சட்டநாதன் கவிதைகள்


உள் ஒளி
.............................................
உள்ளே
இன்னும் உள்ளே,
உட்புகு.
குருத்திருளின்
அடர்த்தி குறைய,
ஒளி ஒரு பொட்டாய்
உள்ளிருக்கும்.
அதைத் தொடும் வரை
இயங்கு.
சடுதியில்
அவ்வொளியின் கூர்படும்.
கூர் படுமிடத்தில்
ஓராயிரம்
பூச்சிதறல்கள்.
பின்,
உச்சத்தில்
நீ பேரொளியுள்
சுருள்வாய்
சுடர்வாய்
பின்
நீ அதுவே ஆதல் காண்பாய்.

00

அவன்
காணாமல் போனபோது.

---------------------------------


அவன்
காணாமல் போனது
எனக்குத் தெரியும்.

நேற்று முன்தினம் தான்
பார்த்தேன்.
பின்னர்,
நான் அவனைக் காணவில்லை
ஆனால்
அன்றுவிடியலில்
அவனை
மீளவும் கண்டேன்.

ஊர் உள் ஒழுங்கையில்,
கிறவல் கல் மீது
அவனது
பாதங்கள் பரவும்ஒலி.
தேன் குடித்த மதர்ப்புடன்
சில
வண்ணத்துப் பூச்சிகளும்
அவன் கூட...
அது
அழகாக இருந்தது.

மதுர மொழியில்
தனதுகாதலை
அவன்
எனக்குச் சமர்ப்பித்தபோது,
முகை அவிழ்ந்து
நெகிழும்
மலரானேன்.
கண் அலர்த்தி
நிமிர்ந்த வேளை
அவனைக் காணவில்லை

நேற்று முன்தினம் தான்
அவன்
காணாமல் போனான்.
இன்று
வருவானென
என்
உள்மனம் ஒலிக்கிறது.

அவன் வரவுக்காகக்
காலம்
காத்திருக்கிறது.

நானும்தான்...!

00

நினைவில் இவை நெருடலாய்....
--------------------------------------------

இந்த இடத்தில் தான்
இருந்தது
எங்கள் வீடு.

சிதறிக் கிடக்கும் சிறு கற்களும்
சிறுகுவியலாய் தெற்கு மூலையில் கிடப்பதும்
அடையாளமா?
தென்னை மரம்- அருகாகக் கிணறு,
என அவை
இருந்த இடம் தெரியவில்லை.

அம்மா சுவாமிக்கு மலர் கொய்யும்
செவ்வரத்தைச்செடி,
சுற்றிவர இருந்த கிளைகள்
ஒடிந்து தொங்க,
நடு மரத்தில் ஏதோ வடுபட்டுச்
சரிந்து கிடக்கிறது.

பட்டுப் போன அம்மரத்தில்
ஒற்றைச் சிறு கிளையில்
பசுமை இருக்கிறது.
இன்னும்
சில இலைகள் ஈரக்கசிவுடன்.
பட்டுச் சிவப்பாய்
முகை நெகிழ்த்தும்
மொட்டொன்று
அக்கிளையில்.
ஒரு இலையின் ஓரத்தில்
வெள்ளையாய் சிறு எச்சம்
எது இட்டது!

குண்டுக் கண் பிலாக் கொட்டைக் குருவியா
அல்லது
கொண்டைக் கிளாத்தியா?
எங்கிருந்தோ அக்குருவி
இங்கு வந்திருத்தல்
சாத்தியமே.

பகைவன்
தறிகெட்டுப் படை நடத்திய எச்சங்கள்
இன்று இங்கு
ஏராளமாய்...
நுாற்றாண்டுகள் கடந்தும்
நினைவில் இவை நெருடலாய்...

இநத இடத்தில்தான்
இருந்தது
எங்கள் வீடு.


00

Related

கவிதைகள் 2817196029728959751

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item