சந்திபோஸ் சுதாகர்- நினைவுநாள்


சந்திரபோஸ் சுதாகர்(எஸ்போஸ், போஸ்நிஹாலே) படுகொலை செய்யப்பட்டு (16.04.2007) ஏழு ஆண்டுகளாகிவிட்டன. அவரை ஆகாயம் நினைவுகூருகின்றது.

எஸ்போஸின் கவிதை

இன்னும் சேகரிக்கப்படாத புறாவின் சிறகுகளும்

தெருவின் நிழலில் கரையும் நாங்களும்


வாழ்வின் எல்லா இழைகளையும் அறுத்துத்

தெருவில் இறக்கிவிட்டது காலம்:

முழுஇரவையும் ஒரு புள்ளியாக்கி

முகத்தில் அறைந்துபோயிற்றுப் புயலாய்.

எனதன்பே

காலத்தின் குரூரப் பற்களிடையிருந்து

உனது இதயத்தைக் காத்துக்கொள்ள உனக்கிருக்கும்

தருணத்தைக் கொண்டு

நீ போய்விடு.

இருளின் புள்ளியில் முடிவற்றுச் சுழலும் எனது வாழ்வின்

நிழலில்

நட்சத்திரச் சிறுதுண்டாயினும்

பட்டொளிர முடியாதிருப்பதாகவும்

என் மனமிடை படர்ந்த துயரின் வேர்களில்

ஒருபுள்ளி நீர்தானும் விட்டகல முடியாதிருப்பதாயும்

நீ வருத்தமுறக்கூடும்

அல்லது நான் அவ்வாறு நினைக்கிறேன்

எனக்கு நம்பிக்கையிருக்கிறது:

காலத்தின் முன்னே வலுவிழந்து கிடக்கும் எனது

விரல்களை

ஒளிரும் ஒரு தீக்குச்சியைப்போல

நீ எப்போதாவது கண்டெடுப்பாய்:

தெருவின் அலைவிலும் பசித்துயரிலும்

இன்னும் எரிந்துவிடாதிருக்கும் அந்த நம்பிக்கையைக்

காத்தபடி

எனதன்பே

நீ போய்விடு

எனது கனவுகள் கதியற்றலையும் காடுகளையும்

இந்தத் தெருக்களையும் விடுத்து

யுக நெருப்பின் சாம்பலிடை கிடக்கும்

அந்தப் பறவையை நோக்கி.

00

கடவுளைத் தின்ற நாள் மற்றும் ஒரு நாட்குறிப்பு


மழைக்காலம் தொடங்கிவிட்டது;
ஈசல்கள் பறக்கின்றன.
நண்பர்களே!
இருளுக்குள் பதுங்கியிருந்த அவற்றின் சிறகுகள்,
இன்னும் ஒளிவீசிக்கொண்டிருக்கும்
எமது கண்களை நோக்கி வருகின்றன.
ஈசல்கள்
இறக்கைகளால் எமது கண்களைக் குத்திக் கிழிக்கின்றன.
காற்று எதன் நிமித்தம் ஸ்தம்பித்துவிட்டது:
தவளைகள் ஏன் ஒலியெழுப்பவில்லை?
ஒளியற்ற இந்த இரவினுள்
சித்திரவதைகளால் எழும் கூக்குரல்கள்
மூழ்கடிக்கப்பட்டுவிட்டன.
தலைகீழாகத் தொங்கும் எமது உடல்களின் கண்களில்
ஈசல்கள் ஊர்கின்றன.
நாம் சிறைப்படும் முன்பிருந்த ஒரு காலத்தில்
தேவாலயங்களில்
கடவுளின் இரத்தத்தைக் குடித்தோம்;
அவர்தம் சரீரத்தைப் புசித்தோம்,
எவ்வளவு சந்தோசமானது
கடவுளரை நாங்கள் புசித்த அந்த நாள்!
எனினும் கடவுளர் பிறந்துவிடுகின்றனர் சடுதியில்.
நண்பர்களே!
சிறைக்கம்பிகளைக் காணாத எனது நண்பர்களே
மழைக்காலம் தொடங்கிவிட்டது
கடவுளர் நம்மைத் தண்டித்துவிட்டதாக நீங்கள் சொல்வீர்கள்
நாம் என்ன செய்ய!
அவர்களே எம்மைப் பணித்தனர்
இரத்தத்தைக் குடிக்குமாறும்
சரீரத்தைப் புசிக்குமாறும்.
இன்றோ இரத்தத்தைக் குடித்ததன் பேரிலும்
சரீரத்தைப் புசித்ததன் பேரிலும்
அள்ளிச் செல்லப்பட்டுவிட்டது எமது வாழ்வு
நீங்களே உணர்வீர்கள்,
அவர்களின் அந்நிய மொழிக்குள் வாழக் கிடைக்காத
உங்களது வாழ்க்கை பூக்களால் ஆனதென
முன்வினைச் செயலும்
கடவுளரின் மீதான அதீத நம்பிக்கையும்
உங்களைக் காப்பாற்றிவிட்டதென.
அதன் நிமித்தம்,
குருதிச் சிதறல்களும்
கைதிகளின் சுய வாழ்க்கைக் குறிப்புகளும்
காதல்களையும்
பெற்றோர்களையும்
மனைவியரையும்
பிள்ளைகளையும்
எழுதிய சொற்களால் நிறைந்த
உயர்ந்த மிகப் பழஞ்சுவர்களையுமுடைய
ஈசல்கள் வாழும் பாழடைந்த சிறைகளிலிருந்தும்
நீங்கள் தப்பிவிட்டீர்கள்.
எனினும் நாம் காண்கிறோம்,
இரவை அள்ளிச் செல்லும்
எமது ஓலத்தின் அடியிலிருந்து
நீங்கள் கடவுளரின் இரத்தத்தைக் குடிக்கவும்
அவர்தம் சரீரத்தைப் புசிக்கவும்
ஆன ஒரு நாளை.
ஈசல்கள் எமது விழிகளை முறித்து
தமது சிறகுகளின் இடுக்குகளில் செருகிவிட்டன.
எனினும் நாம் காண்கின்றோம்,
நீங்கள் கடவுளரின் இரத்தத்தைக் குடிக்கவும்
அவர்தம் இருதயத்தைப் புசிக்கவும்
ஆன ஒரு நாளை, நம்பிக்கை மிக்க அந்த நாளை.
00


Related

கவிதைகள் 269949357050800118

Post a Comment

 1. நண்பர்களே!
  சிறைக்கம்பிகளைக் காணாத எனது நண்பர்களே
  மழைக்காலம் தொடங்கிவிட்டது
  கடவுளர் நம்மைத் தண்டித்துவிட்டதாக நீங்கள் சொல்வீர்கள்
  நாம் என்ன செய்ய!
  அவர்களே எம்மைப் பணித்தனர்
  கவிஞர் போசை சந்திததில்லை. அவரது கவிதைகள் ஒன்று இரண்டு வாசித்த ஞாபகம். 1972ல் என்கவுண்டர் முயற்சியில் இருந்து தற்செயலாக ஒரு அமரிக்க தத்துவ ஆய்வாளர் என்னைக் காண வீட்டுக்கு வந்திருந்ததல் தப்பித்தேன். அதற்க்கு முன்னும் பின்னும் படுகொலை முயற்சிகளுக்கு தப்பித்த ஒருவன் என்கிற வகையில் கவிஞர் சந்திரபோஸ் பற்றிய செய்தி அதிர வைக்கிறது. உயிர் தப்பும்
  அதிஸ்ட்டம் ஒரு வலசைப் பறவை. எல்லாப் பருவங்கலிலும் அது எங்கள் நிலத்தில் இருப்பதில்லை. கவிஞர் சந்திரபோஸ் எனக்கு அஞ்சலி எழுதியிருக்க வேன்டும். அவரைப்பற்றி மேலும் அறிகிறபோது அவருக்கு நான் ஒரு அஞ்சலி எழுதவேனும்.

  ReplyDelete

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item