ஒரு பெருங்காடு ஒரு நூறு பட்ஷிகள் காற்று எடுத்துச் செல்லும் ஏதோவொன்று- சித்தாந்தன்நீ என்னை அழைத்துச் செல்கிறாய்
பெருந்தோல்வியின் மையத்துக்கு.
இங்கு காடுகளில்லை
பறவைகளில்லை
சுனைகளில்லை
ஆயினும்
உன் கரங்களில்
மாயமாய் மலர்ந்த தாமரைகளை
என் கரங்களில்
தந்து சொல்கிறாய்
”காலத்தின் சிறுவெளியிடை
துளிர்க்கும் ஒரு வி‘த்துளியில்
எல்லாமும் இருக்கிறது”
நான் உன்னை மறுதலிக்கின்றேன்
விசித்திரமான நட்சத்திரத்தை ரசிக்கும்
தோரணையுடன்
என் மறுதலிப்பு வானத்தில் தொங்குகின்றது.
//
இல்லாத பட்ஷிகளுக்காய்
நான் காத்திருக்கையில்
என் நிழலிலிருந்து சிறகு கிளர்த்தின
ஒரு நூறு பட் ஷிகள்.
யந்திரத்தனத்துடன் உன் உதடுகளில் படர்ந்த
புன்னகையால் நீ என்னை மறுதலிக்கையில்
உன் நிழலில்
உதிர்கின்றது பெருங்காடு.
கூடுகளும் பாதைகளுமற்ற நீள் புதிரில்
என் பறவைகள் அந்தரிக்கின்றன.
//
இடையனின் புலம்பல்கள்
இசையடுக்குகளாய் நீண்டு பெருகுகிறது
இசை சூனியக்காரியின் கோலாக மிதக்கின்றது
யௌவன வெளியில்
மழை இசையின் சாயலுடன் பொளிகிறது.
காடுகள் பீறிடுகின்றன
சுனைகள் பெருகுகின்றன
என் நிழலவழி பெருகிய பட்ஷிகள் கூடு திரும்புகையில்
எண்ணிறைந்த இரவுகளில்
நட்சத்திரங்கள் நடனமிடுவதான பிரமை ஒளிரக் காண்கிறேன்
//
வசந்தத்தின் தெருவில்
வரிசை குலைந்து செல்லும் மந்தைகளின் பின்னே
நீ துள்ளியோடுகின்றாய்
காட்டு மலர்களின் வாசனை கமழ்கிற காற்றில்
நீ மிதக்கிறாய்
இலாவகமான விரலசைவுகளில்
மலைகள் அந்தரத்தில் ஆடுகின்றன.
நீ இத்தருணம்
எதைக் குறித்தாடுகின்றாய்
யுகப்பிளவின்
கடைசிக்கணத்தலா நாங்கள் நிற்கின்றோம்
பேய்மாரி
காலவிளிம்பில் கொட்டுகின்றது
பிசுபிசித்துப் போயிற்று எல்லாம்
//
மிகச்சிறிய காடு
தூறலாய் மழை
சிறகவிழாப் பட்ஷிகள்
நீர் பெருகாக் குட்டைகள்
போதும்
காற்றுக்கென்று நியமங்களிலில்லை
அதை தன்பாட்டில் விட்டுவிடு
அது யுகமுடிவுவரை எடுத்துச் செல்லட்டும்
உனக்கும் எனக்குமிடையிலான ஏதோவொன்றை

00


Related

கவிதைகள் 9004660256106858608

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item