வெள்ளித்திரையில் ஔிரும் சிகரம் - சி.ரமேஷ்

 
 
நாடக, திரைப்பட இயக்குநரும், நடிகரும் கதாயாசிரியரும் தயாரிப்பாளரும் தொலைக்காட்சி சீரியல் இயக்குநருமான கே.பாலசந்தர் 23.12.2014 அன்று தனது எண்பத்திநாலாவது வயதில் உடல்நலக்குறைவால் இரவு 7.30 மணியளவில் காலமானார். மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு 3 வாரிசுகள். அவரது மகன் கைலாசம் சில மாதங்களுக்கு முன்பு தான் உடல்நலம் சரியின்றி காலமானார். பிரசன்னா என்ற மகனும், புஷ்பா கந்தசாமி என்னும் மகளும் உள்ளனர்.
 
நாடகத்துறையில் தமது கலைப்பயணத்தைத் தொடங்கிய கே. பாலச்சந்தர்  திரையுலகிலும் அறிமுகமாகி அதன் அனைத்து பரிமாணங்களையும் தொட்டவர். திரையுலகின் மிக உயரிய விருதுகளான கலைமாமணி, பத்மஸ்ரீ, தாதா சாகிப் பால்கே விருது உள்பட பல விருதுகளை பெற்ற இவருக்கு சென்னை பல்கலைக் கழகம், அழகப்பா பல்கலைக் கழகம் மற்றும் சத்யபாமா பல்கலைக் கழகம் ஆகியவை கௌரவ முனைவர் பட்டங்களையும் வழங்கி கௌரவித்தன. குடும்ப சச்சரவுகள், உறவுகளின் உரசல்கள், தனி மனித சமூக அவலங்களை யதார்த்தபூர்வமாகத் தமிழ்த் திரையுலகுக்ககூடாக ஒப்பனையின்றி வெளிப்படுத்தியவர்.
 
பாலச்சந்தர் தென்னிந்தியாவிலுள் நல்லமாங்குடி.யில் கைலாசத்துக்கும்  தாயார் காமாச்சியம்மாளுக்கும் 1930ம் ஆண்டு ஜூலை 30ம்தேதி மகனானப் பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. பட்டப்படிப்பை முடித்த இவர்  1960-களில் தலைமை கணக்காளர் அலுவலகத்தில் உயர்பதவி வகித்தார்.
இளம் வயது முதலே நாடகங்களில்  அதிக ஈடுபாடு கொண்ட கே. பாலச்சந்தர் 'மேஜர் சந்திரகாந்த்', 'சர்வர் சுந்தரம்', 'நீர்க்குமிழி', 'மெழுகுவர்த்தி' மற்றும் 'நவக்கிரகம்' உள்ளிட்ட பிரபல நாடகங்கள் மூலம் அவர் முன்னணிக்கு வந்தார். அவரே தயாரித்து, இயக்கிய நாடகங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஒருமுறை அவரது மெழுகுவர்த்தி நாடகத்துக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். அப்போது, பாலசந்தரை பாராட்டிப் பேசிய எம்.ஜி.ஆர்., ‘இவரைப்போல திறமையான இளைஞர்கள் திரைத்துறைக்கு வரவேண்டும்என்று அழைப்பு விடுத்தார். அந்த அழைப்புக்கு பலன் கிடைத்தது. 1964-ம் ஆண்டு ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்து எம்.ஜி.ஆர். நடித்ததெய்வத்தாய்படத்தின் மூலம்தான் வசனகர்த்தாவாக திரையுலகுக்கு அறிமுகமானார்.மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்த கே.பாலச்சந்தர் , 'நீர்க்குமிழி' தொடங்கி 'பொய்' வரை 101 படங்கள் இயக்கி இருக்கிறார். 'பொய்', 'ரெட்டை சுழி' மற்றும் 'உத்தம வில்லன்' ஆகிய 3 படங்களில் நடித்திருக்கிறார். இதில் 'உத்தம வில்லன்' திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.
 
 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி மூலம் தமிழ்த் திரைத் துறையில் பரவலாக அறியப்பட்டார். தமிழ்த் திரையுலகின் புதிய அத்தியாயத்தை அத்திரைப்படம் எழுதியது. ஒரு நர்ஸிங் ஹோமின் ஒரு வார்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் நாகேஸினின்  குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி நின்றது. ஒரு கான்ஸர் நோயாளியாக வரும் நாகேஸ் தன் இயல்பான நடிப்பினூடாக தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார். அது முதல் வெள்ளித் திரையில் கே.பாலச்சந்தர் ஒரு நட்சத்திர இயக்குநராக ஜொலிக்கத் தொடங்கினார். அதன் பிறகு பல மொழிகளிலும் திரைக்கதை, வசனம், இயக்கம் என்று அவரது பணி பரவலாக்கம் பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் இவரது படங்களுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது
 
ஜெமினி கணேசன்,  நாகேஷ்மேஜர் சுந்தரராஜன்கமலஹாசன் , முத்துராமன், நாகேஷ்  ஆகியோர் பாலச்சந்தருக்கு விரும்பிய நடிகராக இருந்தனர். பாலச்சந்தர் தம் இயக்கத்தில் அதிகம் பயன்படுத்திய நடிகர்களும் இவர்களேயாவார். ஸ்ரீதரைப் போல, பாலச்சந்தரும், தமது துவக்க மற்றும் இடைக்காலப் படங்களான தாமரை நெஞ்சம், இரு கோடுகள், கண்ணா நலமா, புன்னகை, வெள்ளி விழா, நூற்றுக்கு நூறு ஆகிய படங்களில் ஜெமினி கணேசனை பயன்படுத்தியிருந்தார். ஜெமினி கணேசனின் சொந்தத் தயாரிப்பில் பாலச்சந்தர் இயக்கிய நான் அவனில்லை அதன் புதுமையான கையாளுமைக்காகப் பெரிதும் பாராட்டப்பெறினும், வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 
தமிழ்த்திரையுலகின் மாயைகளை உடைத்த படம் பாலச்சந்தரின் அரங்கேற்றம் ஆகும்.1970ஆம் ஆண்டு அது வெளியான காலகட்டத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்திய  இத்திரைப்படம் பெண்ணின் கற்புக் கோட்பாட்டை உடைத்து  ஏழ்மைக்கூடாக இந்தியாவின் வறுமையைப் பட்டவர்த்தனமாக்க வெளிப்படுத்தி நின்றது. 1971 ஆம் ஆண்டு சிவாஜி கணேசனை வைத்து கே.பாலச்சந்தர் இயக்கிய எதிரொலி   கே.வி மகாதேவனின் இசையமைப்பில் வெளிவந்த திரைப்படம் ஆகும். சிவாஜி கணேசனுடன் எஸ்.எஸ்.ஆர், சிவகுமார். நாகேஸ் லக்சுமி, கே.ஆர். விஜயா முதலான நடித்திருந்தும் மர்மக்கதையை இத்திரைப்படம் கொண்டிருந்தமையால் வணிகரீதியாகத் தோல்வியைத் தழுவிய திரைப்படம் ஆகும்.  வெற்றி, தோல்வி ஆகிய இரு துருவங்களையும் ஒரே நேரத்தில் தமது திரையுலக வாழ்வில் பாலச்சந்தர் அனுபவித்தது உண்டு. 1971ஆம் ஆண்டு வெளியான ரவிச்சந்திரன்  மற்றும்  ஜெய்சங்கர்  நடித்து வெளிவந்த நான்கு சுவர்கள் படுதோல்வி அடைந்து, விமர்சன அளவிலும் ஒதுக்கப்பட்ட அதே கால கட்டத்தில் அவரது நூற்றுக்கு நூறு வெளியாகி பெரும் பாராட்டையும் வெற்றியையும் ஈட்டியது. இதற்குப் பின்னர், பாலச்சந்தர் இயக்கிய அடுத்த வண்ணப்படம் முற்றிலும் புதுமுகங்களையே கொண்டிருந்த பட்டினப் பிரவேசம் ஆகும். கண்ணதாசன் எழுதி எம்.எஸ்.விஸ்வநாதன் எழுதிய வான் நிலா நிலா அல்ல வாலிபம் நிலா என்னும் பாட்டு பாலச்சந்தருக்கு மட்டுமல்ல சிவச்சந்திரனுக்கு புகழைத் தேடித் தந்தன.
 
பாலச்சந்தர் கமலஹாசனை மையமாக வைத்து இயக்கிய படங்கள் பெரும் வெற்றிஐயு தந்த படங்கள். பாலச்சந்தரை நன்கு விளங்கி கொள்ளவும் அவரை சிறந்த இயக்குனராகத் திரையில் உலாவரச் செய்யவும் இத்திரைப்படங்கள் உதவின. அவள் ஒரு தொடர்கதை,மன்மத லீலை, நிழல் நிஜமாகிறது. அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம், அபூர்வராகங்கள், அவர்கள் முதலான திரைப்படங்கள் பெண்ணை அவள் குண அம்சத்தை, பெண்ணியப் பிரச்சினைகளைத் துல்லியமாகக் காட்டிய திரைபடங்கள் ஆகும். அவள் ஒரு தொடர்கதை மூலம் அறிமுகமான சுஜாதா முதல் படத்திலேயே குருவி தலையில் பனங்காய் வைத்தது போன்ற கனமான பாத்திரத்தை அநாயாசமாக வென்றெடுத்தார். பாலச்சந்தரின் ராசியான வெற்றி நாயகியான இவர் ரசிகர்களாலும் போற்றப்பட்டவர். 
 
சிறந்தகதையமசமிக்க படங்களை இயக்கிய பாலச்சந்தர் அனுபவி ராஜா அனுபவி, பூவா தலையாபாமா விஜயம், பொய்க்கால் குதிரை, தில்லு முல்லு  போன்ற நகைச்சுவைமிக்க படங்களையும் இயக்கினார். இத்திரைப்படங்கள் நகைச்சுவைப்படங்களாக மட்டுமன்றி சிறந்த கலையம்ச முள்ள வெற்றிப்படங்களாகவும் அமைந்தன.
 
பாலச்சந்தரின் படங்களில் பாடல்கள் ரசித்துக் கேட்ககூடியதாக இருக்கும். அவ்வகையில் நினைத்தாலே இனிக்கும் திரைப்படப்பாடல்கள் இன்றளவும் கேட்ககூடிய பாடல்கள். கமலஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடித்த கடைசிப் படமான நினைத்தாலே இனிக்கும் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. பாலசந்தர் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நிகழ்த்திய முதல் படமும் இதுவேயாகும்.இதேயபோன்று புதுபுது அர்த்தங்கள், ஜாதிமல்லி முதலான திரைப்படமும் பாடல்களுக்கு அழுத்தம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களாகும்.
 
பாலச்சந்தருகக்கு தேசியவிருதைப் பெற்று தந்த படங்களாக தண்ணீர் தண்ணீர்.  அச்சமில்லை அச்சமில்லை, ஒருவீடு இரு வாசல், ருத்ரவீணணா முதலானவற்றைக் கூறலாம். இதில் தமிழக அரசியலை அப்பட்டமாகப் பேசியபடங்களில் ஒன்று ‘அச்சமில்லை அச்சமில்லை’.ராஜேஸ் ‘சிறை’க்கு பின்னர் ஆழமான நடிப்பை வெளிப்படுத்திய திரைப்படம் இதுவாகும். இதேய போன்று 1981 இல் வெளியான கே. பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் திரைப்படம் கோமல் சுவாமிநாதன்  எழுதிய நாடகத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். சரிதாவின் குணச்சித்திர நடிப்பில் வெளியான இத்திரைப்படம் நெல்லைஅத்திபட்டிக் கிராமத்தின் தண்ணீர் பிரச்சனையை உணர்வுபூர்வமாகச் சித்திரித்தது. ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘தண்ணீர் தண்ணீர்’ இரு திரைப்படத்திலும் வட்டார மொழி செம்மையாகக் கையாளப்பட்டிருப்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதன்பின்னர் புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை, ஜாதிமல்லி, கல்கி போன்ற வெற்றிப் படங்களை தமிழில் இயக்கிய இவர் மரோசரித்ரா உள்ளிட்ட தெலுங்குப் படங்களையும் ஏக் துஜேகேலியே, ஜரா சி ஜிந்தகி, ஏக் நயீ பஹேலி போன்ற இந்திப்படங்களையும்  இயக்கியுள்ளார்.
 
சாஸ்திரிய சங்கீத ஞானங்கொண்ட பாலச்சந்தரின் படங்கள் பலவற்றில் இசை முக்கிய பங்கு வகிக்கிறது. இவர் இயக்கிய சிந்துபைரவி, உன்னால் முடியும் தம்பி, ருத்ரவீணா, ஜாதிமல்லி, புதுப்புது அர்த்தங்கள் முதலான படங்கள் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள் ஆகும். ஆயினும் பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த சிந்து பைரவி பிறவி இசைக்கலைஞனாகப் பாலச்சந்தரைக் கண்முன் நிறுத்தியது. இப்படத்தில் தன்னிகரில்லா இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த சுஹாசினி இந்திய அளவில் சிறந்த நடிகை விருதையும் பெற்றார். இளையராஜாவிற்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதினை இத்திரைப்படம் ஈட்டித் தந்தது. திரைப்படத்துறையில் ஐம்பது ஆண்டுகள் தன்னலமற்று உழைத்து ஓய்ந்த பாலச்சந்தர் இறுதியாக பார்த்தாலே பரவசம், பொய் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார்.
 
                            தமிழ்த் திரையுலகில் ரஜனிக்காந்த், சிரஞ்சீவி, சார்லி, பூர்ணம் ராதாரவி, எஸ்.வி.சேகர், திலீப், கவிஞர் வாலி, மதன் பாப், மேஜர் சுந்தரராஜன், டெல்லி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், நாசர், பிரகாஸ்ராஜ், விவேக், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விவேக், நடிகர்களையும் சரிதா, சுஜாதா, ஶ்ரீப்பிரியா, ஶ்ரீதேவி, ரம்யாகிருஷ்ணன். ஜெயசித்ரா, ஜெயசுதா கீதா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, சித்தாரா, ஶ்ரீவித்யா, யுவராணி, விசாலி கண்ணதாசன் முதலான பெண் நடிகைகளையும் அறிமுகப்படுத்தியவர். பாலச்சந்தரால் அறிமுகப் படுத்தப்பட்ட இவர்கள் இன்றும் நன்கு பேசப்படும் நடிகர்களாக உள்ளனர்.
 
தனது தனித்துவம் மிக்க கதை, வசனம், இயக்கத்தால் தமிழ்த் திரையுலகில் புதுமையை ஏற்படுத்திய இயக்குநர் சிகரம் மைய நீரோட்ட வணிக சினிமாவில் உள்ளார்ந்து இயங்கினாலும், சமரசமற்ற தன்மையில் அவரிடம் தனிச்சிறப்பான உத்திகள் பளிச்சிட்டது என்பது யாராலும் மறுக்கமுடியாதது. சமூக-அரசியல் புலத்தை கதைக்கருவாக கொண்ட இவரது திரைப்படங்கள் நடுத்தரவர்க்கத்தின் வாழ்க்கைக்கூடாக சமூக அவலத்தை சாடிநின்றன. 90களுக்குப் பிறகு கையளவு மனசு, ஜன்னல் போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கூடாக தமிழ் டெலி டிராம உலகில் உலகில் முழுநீளத் தமிழ்த் தொலைக்காட்சி தொடர் முறையை உருவாக்கிய பாலச்சந்தர் என்னும் ஆளுமை இவ்வுலகை விட்டு நீங்கினாலும் தமிழத்திரை உலகு உள்ளவரை அந்நட்சத்திரம் சிகரமாய் எழுந்து ஒளிர்ந்து கொண்டேயிருக்கும்.

Related

கட்டுரைகள் 2059143423081697476

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item