அ.முகமது சமீம்-என்றும் வாழும் பொக்கிசம் - சி.ரமேஷ்


கல்விமானும் பிரபல எழுத்தாளருமான முன்னாள் கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.சமீம் தமது எண்பத்தொராவது வயதில் காலமானர். பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்ட சமீம் கம்பளை ஸாஹிராக் கல்லூரியில் நீண்ட காலம் அதிபராகப் பணியாற்றினார். கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் உபஅதிபராகவும் கல்வி ஆலோசகராகவும் பணியாற்றியவர். பின்னர் இலங்கையின் கல்விப் பணிமனையில் மாகாண கல்விப்பணிப்பாளராகச் சேர்ந்த பின்னர் முதலாம் தர கல்விப்பணிப்பாளராக கடமையாற்றியவர். 48வது வயதில் ஓய்வு பெற்ற இவர் அ.முகமது சமீம் அதன் பின்னர் சவூதிய அரபியாவிலுள்ள ரியாத்தில் இயங்கும் இலங்கை சர்வதேச பாடசாலையின் அதிபராகவும் கொழும்பில் ஹெறோசர்வதேசக் கல்லூரியின் பணிப்பாளராகவும் செயலாற்றியவர். இவர் தமது ஆரம்பக் கல்வியை பதுளை சரஸ்வதி வித்தியாசாலையிலும் தம் உயர் கல்வியை கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிலும் கற்றார். தர்மதூதக் கல்லுரியில் சேர்ந்து ஆங்கிலக் கல்வியும் பயின்றார்.கல்வி கற்கும் காலப்பகுதியில் வராலாற்றுத்துறையில் ஆர்வகொண்டவராக விளங்கிய ஜனாப் சமீம் இலங்கை சர்வ கலாசாலையில் வரலாற்றை ஒரு பாடமாகத் தெரிவு செய்து வராலாற்றுத்துறையில் சிறப்புபட்டம் பெற்றார்.

1946ஆம் ஆண்டு சைவபரிபாலன சபை நடாத்திய பேச்சுப் போட்டியில் கனிஷ்ட பிரிவில் பங்குபற்றிய முகமது சமீமுக்கு விசேட பரிசு வழங்கப்பட்டது.பதுளை தமிழ் மாணவர் சங்கத்தில் இணைக்காரியதரிசியாக இருந்த வேளையில் முகமது சமீம் அவர்கள் தமிழ் கூட்டங்களையும் அரசியல் ஊர்வலங்களையும் நடாத்தியவர்.பதுளை தமிழ் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழிகாட்டியாகவும் விளங்கியவர். தர்மதூதக் கல்லுரியில் சேர்ந்து படித்த காலகட்டத்தில் “தர்மதூதன்” என்னும் சஞ்சிகையையும் இவர் நடாத்தினார்.முகுந்தன் என்னும் புனை பெயரில் சிறுகதைகளையும் எழுதினார்.இவர் எழுதிய திருடன் வீட்டைத்தான்” என்னும் கதை யாவராலும் சிலாகித்துப் பேசப்பட்ட கதை.1957களில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் பேராசிரியர் கா.சிவத்தம்பியுடன் இணைந்து பணியாற்றிய ஜனாப் முகமது சமீம் அக்காலப்பகுதியில் இலக்கியத்துறையில் முழு மூச்சாகத் தம்மை அர்பணித்து செயற்பட்டார். அக்காலத்தில் ஈழத்தில் வெளிவந்த சிறுசஞ்சிகையில் இலக்கிய கட்டுரைகளையும் வரலாற்றுக் கட்டுரைகளையும் எழுதினார்.குறிப்பாக புனைகதையாசிரியர் இளங்கீரன் நடாத்திய சிறுசஞ்சிகையில் வரலாற்றுக்கட்டுரைகளை  எழுதினார்.இலங்கை சாகித்திய மண்டலத் தெரிவுக்குழுவில் உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் இலங்கை முற்போக்குச் சங்கத்தில் அங்கத்துவம் வகித்த எழுத்தாளர்கள் பலரை பதுளைக்கு அழைத்து வரவழைத்து கூட்டங்களை நடாத்தினார்.இளங்கீரன், முருகையன், சில்லையூர் செல்வராஜன் என அனேகமானவர்கள் பதுளையிலும் பண்டாரவலளயிலும் நடந்த இலக்கிய கூட்டத்தில் பேசினர். 1968இல் பாரதியின் பேத்தியும் அழகிரிசாமியும் பதுளையில் நடந்த இலக்கியவிழாவில் முகமது சமீம் அவர்கள் பாரதியும் ஷெல்லியும் என்னும் தலைப்பில் பேசிய பேச்சு யாவராலும் இன்னும் சிறப்புற நினைவு கூரப்படுகிறது.

அ.முகமது சமீம் சிறுபான்மை சமூகம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்.இவருடைய ஒரு சிறுபான்மை பிரச்சினைகள் என்னும் நூல் நான்கு பாகங்களைக் கொண்டது.முஸ்லிங்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு ஆராயப் புகுந்த இந்நூல் இலங்கையிலுள்ள சகல சிறுபான்மை சமூகத்தினரின் பிரச்சினைகளையும் பரந்த அளவில் ஆராய்கிறது.

     இருபதாம் நூற்றாண்டின்  ஆரம்ப காலத்தில் சிறுபான்மையோர்  இனங்களின் நிலையைக் கூறப் புகுந்த இந்நூல் இலங்கை மலாயர்களின் நிலை, மேமன்கள் பேரர்களின் நிலை குறித்தும் விரிவாக ஆராய்கிறது. சிங்கள, பௌத்த உணர்வுகள் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரான வன்முறையாக மாறிய சூழ்நிலைகளை  இந்நூல் ஆழமாக ஆராய்கிறது. இலங்கையின் ஆட்சிமாற்றங்களும் பெரும்பான்மை கட்சிகளின் ஸ்திரநிலையும் காலத்துக்கு காலம் பெரும்பான்மை இனமக்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட அரசியல் திட்டங்களும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை எவ்வாறு பறித்தன என்பதையும் இந்நூல் நுண்ணாய்வு செய்கிறது.இலங்கை வரலாற்றையும் அதன் போக்குகளையும் சுட்டிநிற்கும் இந்நூல் பௌத்த மதவாதிகளாலும் அரசியல் தலைவர்களாலும் சிறுபான்மை சமூகத்தினரக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளையும் இந்நூல் துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கிறது.

ஒரு சிறுபான்மை இனமாக வாழும் இலங்கை முஸ்லிங்களின் வரலாற்றைினையும் அவர்கள் எதிர்கொண்ட அரசியற் பிரச்சினைகளையும் கூறிய சமீம் அவர்களின் பண்பாட்டுக் கலாசார வாழ்வியலையும் நூலுருவாக்கம் செய்தார்.அவ்வகையில் வெளிவந்த நூல்களாக இஸ்லாமிய கலாசாரம், இலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள் marriage Customs of the muslims of sri lanka  முதலானவைற்றைக் கூறலாம்.  
                                   
  வரலாற்றினைப்போல் தமிழிலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும் ஆழ்ந்த தேடல் மிக்கவராகவும் காணப்பட்டார்.அ.முகமது சமீமின் படைப்பாளிகளும் ஆய்வாளர்களும், எனது இலக்கியத் தேடல்கள் என்னும் நூல்கள் இதற்குச் சான்றாக அமைகின்றன. இவரின் படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் என்னும் நூல் கவிஞர்கள், சிறுகதை ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் என மூன்று பகுதிகளைக் கொண்டது.கவிஞர்கள் என்னும் பகுதியில் ஈழத்து கவிஞர்கள் சில்லையூர் செல்வராஜன், ஈழத்துக்கவிமணி சுபைர், அன்பு முகைதீன் முதலான கவிஞர்கள் விரிவாக ஆராயப்படுகின்றனர். சில்லையூர் செல்வராஜன் ஈழத்து தமிழ்மக்களால் மறக்கப்பட்ட வேளையில் அவரின் கவிதைகள் குறித்து “சில்லையூர் செல்வராசனின் கவிதைகள் ஒரு ரசிகன் பார்வையில்”, “சில்லையூர் செல்வராசனின் வாழ்க்கைத்தத்துவங்கள்”, “சில்லையூர் செல்வராசனின் தத்துவக்கண்ணோட்டம்” என்னும் மூன்று கட்டுரைகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 இந்நூலில் இடம்பெறும் ‘சிறுகதை ஆசிரியர்கள்’ என்னும் பகுதி ஈழத்து எழுத்தாளர்கள் என்.கே.ரகுநாதன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் குறித்தும் தமிழக எழுத்தாளர் புதுமைபித்தன் குறித்தும் ஆராய்கிறது.
 பாடசாலைப்பருவத்திலேயே மார்க்சியத்திலே ஈடுபாடு கொண்ட இவர் இலங்கைப்பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற போது சக மாணவராக இருந்த பேராசிரியர் க.கைலாசபதியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.அவருக்கும் இவருக்குமிடையில் இருந்த நெருங்கிய தொடர்பின் விளைவால் க.கைலாசபதியின் நூல்களை இவர் நுணுகிப் படிக்க நேர்ந்தது. இதன் விளைவே “கைலாசபதியும் முற்போக்கு இலக்கியமும்”, “கைலாசபதியின் ‘வீரயுகம்’ பற்றிய ஓர் ஆய்வு” என்னும் கட்டுரைகள்.

 இதேய போன்று பேராசிரியர் கா.சிவத்தம்பியுடன் 1952ஆம் ஆண்டு கொழும்பு ஸாகிராக் கல்லூரியில் H.S.C வகுப்பில் ஒன்றாகப் படித்த அ.முகமது சமீம் பல்கலைக்கழகத்த்திலும் அவருடன் ஒரேகாலப்பகுதியில் கல்வி பயின்றார்.பின்னர் சர்வகலாசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த பின்னர் ஸாகிராக் கல்லூரிக்கு1957 இல் முகமது சமீம் நுழைந்த போது அதே கல்லூரியில் கா.சிவத்தம்பி அவர்களும் ஆசிரியராகப் பணியாற்றினார்.அதே கல்லூரியில் ஏலவே ஆசிரியராக இருந்த க.கைலாசபதி  இதேய காலப்பகுதியில் தினகரன் பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றச் சென்றார்.இக்காலப்பகுதியில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் யாவரும் இணைந்து பணியாற்றினர்.1958இல் ஸாகிராவில் உப அதிபராக பணியாற்றத் தொடங்கிய சமீம் அக்காலப்பகுதியில் கா.சிவத்தம்பி அவர்களுடன் இணைந்து நிழல்கள்’ நாடகத்தை அரங்கேற்றினார். இப்சன் எழுதிய Ghosts என்ற நாடகமே தமிழில் சீனிவாசனால் நிழல்கள் என்ற பெயரில் மொழிபெயர்க்கபட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.இந்நட்பின் நிமித்தம் உருவான கட்டுரைகளே “படைப்பாளிகளும் ஆய்வாளர்களும்” நூலில் இடம்பெறும் “பேராசிரியர் சிவத்தம்பியின் பண்டைய தமிழ்ச் சமூகங்கள் பற்றிய ஆய்வு”, “பேராசிரியர் சிவத்தம்பியின் பன்முக ஆய்வு” என்னும் கட்டுரைகள்.முகமது சமீம் அவர்கள் கா.சிவத்தம்பி குறித்து மே2007 இல் வெளிவந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பவள மலரில் “சிவத்தம்பியும் நானும் சில நினைவுகள்” என்னும் கட்டுரையும் எழுதியுள்ளார்.

“படைப்பாளிகளும் ஆய்வாளர்களும்” நூலில் இடம்பெறும் இறுதிக்கட்டுரை “இர.சிவலிங்கம் – மலையக மக்களின் மறுலர்ச்சித் தலைவன்”.ஹட்டனிலுள்ள ஹைலண்டஸ் கல்லூரியின் ஆசிரியராக இருந்த இர.சிவலிங்கம் மலைநாட்டு மக்களின் வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்து உழைத்தவர்களில் ஒருவர்.இடதுசாரிக் கொள்கைளில் நம்பிக்கை கொண்ட இவர் மலையக மக்களின் சமூக முன்னேற்றத்துக்காக அருந் தொண்டாற்றியவர்.எட்டாம் தரத்துடன் மலையகத்தில் ஆசிரியர்கள் உள்வாங்கப்படுவதையும் அதனால் மலையகக் கல்விச்சமூகம் பாதிப்புறுவதையும் அதை தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் அரசியல்த் தலைவர்களால் தடுக்கப்பட்டதையும் இர.சிவலிங்கத்தின் ஆசிரியரின் அரும் பணிக்கூடாக நினைவுகூருகிறார். அ.முகமது சமீமால் எழுதப்பட்ட இந்நூல் தமிழ் மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த ஈடுபாட்டுக்குச் சான்றாக அமைகிறது.

இதேய போன்று ஈழத்து இலக்கியத்தையும் அதன் இலக்கிய கர்த்தாக்களையும் நினைவு கூரும் நூலே “ எனது இலக்கியத்தேடல்” என்னும் நூலாகும். “கைலாசபதியும் முற்போக்கு இலக்கிய இயக்கமும்” என்னும் கட்டுரை முதல் “தேசிய இலக்கியம் இனப்புரிந்துணர்விற்கு முற்போக்காளர் முன் வைத்த யோசனை” ஈறாக பதினேழு கட்டுரைகளின் தொகுப்பாகும். இந்நூலில் விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்ட நூலாசிரியர் பலர் கட்டுரையாசிரியருடன் நேரடியான பரீட்சியத்துக்குள்ளானவர்கள்.மார்க்சியக் கண்ணோட்டத்தில் இலக்கியங் களை விமர்சிக்கும் இந்நூல் முற்போக்கு இலக்கிய குழுவில் அங்கம் வகித்த நீர்வை பொன்னையன், என்கே ரகுநாதன், கைலாசபதியின் எழுத்துக்களை விமர்சனம் செய்கிறது.இந்நூலில் இடம்பெறும் ‘எழுபதுகளில் இலங்கையின் சிறுகதை வளர்ச்சி’, ‘இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் இன்றைய பரிணாம வளர்ச்சி 90களில் கவிதை’ முதலான கட்டுரைகளும் இவருக்கு தமிழிலக்கியத்தில் இருந்த பிடிப்பையும் ஆழ்ந்த வாசிப்பையும் எடுத்துரைக்கின்றன.

வரலாற்றுக்கும் இலக்கியத்துக்கும் பணிசெய்த அ.முகமது சமீம் தமிழ் முஸ்லிம் எனப் பேதம் பாராட்டாதவர்.மனிதரை மனிதர் என மதித்து வாழ்ந்தவர்.நேர்மையாக வாழ்ந்த கல்விப்பெருமானார் 18.04.2014 அன்று பெரிய வெள்ளியன்று இவ்வுலக வாழ்வை நீத்தார். நல்லாசிரியனாய், நல்லதிகாரியாய் நல்மனிதனாய்  நற்பண்பாளனாய் விளங்கிய முகமது சமீமின் இழப்பு தமிழிலக்கியத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் பேரிழப்பென்றால் அது மிகையில்லை.


Related

கட்டுரைகள் 2905413635433745421

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item