடியவில்லை.

இரண்டு வெறித்த விழிகள் மட்டும் எங்கேயோ இருப்பதான உணர்வு மட்டும் அந்த வெளியில் தோற்றங்காட்டிக் கொண்டி ருந்தது.

எனக்கு மயக்கமாயிருந்தது. தீய்ந்த - தீய்ந்து கொண்டி ருக்கும் வெளியும் அதன் நுனியில் தொற்றியிருந்த காடும் அவனது கால்களை இழுத்தபடியிருந்தன.

அவனுக்குப் பழக்கமான இடம்தான்.

நான்கு வருடங்களுக்கு முன் அவனது கால்கள் உழக்கிய நிலம்.

தயக்கத்தை உதறினான். வலது காலால் நிலத்தில் ஒருமுறை உதைத்துக் கொண்டான்.
மெதுவாக நடக்கத் தொடங்கினான். ஏதோ யோசித்து சட்டென நின்றவன், தனது மணிக்கூட்டை அவசரமாகப் பார்த்துக் கொண்டான்.

பன்னிரண்டுக்கு ஓரிரு நிமிடங்கள் முன்னதாக அல்லது பின்னதாக இருக்கலாம். அவனால் நிதானமாகப் பார்க்க முடியவில்லை.

வியர்வை உடலிலிருந்து சூடாக வழிந்து கொண்டே யிருந்தது. விரைவாக நடக்கத் தொடங்கினான்.
தன்மேல் விழுந்து கொண்டிருந்த வெயிலை தம்மால் இயன்றமுறையில் அங்கிருந்த மணல் துப்பிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே கிழிந்து சிதறியிருந்த தகரத்துண்டுகளும் வெயிலின் கொதியால் மல்லாந்து அலங்கோலமாகயிருந்தன.

அவன் அந்தச் சிறுகாட்டின் தலைப்பை நெருங்கி யிருந்தான். சிறுபற்றைகளால் தொடங்கி பெருமரங்களால் அடர்ந்த நீண்ட சிறுகாடு என அதைச் சொல்ல முடியும். காட்டின் வாசலி லுள்ள அடர்த்தியற்ற இருள் இங்கும் உலவுவதற்கான சந்தடிகள் தெரிந்தன.

கால்கள் வெயில் முடிவடையும் இடத்திலேயே நிலைத்து நின்றுவிட்டன. இரண்டடிகள் முன்னேயிருந்த நிழலில் ஒதுங்கி நிற்க வேண்டுமென்ற எண்ணமேயின்றி விறைத்த விழிகளால் அந்தக் காட்டையே வெறித்துப் பார்த்தபடியிருந்தான்.

அவனிலிருந்து வியர்வை விறைப்பற்று இறங்கிக் கொண்டே யிருந்தது. உதடுகள் காய்ந்து நா வறண்டிருந்தது. நாக்கு உதடுகளை ஈரப்படுத்தும் சலனமற்று உள்ளடங்கியிருந்தது.

அவனுக்கு  மிகத் தாகமாயிருந்தது.

தான் வைத்திருந்த தண்ணீர்ப்போத்தலை எடுத்தான். அவசரஅவசரமாக மூடியைத் திறந்தவன். தண்ணீரை நிலத்தில் ஊற்றினான்.

இந்த நிலத்தில் வைத்துதான் அவள் தண்ணீர் கேட்டாள். கண்கள் அரைமயக்கத்தில் மூடியிருக்க முகத்தில் வலிகள் வலையாய்ப் போர்த்தியிருந்தன. வாய் மட்டும் 'தண்ணீர்… தண்ணீர்…" என முனகியபடியிருந்தது.

உடலும் மனமும் வெறி கொண்டிருக்க அவனால் அவளை, அவளது முகத்தை அவளது வலியை அவளது இரத்தத்தை முனகலை கண்டு கொள்ள முடியவேயில்லை.

தண்ணீர் முழுவதையும் ஊற்றியிருந்தான்.

வெம்மையில் காய்ந்திருந்த நிலம் தண்ணீரை உள்ளிழுத் திருந்தது.

போத்தலிலிருந்து துளிகளும் விழுந்து முடிந்திருந்தன. போத்தல் அவனது கையிலிருந்து நழுவிக் கீழே விழ மிக மெது வாய்க் காட்டுக்குள் நுழைந்தான்.

செடிகளும் கொடிகளும் தட்டத்தட்ட உணர்வின்றி உள்நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

இடிந்து கருப்பேறிய, அரையாள் அளவு உயரத்தில் சீரற்று உடைந்திருந்த கட்டடத்தினை அடைந்து விட்டிருந்தான். ஆங்காங்கே கிண்டுப்பட்டு, கற்கள் பெயர்ந்து, செடிகளும் புற்களும் முளைவிட்டிருந்த கட்டடத்தின் தரையில் அமர்ந்தான்.

இன்னமும் அவனது கண்கள் வெறித்தபடியேதானிருந்தன.

அவளது கண்களும் வெறித்தபடி அவனைத்தான் பார்த் திருந்தன. உயிரற்ற கண்களின் பார்வையில் உறைந்திருந்த பயமும், இரந்த கும்பிடும் அவனது இரக்கந் தொலைந்த கண்களுக்குத் தட்டுப்படவேயில்லை.

இந்தச் சிறுகாட்டுக் கண்கள் அவளுடையவைதான் என்பதில் அவனுக்குச் சந்தேகமேயில்லை. அந்த இரண்டு வெறித்த விழிகள் அவனைத்தான் பார்க்கின்றன. அவை உயிரற்ற கண்களா? இல்லவேயில்லை. ஒரு பயங்கரத்தின் அழைப்பு அதில் கொழுவப் பட்டிருக்கிறது.

மூச்சு முட்டும் நிசப்தம் எங்கும் கொட்டுண்டிருக்கிறது. பயங்கரத்தின் நெடியை அவனால் உணரமுடிந்தது.
அவனால் மூச்செடுக்க முடியவில்லை.
நெஞ்சு படபடத்தது.
வியர்வை இன்னமும் ஓடிக் கொண்டிருந்தது.
வெறித்திருந்த விழிகளை ஒரு கணம் மூடித்திறந்தான். ஒரு அசைவு அவனுக்குள் புலனாகியது. 
இல்லை… ஓசையற்ற ஓராயிரம் அசைவுகளாலானது அது.
மிக வெண்மையான நீண்ட தலைமுடி சட்டென்று அவனது கண்களுக்குத் தட்டுப்பட்டது. கொழுத்த வெண் நாகம் போன்ற சடை , பொன்னிழைகளாகக் கட்டப்பட்டிருந்தது. காட்டுப் பன்றியின் வளைந்த கொம்பொன்றினைச் சடையிலே கொழுவியிருந்தாள்.

ஆம் பெண் தான்.

புலிப்பல்லாலான தாலி கழுத்திலே அணிந்திருக்கிறாள். கையில் வில்.
அவனது மூளை பிரமையின் பள்ளத்துள் சறுக்குவதாய் அவனுக்கு ஓர் நினைப்புத் தோன்றி மறைந்தது.
கையிலே ஒரு பசுங்கிளியும் வைத்திருக்கிறாள்.
கறுப்புநிறப்பெண்| மிகக்கறுப்பு. புன்னகை நெளிகிறது வாயில்.
அவனுக்கு பயமாயிருந்தது.

அவள் நடந்து போகிறாள். பின்னே இருளுருவங்களாய்ப் பல நடந்து போவதான பிரமை அவனை முன்னே உந்தித் தள்ளியது.

அவனும் தன்னுணர்வற்று அவளைத் தொடர்ந்து நடந்தான்.

வெம்மை மாறா நிலத்தின் பெண்ணா இவள்? அவளை நெருங்கிப் போகவே முடியவில்லை. எங்கும் வெம்மை பரவியபடியே இருந்தது. பாதையிலிருந்த செடிகளும் புற்களும் பொசுங்கிக் கொண்டிருந்தன. அவனது உடலின் கணகணப்பு மிக அதிகமா யிருந்தது. வியர்வை ஊற்று நின்று வெம்மையின் துளிகள் உடலில் முளை விட்டிருந்தன.

வெம்மையைத் தாங்க முடியாது அவனது உடல் நடுங்கிக் கொண்டது. உடலின் பதற்றத்தால் அவனது கால்கள்  தடுமாறின. விழிகள் செருக மயங்கி விழுந்தான்.

காய்ந்த கிளையொன்று முறிந்து அவன் மீது விழுந்தபோது அவனுக்கு விழிப்பு வந்தது. மிக மெதுவாய் கிளையைத் தூக்கி அப்பால் போட்டான்.

திடீரென பரபரப்புடன் எழுந்தமர்ந்தான்.

வெம்மையின் அகோரம் சற்றுக் குறைந்திருக்கிறது. அந்த இடத்தைச் சுற்று முற்றும் பார்த்தான். ஆலமரம்|  ஆற்று நீரோடும் வாய்க்கால்.

நன்றாகத் தெரியும் அவனுக்கு

இந்த இடத்தில்தான் அவளை அவன் புதைத்தான். புதைத்த பின்னும் விழிகள் வெறித்தபடியிருந்தன. விரல்கள் புதைய மறுத்தன.

காட்டின் பிரமை பயங்கரத்துடன் அட்டணக்கால் போட்டு அவன் முன்னே அமர்ந்திருக்கிறது. சடாரென்று எழுந்தமர்ந்தான். அங்கு எல்லாமே கிண்டிக் கிளறப்பட்டிருந்தது. அவன் சோர்ந்து போய் அமர்ந்து கொண்டான்.
அவளுக்குச் சற்று தூரத்தில்தான் அதனையும் அவன் புதைத்திருந்தான்.
எல்லாம் போய்விட்டிருந்தது. அவளது உடலையும் காணவில்லை.
சக்தியெல்லாம் வடிந்தது போல் மிகப் பலவீனப் பட்டிருந்தான்.
வெம்மையின் தகிப்பு கணத்துக்குக் கணம் அதிகரிப்பதை மீண்டும் அவனால் உணர முடிந்தது. வெம்மையின் அகோரம் பெருகுகிறது.

கண்கள் மின்னத் தொடங்கின.
வெள்ளைச் சடையுடைய பெண் அதோ நிற்கிறாள்.
இங்கேயும் நிற்கிறாள், அங்கேயும் நிற்கிறாள்.

அவளைச்சுற்றிவர அவளின் தோற்றங்கள் அசைந்து கொண்டிருந்தன. அவளது கழுத்தில் தங்க நகைகள் மின்னுவதை அவனது விழிகள் வெறிக்கப் பார்த்தன. பிரமையின் அடியாழத்தை நோக்கிப்  பிடிப்பற்று  விழுந்து கொண்டிருந்தான் அவன்.

- 2013


Related

சிறுகதைகள் 4301389272751023196

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item