சந்திரபோஸ் சுதாகரின் கவிதைகள் ஒரு பார்வை -- சாங்கிருத்தியன்அரூபமான நுண்ணுணர்வின் தளத்தில் கட்டமைக்கப்பட்டு மொழியின் அதீத சாத்தியப்பாடுகளைக் கொண்டியங்கும் நவீன கவிதை ஈழத்தில் கால்நூற்றாண்டு காலமாய் போரின் குரூர முகங்களையும், மனித வாழ்வின் அவலங்களையும் பெரும்பான்மையாய் பாடுவதாக அமைந்தது. அசாதார சூழலில் நிகழ்காலப் பயணியாய் இருந்து ஈழத்தின் வன்முறைகளைப் பதிவு செய்த சந்திரபோஸ் சுதாகர் மறைந்து ஓராண்டு மறைந்துவிட்ட போதிலும் ஸ்தூல வெளியில் நவீன கவிதையின் அதீத புனைவின் சிறப்பு பிரதியாய் தன்னை முன்நிறுத்தி ஆழவேரூன்றி அழியா சுவடு பதிக்கிறது. செறிவான மொழிப்பிரயோகம், மிகையற்ற உயிரோட்டமான காட்சிப்படுத்தல், குறியீட்டு குழுமங்கள் ஊடான பிரக்ஞை பு+ர்வமான முன்வைப்பு என சந்திரபோஸ் சுதாகரின் கவிதைப்புலம் கட்டமைகிறது. 1990 களில் கவிஞராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட எஸ் போஸ், நிலம், தமிழ், உலகம் எனும் சஞ்சிகைகளின் இதழாசிரியராகவும் (வுயஅடைரடயமயஅ - உழ - நுனவைழச) சிறுகதை ஆசிரியராகவும், பத்திரிகை ஆசிரியராகவும் பல்வேறு தளங்களில் இயங்கினார். ஈழத்தின் சமூக இயக்கத்தின் புறவெளிப்பாடுகளை, தோலுரித்துக்காட்டும் போஸின் கவிதைகள் வெளிச்சம், ஈழநாதம், வீரகேசரி, சரிநிகர், இன்னுமொரு காலமடி, யுகம் மாறும், காலச்சுவடு, மூன்றாவது மனிதன், தமிழ் உலகம், நிலம், தடம் போன்ற பல்வேறு பத்திhpகைகள், தொகுப்புக்கள், சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. வேற்றாகி நின்ற வெளி, செம்மணி, வெளிச்சம் கவிதைகள், காலச்சுவடு கவிதைகள் என்னும் கவிதைத் தொகுப்புக்களும் சந்திரபோஸ் சுதாகாின் கவிதைகளை உள்வாங்கி வெளிவந்தன.

யதார்த்த வாழ்வில் போரினால் புறக்கணிக்கப்பட்டு அஞ்சி ஓடுங்கி நடுங்கி வாழும் மனிதனின் உள்ளத்து உணா்வுகளை படிமத்துக்கூடாகக் காட்சிப்படுத்தும் நிகழ்வு பற்றிய இரண்டு கவிதைகள் “வேறாக்கி நின்ற வெளி” என்னும் கவிதைத்தொகுப்பில் வெளிவந்தது. இருப்பியலின் அச்சுறுத்தல், எலும்புகளின் நெடி, ஆயுத முனையில் கல்வியும் இருள், வதைகளின் சுமைகளை சுமந்து நிற்கும் காலமென கொடிய யுத்தத்தையும் அது ஏற்படுத்திய ரணங்களின் வடுக்களையும் பதிவு செய்யும் இக்கவிதை ஈழத்தின் நடப்பியல் சாh; இயங்கியலைக் கண்முன் காட்சிப்படுத்துகிறது.
திரை மறைவுக்குள் புதையுண்டிருக்கும் மனித வாழ்வின் அவலத்தையும் வாழ்தல் குறித்தான நம்பிக்கையின்மையையும்
“யாரோ பிடுங்கி நதியில் கரைத்த சுவடுகளில்
 மழை தனது துயரை நட்டு வைத்திருக்கிறது இன்னும்” என்னும் வரிகளில் புறவெளிக்காட்சிப் படிமம் வெகுதுல்லியமாக வெளிப்படுகின்றது.

முள்வெளிக்குள் சிக்குண்டு முகம் தொலைந்த சமூகம் ஒன்றின் துயர்வின் பகிர்வே ‘செம்மணித் தொகுப்பில்’ இடம்பெறும் ‘முள்வெளி’ எனும் கவிதையாகும். ஆதி மனிதனின் மரண நிகழ்வுக்கூடாக தொன்மத்தின் சிதைவை முன்மொழியும் இக்கவிதை வெளிக்களக் காட்சிகளுக்கூடாக நிகழ்கால யதார்த்தத்தை பிரக்ஞை பு+ர்வமாக பதிவு செய்கிறது.
இருப்பிழந்து இடம்பெயர்ந்து வந்தவேளையில் உறவுகளைப் பறிகொடுத்த ஆத்மாவொன்றின் வேதனைக் குரலே வெளிச்சம் தொகுப்பில் இடம்பெறும் ‘புதைக்கப்பட்ட வைரங்கள்’ என்னும் கவிதை.
“பிள்ளையைப் புதைத்தாயிற்று
பெத்தவள்
சன்னியில் செத்துப்போனாள்
எனது நிலம்
எனது சிலுவை
எனது சுடலை
எடுத்து வந்தவை எதுவுமே இல்லை.”
என இழப்பின் துயர் மனதை நெருடும் வகையில் உயிர்ப்புடன் காட்சிப்படுத்தப்படுகிறது. முறிந்து நகரும் சொற்சேர்க்கையால் நுட்பமான மொழி இயைபுக்குள் கட்டமையும் இக்கவிதை மொழியின் புதிய புதிய சாத்தியப்பாடுகளின் ஊடாக நுகர்வோன் மனதில் அதீத அழுத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நிழல் முறிந்த மரம், கூரையற்ற மனிதனின் மூன்றாவது கதவு, கனவுகளின் அழுகையொலி, எஸ்போஸ் கவிதை 1, 2, 3 போன்ற கவிதைகள் ‘மூன்றாவது மனிதன்’ இதழ் தோறும் வெளிவந்த கவிதைகளாகும்.
விடைகளை உள்வாங்கி வினாக்களின் தொகுப்புகளின் ஊடாக கட்டமைக்கப்படும் ‘நிழல் முறிந்த மரம்’ சாமியாடல் என்னும் சடங்கினை குறியீடாகக் கொண்டு புறந்தள்ளிய மனித வாழ்வை பேசுகிறது. இனத்தின் முரண் இணைவில் சாத்தியமின்மையை
‘தொட்டுப் பார்க்கும் தூரம் கூட இல்லை இருவருக்கும்  - எனினும்
ஒரு தெருவில் அவர்களும்
இன்னொன்றில் இவர்களுமாய்
நீள்கிறது எமக்கான தூரம்”
என்னும் வரிகள் தெளிவாக உணர்த்தி நிற்கிறது. சாவின் அமைதி பிணமெரியும் தேசம், அழியுண்ட கனவுகளின் வெறுமையில் உழலும் மனிதக் கூடுகளின் துயரம், சாபத்தின் எல்லைகளை உள்வாங்கி நகரும் காலம் என விரியும் ‘கனவுகளின் அழுகையொலி’ என்னும் கவிதை யதார்த்த நடப்பியல்வுக்கூடாக ஈழத்தின் இருப்பியலின் இயங்கியலைக் காட்சிப்படுத்துகிறது.
“மரணம் தூங்கும் சுவர்களில்
இன்னும் விழித்துக்கொண்டிருக்கிறது
காலப் பேய் நிழல்”
என படிமத்திற்கூடாக எழும் கவிதை “அழியுண்ட கனவுகளின் அழுகைச்சக்திக்குள் போய்விழுகிறது சிறகிழந்த பறவைகளின் வாழ்வு” என வன்மங்களுக்குள் சிக்கி உழலும் வாழ்வின் யதார்த்தத்தை காட்சிப் படிமமாக முன்மொழிகிறது.

‘கூரையற்ற மனிதனின் மூன்றாவது கதவு’ என்னும் கவிதை சாக்கடலின் உயிரோட்டமான விம்பத்தையும், அவ்விம்பத்தின் உடைவுக்கூடாக மனித வாழ்வின் நிதர்சனமற்ற இருப்பையும் எடுத்துரைக்கிறது.
2002 இல் வெளிச்சம் இதழில் தலைப்பின்றி பிரசுரமான இக்கவிதை பெப்ரவரி - மார்ச் 2003 மூன்றாவது மனிதன் இதழில் சிற்சில மாற்றங்களுடன் பிரசுரமானது.
சாவின் துயரம்
“நாம் கடவுளைக் காணவில்லையாயினும்
எம்முன் கடவுளாய் ஒளிர்கிறது”
அழகியல் கூடான சொல்லிணைவுகளின் மூலம் இயங்கும் இக்கவிதை சாவு குறித்தான பிரக்ஞை பு+ர்வமான முன் வைப்பின் மூலம் சாவை சாக்கடவுளின் விம்பமாய் முன்னிறுத்தி வாழ்வின் அபத்தத்தை அங்கதமாய்க் காட்சிப்படுத்தப்படுகிது.

பல கவிதைகளின் கூட்டிணைப்பே ‘எஸ்போஸ் கவிதை’ ஆகும். 182 நீளமுடைய இக்கவிதை ‘தவிர’ இதழ் ஒன்றில் வெளியான கவிதை ஒன்றின் சில பகுதிகளைக் கொண்டும் 19.11.2006 இல் வீரகேசரியின் உயிர் எழுத்துப் பகுதியில் வெளியான ‘மரணம் பற்றிய சிறு குறிப்பு’ என்னும் கவிதையை இணைத்தும் வரையப்பட்டுள்ளது. இவ் இணைப்பு சரளமான கவிதையோட்டத்தில் எவ்வித பங்கத்தையும் ஏற்படுத்தவில்லை. யுத்தக் கவிதைகளின் பிரசன்னத்தையும் அது அவாவி நிற்கும் வன்முறையின் அழிவுகளையும் எதிர்காலத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிநிற்கும் இக்கவிதை பொதுத் தர்க்கம் சார்ந்த புறவயத் தன்மையுடன் வரையறுத்து மட்டிடமுடியா விரிந்த தளத்தில் தன்னை கட்டமைத்துக்கொள்கிறது.
பரஸ்பர புரிந்துணர்வின்மையும் அதன் நிமித்தம் விளையும் துன்பியல் நிகழ்வையும் படிமத்துக்கூடாகக் காட்சிப்படுத்தும் ‘இரங்கற்பா’ என்னும் கவிதை பிரத்தியேகமான மொழிக்கட்டுமானத்துக்குள் தன்னை வடிவமைத்துக்கொள்கிறது.
“நீ விரும்பாத எனது சிறகுகள் ஒரு
வேட்டை நாயை
வளர்த்து விட்டிருக்கின்றன உன்னுள்...”
(தமிழ் உலகம் - ஜூலை 2005)
பத்மநாபஐயரின் ‘யுகம் மாறும்’ இலக்கியத் தொகுப்பில் இடம்பெற்ற ‘வலை’ என்னும் கவிதை சிலந்தி என்னும் கட்புப்படிமக் குறியீட்டுக்கூடாக பேரினவாத சக்திகளின் ஆக்கிரமிப்புக்குள் அகப்பட்டு சோபையிழந்து சிதைந்த தேசத்தை பாடி நிற்கிறது. ஐயரின் பிறிதொரு இலக்கியத் தொகுப்பான ‘இன்னுமொரு காலடி’ யில் இடம்பெறும். ‘சுகித்தல்’ என்னும் கவிதை வன்முறைக்குள் சிக்கி உழன்று தவிக்கும் ஆன்மா அதற்குள் வாழ தன்னை தயார்படுத்திக் கொள்ளலை வெளியுலகிற்கு உணர்த்தி நிற்கிறது. போரின் அபத்தங்களுக்குள் இயங்கும் யதார்த்த இயங்கியல் உணர்வுகளின் ஸ்தூலமான இவ்விரு கவிதைகளிலும் வெளிக்கொணரப்படுகிறது.
வாழ்வின் முடிவுத்தூரத்தில் கடைசிப் பயணியின் நிகழ் பற்றிய பதிவின் குறிப்புக்களே வெளிச்சம் பவள இதழில் பிரசுரமான ‘கடைசிப் பயணியின் குறிப்புக்கள்’ என்னும் கவிதையாகும்.
“ எனது இன்றைய நாட்களோ
துயரமும் கண்ணீருமானவை
வேதனை துலங்கும் இந்நாளில்
குயில்கள் இறந்து கிடக்கின்றன.
ஆட்டு மந்தைகளின் புற்களால் நிறைந்த தோட்டம்
சிதைந்து போயிற்று
மனிதர் வீதிக்கு வருகிறார்கள் இல்லை
உள்ளே
நெஞ்சு வெடிக்கும் துயருடன்
குடில்கள் துலுங்குகின்றன”
போர் விழுங்கிய பொழுதுகள் நிகழ்வின் சாட்சிக்கூடாக சிதைவுகளின் ஒழுங்கமைப்பில் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் இக்கவிதை “வழியனுப்ப யாரும் வராத இந்த பயணத்தில் நான் எனது வழிகளையும் இரண்டு துளி காதலையும் மட்டுமே உணர்ந்தேன்” என தன் உணர்வுத் தடத்தில் தன் பிரதியை முடித்துக்கொள்கிறது.

சந்திரபோஸ் சுதாகரின் பல கவிதைகளுக்கு களம் அமைத்துக்கொடுத்த சஞ்சிகையாக காலச்சுவட்டைக் கூறலாம். சுயம் (இதழ் 27 அக் - டிசெ 99) ஒளி சுடர்ந்த என் மனமும் நெருப்பெரிந்த உன் மனமும் (இதழ் 29 ஏப் - ஜுன் 2000) இன்னும் சேகரிக்கப்படாத புறாவின் சிறகுகளும் தெருவின் நிழலில் கரையும் நாங்களும் (இதழ் 32 நவ - டிசம்பர் 2000) கடவுளைத் தின்ற நாள் மற்றும் ஒரு நாட்குறிப்பு (இதழ் 65, மே 2005 போன்ற கவிதைகள் காலச்சுவட்டில் வெளிவந்தவையாகும்.

ஈழத்தில் பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டு சுயம் இழந்து முகம் தேடும் மனிதனின் ஆத்மாவின் குரலே ‘சுயம்’ என்னும் கவிதையாகும். பேச்சு சுதந்திரமற்ற ஈழத்தின் தார்மீக நிகழ்காலப் பெருவெளியை தன் உணர்வுத் தளத்தில் இருந்து தூலக்காட்சி கருப் பொருண்மைக்கூடாக இக்கவிதை வெளிப்படுத்துகிறது.

கடவுளைத் தின்ற நாள் மற்றும் ஒரு நாட்குறிப்பு என்னும் கவிதை தொன்மம் சார் படிமக் குறியீட்டு உத்திக்கூடாக அனுபவம்சார் நிகழ்வின் பிரதியாக தன்னை முன்னிறுத்துகிறது. இரவை அள்ளிச் செல்லும் மரண ஓலங்கள் குருதி நனைக்கும் சிறைக்கூண்டு அதில் தலைகீழாய் தொங்கும் மனித உடல்கள் சரீரத்தை புசிக்கும் காலம் என மனித வகைகளின் குரூரம் கவிதையெங்கும் வியாபித்து நிற்கிறது. ஈசல் என்னும் வன்முறையின் குறியீட்டுப்படி மத்துக்கூடாக கட்டமைக்கப்படும் இக்கவிதை தேவாலயத்தில் பகிரப்படும் அப்பமும், திராட்சை ரசமும் மனித சரீரத்தினதும் குருதியினதும் நிழல் பிரதிமையின் படிமமாகத் தன்னை வெளிப்படுத்தி நிகழ்வின் விளைவு, செயல் என்னும் மையச்சரட்டில் இயங்குகிறது.

எஸ்போஸின் உள்ளுணர்வுத் தளத்தில் இயங்கும் அகம் சார் கவிதைகள் காதலையும் அது நுண்ணுணர்வின் உள்வெளியில் ஏற்படுத்தும் அதீத பிரேமையையும் ரொமாண்டிச மற்றும் நடைமுறை வாழ்வுக்கூடாக காட்சிப்படுத்தப்படுகிறது. ஈழத்தில் அகவுணர்வுத் தளத்தில் எழும் பெரும்பாலான கவிதைகள் போரின் அனர்தத்துக்குள் சிக்கி கைகூடாததாய்ப்போன காதலையே பாடுபொருளாய் கொண்டமைந்தன. இவ்வகையில் அகம்சார் தன்னுணர்வுத் தளத்தில் எழும் எஸ்போஸின் கவிதைகளும் பிரிவாற்றாமை, காத்திருப்பு இறுதி விடைபெறுதல் எனத் துன்பியல் சார் உணர்வுக்கூடாகவே கட்டமைக்கப்பட்டுள்ளன.
அன்பின் மென் உணர்வுகளின் இழைகளில் கட்டுறும் ‘ஒளி சுடர்ந்த என் மனமும்’ நெருப்பெரிந்த உன் மனமும் என்ற கவிதை அகவெளியில் பெண் விம்பம் ஏற்படுத்தும் அதிர்வை கால காட்சிப் படிமங்கள் ஊடாக அலங்காரமற்ற சொற் சேர்க்கையாய் தன்னை முன்னிறுத்தி நிற்கிறது.

“உனது முகம் பற்றிய படிமம்
உனது புன்னகையாய் வண்ணத்துப்பு+ச்சி ஒன்றின்
சிறகைப் போல என்னுள் படபடக்கிறது”
அகவெளியின் நுண்ணுணர்வில் விம்பம் ஏற்படுத்தும் சலனம் புறம் சார் பிரதிமைகளுக்கூடாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.

‘இன்னும் சேகரிக்கப்படாத புறாவின் சிறகுகளும் தெருவின் நிழலில் கரையும் நாங்களும்’ என்னும் கவிதை இயல்பு நிலை குன்றிய வாழ்வின் குரூரத்தையும் அதன் நிமித்தம் நிராகரிக்கப்படும் காதலையும் அலங்காரத்தன்மையற்று நடப்பியல்சார் வாழ்வுக்கூடாக காட்சிப்படுத்துகிறது. இழை அறுந்து வாழ்விலிருந்து விடுபடலும் ஒன்றிணைந்த உள்ளங்கள் வாழமுடியாத துர்ப்பாக்கியமும் துன்பியல்சார் நிகழ்வுக்கூடாக விவரணமற்று எளிமையாக தன் உணர்வுத் தளத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது.
வாழ்தல் குறித்தலான நம்பிக்கைகள் தகர்ந்து தேய்ந்து முற்றும் பெறும் கணத்தில் உயிர் ஒன்றின் மரண சாசனமாகத் தன்னை ஆவணப்படுத்தும் ‘சூரியனை கவர்ந்து சென்ற மிருகம்’ என்னும் கவிதை ‘நிலம்’ மூன்றாவது இதழில் பிரசுரமானது. கைது செய்யப்பட்டதன் பின்னரோ அல்லது கடத்தப்பட்டதன் பின்னரோ வாழ்வு நிச்சயமற்றது என்பதை உயிர்த்துடிப்புடன் தோழனுக்கு உரைக்கும் இக்கவிதை அகம் சார்ந்த மென்ணுணர்வுத் தளத்தில் இயங்கும் காதலை நடப்பியலுக்கூடாக பிறிதொரு தளத்தில் முன்நிறுத்துகிறது.
நுண்ணிய மனவெளியில் பெண் உணர்வு ஏற்படுத்தும் அக உணர்வுகளின் சலனமே ‘தடம்’ இதழில் பிரசுரமான ‘வெளி’ ‘உனது குரல் பற்றிய ரகஸியத்தில் மிதக்கும் கடல்’ என்னும் கவிதைகளாகும்.
“எங்கிருந்து தொடங்கப் போகின்றன உனது வார்த்தைகள்
சமூகத்தின் முடிவற்ற நீட்சியில் இருந்தா
உடைந்து சிதறிய ஈசல்களின் சிறகுகளில் இருந்தா
காடுகளின் மீது ஓயாது பாடிக்கொண்டிருக்கும்
துணையற்ற குயில்களின் இருண்ட குரல்களில் இருந்தா”
முடிவற்ற நீட்சியின் பெண் குரல் பலிதரும் துயரத்தின் ஆதார சுருதி என்பதை ‘வெளி’ என்னும் கவிதை தில்லியமாக வெளிப்படுத்துகிறது.
வாழ்வு குறித்ததான வெறுமையும் காதல் குறித்ததான நம்பிக்கையின்மையும் ‘உனது குரல் பற்றிய ரகஸியத்தில் மிதக்கும் கடல்’ என்னும் கவிதைகளில் நுட்பமாக வெளிப்படுத்தப்படுகிறது. துன்புற்றுத் துவண்டுபோய் முகம் தொலைந்த அகவெளியின் காட்சிப்படிமம்.
“எல்லாக் கனவுகளும் சிதறி உடைய
என் மேல் கவிந்த இரவின் சாயலில்
சிறு புள்ளியுமற்றுப் போனேன் நான்”
என்னும் வரிகளில் முழுமைத் தன்மையுடன் காட்டுகிறது.

மொழிச் சிக்கனமும் ஒத்திசைவும், செய்நேர்த்தியும் கொண்ட எஸ்போஸின் அகவெளி பிரக்ஞை பு+ர்வமான அனுபவ கருத்துருவின் திருந்திய வடிவமாகும். ஈழத்தின் வன்முறையின் குரூரத்தை சமூகத்தின் இருப்பியலூடாக அதீத புனைவற்று வெளிப்படுத்தும் இக் கவிதைகள் ஒரு மறை பிரதியாய் நின்று தன்னைக் கட்டுரைக்காது அனுபவத்தின் நேரடிப் பிரதியாய் தன்னை முன்நிறுத்தி கட்டுரைக்கிறது.              

Related

கட்டுரைகள் 1587663801388704217

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item